சின்னமணிக்கு பாம்புக்கடி
முதல் தெருவில் உள்ள மணியக்காரர் வீட்டில் ஒரே பரபரப்பாயும் பதட்டமாகவும் இருந்தனர். தெருவில் உள்ள வீட்டினர் அனைவரும் ஒவ்வொருவராய் வந்து பார்த்து விட்டு சோகமாய் சென்றனர். சிலர் அங்கேயே அமர்ந்து ஆசுவாசமாய் விசாரித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது இரண்டு சக்கர இயந்திர வாகனம் வந்து நின்றது அதில் இருந்து இறங்கிய வாலிபன் உரக்கக் கூவினான்.
கீர்த்தி… கீர்த்தி…. என்று
உள்ளே இருந்து ஓடி வந்த நபர் "என்னண்ண …. " என்றவாறே வாலிபன் அருகில் வந்தான்.
மருத்துவர பார்த்தேன் … அவர் சீக்கிரம் மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு வர சொல்றாரு… அப்பா எங்க இருக்கிறாரு என்று வாலிபன் கேட்டான்.
அதற்கு கீர்த்தி " எதோ நாட்டு மருந்து இருக்குதாம் அத பறிச்சிக்கிட்டு வந்து சாறு கொடுத்தா மூச்சி இறைப்பதும் கால் இழுப்பதும் குறையும்னு ஏரிப் பக்கம் போயிருக்கங்க சிவா அண்ணா" என்றான்.
"டேய்…. சீக்கிரம் மருத்துவர் கிட்ட போனதான் உயிர் பிழைக்க வைக்க முடியும்" என்று சிவா சத்தமாய் கத்தினான்.
அப்போது " சிவக்குமார். … சித்தப்பாவுக்கு சீக்கிரம் போன் போடு, நீயும் கீர்த்தியும், சின்னமணிய மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போறோம்னு சொல்லிட்டு வண்டியிலேயே கூட்டிக்கிட்டு போங்கன்னு" உள்ளிருந்து சொல்லிக்கிட்டே ஒரு நடுத்தர வயது பெண் வந்தார்.
அந்த நேரத்தில் கையில் கொத்து தழையுடன் நடுத்தர வயது நபர் வேகமாய் வீட்டினுள் ஓடினார். அவர் "மாலா…. மாலா … இங்கே வா …. பூண்டு இடிக்கும் குடுவையை எடுத்து வா…. கொஞ்சம் உப்பு எடு…" என்றவாறே கையில் உள்ள தழையை உறுவினார். அந்த நடுத்தர வயது பெண் குடுவையை எடுத்து அவர் கையிலிருந்த தழையையும் உப்பையும் அதில் போட்டு நையும் அளவுக்கு இடித்தார்.
"நகுலா … நகுலா ...." . என்றவாறே மற்றொரு நபர் வீட்டினுள் வந்தார். தழையை எடுத்து வந்த நபர் திரும்பி பார்த்து "என்னடா … புலிகேசி என்னச்சு.. என்றார். " நாமக்காருகிட்ட கேட்டுட்டேன்… சீக்கிரம் மருத்துவர்கிட்ட போகச் சொன்னாரு … அதுனால தான் சிவா கிட்ட சொல்லி அனுப்பினேன் … நீ இன்னும் கிளம்பாம இருக்க... என்று வினவினார் புலிகேசி .
அதற்குள் இடிச்ச தழையிலிருந்த சாறை சின்னமணியின் வாயைத் திறந்து ஊற்றினார்கள் சோர்ந்து போய் படுத்திருந்ததை பார்ப்பதற்கு பரிதாபமாய் இருந்தது, நன்றாய் சாறை விழுங்குமளவுக்கு புகட்டிய பின் இரண்டு பேர் குண்டு கட்டாய்த் தூக்கிக்கிக் கொண்டு வண்டியில் அமர்ந்து சிட்டாய் மருத்துவமனை நோக்கி பறந்தார்கள்.
அப்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எப்படி இது ஆச்சு என்று ஆதங்கப்பட்டு கேட்டார்கள். " விடியற்காலம் 5.00 மணிக்கு நகுலன் அண்ணா வீட்டின் உள்ளிருந்து வரும் போது சின்னமணியும் பார்த்துதாம்… அண்ணன் நடைப் பயிற்சிக்கு போயிட்டாராம் அரை மணி நேரம் கழிச்சி வந்து பார்த்தா சின்னமணி வாயில நொப்பும் நுரையூமா இருந்திருக்கு பக்கத்துல ஒரு நச்சுப் பாம்பும் செத்துப்போயி கிடந்திருக்கு உடனே அண்ணன் கடிபட்ட இடத்துல கட்டைப் போட்டு வாழைச்சாறையும், பூண்டு சாறையும் கடிப்பட்ட இடத்துல பிழிஞ்சி விட்டுட்டு சிவாவுக்கு போன் செய்து விவரத்துச் சொல்லி நாமக்காரர் வீட்டுல குடி இருக்கிற மருத்துவர பார்க்கச் சொல்லியிருக்கிறார் " என்று ஒரு பெண் விளக்கமாய் கூறினார். இவ்வாறு பலரும் பேசிக் கொண்டே இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் சிவாவும், கீர்த்தியும் சின்னமணியோடு வந்தனர்.
வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்ட சின்னமணி தனது சோர்வை களைக்க உடலைக் குலுக்கிக் கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு அங்கிருந்தவரைப் பார்த்துக் கொண்டே வேகமாய் சென்று நகுலனை நக்கிக் கொண்டே மடியில் படுத்துக் கொண்டது வளர்ப்பு நாய் .

