அன்பு மகளுக்கு

கட்டித் தங்கமே என்
கனவுகள் என்றும்
உன்னைச் சுற்றியே
உன் விரல் பிடித்து நடை பழக்கினேன் அன்று,
இன்று உன் விரல் பிடிக்கின்றேன்
நான் நகரும் படிக்கட்டுகளில்.

தெய்வம் தந்த என் தேவதையே
உன் மேல் எனதன்பை
செந்தமிழில் சொல்லெடுக்க
வார்த்தைப் பூக்கள்
வானமாய் விரிகிறது.
வசந்தமே என் வாழ்வே நீ
வளர்ந்த நாட்களை
வாஞ்சையுடன் நினைக்கின்றேன்
காலக்கடிகாரம் றெக்கைகட்டி பறந்திடுதோ
கடவுளை தொழுது நான்
கண் மூடி அழ
பிஞ்சு விரல் கொண்டு
விழி நீர் துடைத்து
பட்டு இதழால் முத்தம் தந்தது
நேற்று போல் நினைவில்
சிலிர்க்கின்றேன்
சில்லென்ற நாட்கள் அவை.

அதிராத குரல் கொண்ட என்
அழகு தேவதை நீ
என் சிரிப்பும் நீ
என் சிந்தனையும் நீ
என் கனவும் நீ
என் காட்சியும் நீ
என் ஊனும் நீ
உயிரும் நீ

பள்ளிப் பருவத்திலே
பாட்டும் பரதமும்
படிப்பும் பாராட்டுமாய்
ஈன்ற பொழுதினும்
எனை பெரிதுவக்கச் செய்தாய்

முகம் காட்டும் கண்ணாடி போல்
மனம் காட்டும் மாணிக்கமே
என் சோகம் தொலைக்க வந்த
சொக்க தங்கமே
என் சுமை தாங்கி நீ

தோல்வியில் நான்
தவித்த தருணத்தில்
தோள் கொடுத்து எனை மீட்ட
தோழியே
உன்னோடு சேர்ந்து நான்
வாய் விட்டு சிரித்து என்
பள்ளி நாட்களுக்கு
பல முறை சென்று வந்தேன்

துயரம் தெரியாது
கவலைகள் காட்டாது
கவனமாய் உனை வளர்த்தேன் இன்று
நீ எனக்கு போதி மரம்

கருதுவது உரைக்கின்றாய்
கருணையும் கண்டிப்புமாய்
அளவற்ற ஆளுமையில்
அசர வைக்கிறாய்


பாதை முழுதும்
கற்களும் முட்களும்
பார்த்து நடக்க
பழகிக்கொள் கண்ணே

முன்னேறிச் செல்ல
முதுகுக்கு பின்
முனகல்கள் கேட்கும்
செவியிரண்டும் மூடி
மனக்கதவு திறந்து
அகக்கண் வழி
அகிலம் பார் கண்ணே

உனக்கான பாதை
உன்னதமாய் இருக்கட்டும்
உயர்ந்த லட்சியம் உன்னை
உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
முயற்சியும் உழைப்பும்
உன்னுடன் இருப்பதால்
சிகரம் தூரமில்லை
சீக்கிரம் தொட்டு விடுவாய்

எழுதியவர் : இவானா (21-Nov-20, 10:31 am)
சேர்த்தது : இவானா
Tanglish : anbu magalukku
பார்வை : 87

மேலே