மருத்துவ வெண்பா – மூங்கில் இலை - பாடல் 69

நேரிசை வெண்பா

குடற்கட்டுச் சூலையுடன் குன்மம் உதிரம்
உடற்கெட்டா தோடி ஒழியும் – மடற்றங்கு
வேல்விழிமா தேகேளாய் வேயின் இலைதனக்குக்
கால்வழியுஞ் சோணிதம்போங் காண்!

குணம்:

மூங்கில் இலைக்குக் குடற்சூலையும், வயிற்று நோயும், ரத்தத் தடிப்பும், பிரசவ காலத்திற் தங்கிய அழுக்கும் நீங்கும்.

செய்கை: ருதுவர்த்தனகாரி, கிருமி நாசினி.

உபயோகிக்கும் முறை:

மூங்கில் இலையை அரைத்து முள் தைத்த இடத்தில் வைத்துக் கட்ட முள்ளை வெளியாக்கும். மூங்கில் இலைச் சாற்றுடன் காடி கூட்டி இடுப்புக்குப் பூச இடுப்பு வலி நீங்கும். இதன் சாற்றுடன் தேன் கூட்டிச் சாப்பிட இருமலைக் குணப்படுத்தும். மூங்கில் இலையைச் சுட்டுச் சாம்பலாக்கி ரணங்களின் மேல் தூவி வர விரைவில் ஆறும். இதன் சாம்பலைக் கொண்டு பல்விளக்க முத்துப்போல் பல் வெளுக்கும். மூங்கில் இலையின் மேல் படிந்துள்ள பனிநீரைச் சேகரித்து வைத்துக் கண்களில் விடக் கண்சிவப்பு மாறுவதுடன் கண் கூச்சமும் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-20, 9:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

மேலே