ஊனமுற ஊனருந்தல் பண்டு புரிந்த பழி - புலை, தருமதீபிகை 698

நேரிசை வெண்பா

இனிய கனிகாய்கள் எண்ணரிய கூழ்கள்
புனித நிலையில் பொலிந்தும் - மனிதரதை
உண்டு மகிழாமல் ஊனமுற ஊனருந்தல்
பண்டு புரிந்த பழி. 698

- புலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இனிமையான கனி, காய்கள் முதலிய நல்ல தானிய வகைகள் நாட்டில் நிறைந்துள்ளன; இருந்தும் மனிதர் ஈனமாய் ஊனை உண்பது பழவினையான பழியேயாம் என்கிறார் கவிராஜ பண்டிதர். உண்ண உரியன இதில் எண்ண வந்தன.

உயிர் வாழ்க்கைக்கு உணவு அவசியம் தேவையாயிருத்தலால் மனிதன் முடிவில் பயிர்களை உளவாக்க நேர்ந்தான். அவைகளிலிருந்து வரும் விளைவுகள் இனிய உணவுகளாயின.

நெல், புல், வரகு, சாமை, சோளம், இராகி, தினை, உழுந்து, கடலை, அவரை, துவரை, பயறு முதலாகப் பலவகைத் தானியங்கள் உள்ளன. இவை யாவும் மனிதன் உண்ண உரியனவாதலால் பண்டம் என வந்தன. பண்டி – வயிறு;. அதில் இடுவது பண்டம்.

கூழ், கூலம், பண்டம் என்பன உணவுத் தானியங்களைக் குறித்து வருவது ஊன்றி உணரவுரியது. மனிதனுடைய பசியை நீக்கி வாழ்வை எவ்வழியும் வளம்படுத்தி வருதலால் யாவரும் இவற்றை ஆவலோடு விளைத்து யாண்டும் போற்றி வரலாயினர். பயிர் வகைகள் உயிர் வகைகளுக்கு உணவுகளை ஊட்டிவருவது இனிய காட்சிகளாய் எங்கும் நீண்டு நிலவி வருகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் புனலின் உள்ள
முதிர்பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
படுபதி கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டென மள்ளர், கொள்வார். 22

முந்துமுக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யில்
செந்தயிர்க் கண்டம் கண்டம் இடைஇடை செறிந்த சோற்றின்
தந்தமில் இருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும்
அந்தணர் அமுத உண்டி அயில்வுறும் அமலைத்(து) எங்கும். 19 நாட்டுப்படலம், பால காண்டம், இராமாயணம்

வயல், பொழில் முதலிய இடங்களிலிருந்து நெல் முதலிய பண்டங்களைத் தொகுத்துச் சேர்த்த முறைகளையும், நெய், பால், கனிகளோடு உணவுகளை உண்டு வந்த நிலைகளையும் இவை உணர்த்தியுள்ளன. இந்நாட்டில் பண்டிருந்த விளைவின் பெருக்கையும், உணவின் தரத்தையும் கண்டு மகிழ்ந்து இந்நாள் நிலைமையை எண்ணிக் கண்ணீர் மல்கி இங்கே ஏங்கி நிற்கின்றோம்.

நமது முன்னேர்களது சீவிய நிலைகளைக் காவியங்கள் காட்டி வருகின்றன. அக்காட்சிகள் பழங்கால மாட்சிகளையும் வளங்களையும் விளக்கி நமக்கு மகிழ்ச்சிகளை ஊட்டி வருகின்றன.

ஆதியில் மனிதன் பசியைத் தீர்க்கக் கனி, காய், கிழங்குகளை உண்டு வந்தான். பின்பு உண்ணுவதைச் சமைத்துண்ணத் தொடங்கினான். அதன்பின் அரிசி மற்றும் தானியம் முதலியவற்றைப் பக்குவம் செய்து உண்டு வர நேர்ந்தான். நாளடைவில் உணவு வகைகள் பெருகி வரலாயின. சுவைகளின் உணர்வுகளில் மனிதர் சுகிகளாய் உயர்ந்து சுகித்து வருகின்றனர்.

காலதேசங்களின் மாறுபாடுகளுக்குக் தக்கபடி உணவுகள் வேறுபட்டிருக்கின்றன. கடலோரங்களில் வாழ்பவர் மீன்களைச் சமைத்துத் தின்கின்றார், காட்டில் வசிப்பவர் மிருகங்களை வேட்டையாடிப் புசிக்கின்றார். மலைகளில் இருப்பவர் கிழங்கு, காய், கனிகளைத் தின்கின்றனர். இன்னவாறு தம்மைச் சூழ்ந்துள்ள நிலைகளின்படியே மாந்தர்க்கு உணவுகள் வாய்ந்துள்ளன.

மாமிசம் புசிப்பது அயல் நாடுகளில் இயல்பாக அமைந்திருக்கின்றது. மிகுந்த குளிர் தேசங்களில் தானிய உணவுகளை உண்டு வாழ்வது சிரமமாதலால் வேறு உணவுகளை அந்நாட்டவர் உண்ண நேர்ந்தனர். நேர்ந்தாலும் அவருள் அறிஞர் சிலர் புலால் பிழைபாடுடையன என்று இயற்கை நிலைகளை நோக்கி ஒதுக்கியுள்ளனர்.

இந்நாடு தட்ப வெப்பங்களில் சமனிலையுடையது. நில வளங்கள் வாய்ந்தது; தானிய வகைகள் யாண்டும் நீண்ட விளைவுகளாய் நேர்ந்துள்ளன; ஆகவே இந்நாட்டு மக்கள் அரிசி முதலியவைகளை வரிசையாய்ச் சமைத்து உண்ண வாய்ந்தனர்.

ஊன் அருந்துவது ஈனம் என மேலோர் உணர்ந்து விலக்கியுள்ளனர். கொலை படிந்து வருதலால் புலாலை உண்பது புலை என இகழ்ந்தனர். அதனை உண்பவரைப் புலையர், கீழோர் என இழித்து ஒதுக்கினர். இழிவு நிலைகள் செயல்வழி நேர்ந்தன.

நேரிசை வெண்பா

ஈவானே தெய்வம் இரப்பே இளிவரவென்(று)
ஆய்வானே நூலின் பயனறிவான் - பேய்வாழும்
காடே கரப்பவர்தம் இல்லம்; கடும்புலையன்
வீடே விடக்குண்பான் வீடு.

விடக்கு உண்பவன் கடும்புலையன் என இது குறித்துள்ளதைக் கூர்ந்து நோக்குக. விடக்கு - ஊன், தசை; தான் உண்ணும் விடக்குக்காகப் பிற உயிர்களைத் துடிக்கக் கொல்லுதலால் புலால் புசிப்பவன் கொடிய கொலைஞன், நெடிய புலைஞன் என நேர்ந்தான். தன் உயிரைப் பாழாக்கிக் கீழே போதலால் அவன் கீழோன் என எள்ளி இழிக்கப்பட்டான்.

பிற உயிர்களுக்கு அருளுவது பெரிய புண்ணியம்; அந்தப் பெருமகிமையைப் புலால் உண்பவன் வறிதே இழந்து பாவியாய் இழிந்து போகின்றான்; அவனது போக்கின் புலையை மேலோர் நோக்கி இரங்குகின்றார். ஆக்கம் உற அறிவும் போதிக்கின்றார். போதனை புனித நிலையை ஊட்டுகின்றது.

அவிசொரிந்(து) ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்(து) உண்ணாமை நன்று. 259 புலால் மறுத்தல்

ஆயிரம் வேள்விகளைச் செய்வதிலும் ஊன் உண்ணாமல் இருப்பது நன்மையாம் என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். ஆயிரம் யாகம் செய்தால் இந்திர பதவி அமையும் எனக் கருமகாண்டம் குறித்துள்ளது. அதனை எதிர்நிறுத்தி அதனினும் புலால் உண்ணாமையால் வரும் புண்ணியம் பெரிதாம் என்று குறித்திருத்தலால் இதன் பெருமகிமையை உணரலாகும். புலைப் புசிப்பு மனிதனைப் புலைப்படுத்திக் கீழே தள்ளி விடுகின்றது; அந்த ஈனப்புசிப்பை ஒழித்தவன் உயர்ந்த சீலனாய்ச் சிறந்த மேன்மைகளை எளிதே அடைந்து கொள்கிறான். பிற உயிர்களுக்கு இதமாய் வாழுபவன் தன் உயிர்க்கு ஓர் உன்னதமான கதியைப் படைத்து வருகிறான். அருள் வரவு அதிசயத் திருவாயுள்ளது. புனித வாழ்வின் நிலை தெரிந்து மனிதன் உயரவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-20, 7:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே