மருத்துவ வெண்பா – பச்சைப் பயறு – பாடல் 74
நேரிசை வெண்பா
பச்சைப் பயறதுதான் பாரிற் பயித்தியத்தை
அச்சமற நாளும் அகற்றுங்காண் – கச்சுலவு
கொங்கைமட மாதே குளிர்ச்சியென்பார் எப்போதுந்
தங்குவா தத்தைத் தரும்! 1
- மருத்துவ குண விளக்கம்
குணம்: பச்சைப் பயறு பித்தத்தை நீக்கும்; வாயுவைத் தரும். சீதளம் செய்யும் என்பர்.
ஐயைப்பித் தத்தை யரோசகத்தைப் போக்கிவிடும்
வெய்யவா தத்தை விளைவிக்கும் – மெய்யாய்
மறுவொழிந்த தூய மதிவதன மாதே
சிறுபயறு செய்யுஞ் செயல்! 2
- மருத்துவ குண விளக்கம்
குணம்:
சிறுபயறு கபரோகத்தையும் பித்தத்தையும் அரோசகத்தையும் போக்கும். பித்த வாதத்தை உண்டாக்கும்.
உபயோகிக்கும் முறை:
பச்சைப் பயற்றை நீரிட்டு வேக வைத்து, வடித்து உப்பிட்டுச் சுண்டலாக உண்பதுண்டு. இதன் பருப்பை அரிசி நொய்யுடன் கலந்து கஞ்சியாகவும், அல்லது அரிசி கோதுமை நொய் முதலியவற்றுடன் கூட்டிப் பொங்கலாகவும் செய்து உண்பது வழக்கம். இத்தகைய ஆகாரம் தேகத்தின் வெப்பத்தை நீக்குவதுமன்றிப் பித்தத்தைச் சாந்தப்படுத்தும்.
இன்னும் இப்பயறுடன் சில கீரைகளைக் கூட்டிக் கடையலாகவும் செய்து உண்ணலாம். இதனால் தாது விருத்தியாகும். அளவு கடந்து பயற்றை அதிகப்படுத்தினால் மலக்கழிச்சல் உண்டாக்கும்.
இதன் மாவை நீர்விட்டுக் களிபோல் கிளறிப் பால் கட்டு உண்டான பெண்களுக்கு மார்பில் வைத்துக் கட்ட நோய் நீங்கி எளிதில் பால் சுரப்பு உண்டாகும்.