பல்லோர் இகழும் பழிச்செயலைப் பண்பில்லார் தழுவிநின்று பொங்குவார் - பழி, தருமதீபிகை 715

நேரிசை வெண்பா

பல்லோர் இகழும் பழிச்செயலைப் பண்பில்லாப்
பொல்லார் தழுவிநின்று பொங்குவார் - எல்லாரும்
எள்ளி ஒதுங்கும் இழிமலத்தைப் பன்றிநாய்
அள்ளி விழுங்கும் அமர்ந்து. 715

- பழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலரும் வெறுத்து இகழுகின்ற பழிச்செயலைப் பொல்லாத இழிமக்கள் தழுவி நின்று களிக்கின்றார்; அருவருப்பான ஈன மலத்தைப் பன்றி, நாய் விழைந்து விழுங்குவது போல் அவர் நுழைந்து புகுந்து அழுந்தி உழலுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல அறிவுடையனாய்ப் பிறந்திருந்தும் பொல்லாத இழி பழக்கங்களால் மதியழிந்து மனிதன் பழி பாவங்களை அடைந்து அழிதுயரோடு அவலமுற நேர்ந்தான். இசையும் இன்பமும் பெற உரியவன் வசையும் துன்பமும் மருவி அழிவது பரிதாபமாய் நின்றது. பழகிய இழிவுகள் படுதுயரங்களாயின.

உலகம் அருவருத்து வெறுப்பதைத் தன் உள்ளமும் அறியுமாயினும் எள்ளலான பழக்க மிகுதியால் ஈன நிலைகளில் துணிந்து இறங்கி விடுகிறான். கள்ளத்தனங்களைக் கடுந்துணிவோடு செய்வது நெடும் பழக்கத்தால் நேர்ந்தது. ஒரு முறை தீமையைச் செய்ய நேரின் உள்ளம் மழுங்கிப் போய், பின்பு மானமும் நாணமுமின்றி ஈனங்களில் துணிந்து புகுந்து மனிதன் மடிந்து போகின்றான்.

பிறனுடைய மனையாளை விழைந்து புகுந்தால் அறம் அழியும்; புகழ் ஒழியும்; கேண்மை தொலையும்; பெருமை பாழாம்; இன்னவாறான இழவுகள் எய்துவதை அறிந்தும் யாதும் காணாமல் அயலாளைத் தழுவிக் களித்து அவலமாய் அழிகிறான்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். 146 பிறனில் விழையாமை

பிறன் இல்லாளிடம் செல்பவனுக்கு வரும் அல்லல்களை வள்ளுவர் இவ்வாறு எடுத்துக் காட்டியிருக்கிறார். பழி முதலிய இழிதுயர்கள் அடைவதை அறியாமல் விழிகண் குருடனாய் அழிவுறுகின்றான். நிலைமையை நினையாமல் நீசம் அடைகின்றான்.

தன் மனையாளைப் பிறன் தழுவக் கண்டால் உள்ளம் கொதித்து அவனைக் கொல்லப் பாய்கின்றான்; அத்தகைய அனுபவமுடைய மனிதன் அணுவளவும் சிந்தியாமல் யாதும் கூசாமல் அயலான் மனைவியை அணுகுவது எத்தகைய மடமை! இதனை உய்த்துணர. வேண்டும். உடலின் சிறு தினவுக்காக உயிரை அடர்நரகில் தள்ளுகின்றாயே பேதையே! என்று ஒரு காமுகனை நோக்கி ஓர் மேதை இரங்கியிருக்கிறார்.

இவ்வாறான பழிகளில் வீழ்பவன் பாழ்படுகின்றான். பழிபடாமல் வாழ்கின்ற வாழ்வே வாழ்வாம். அவ்வாறு வாழ்பவரே விழுமிய மேலோராய் விளங்கி வருகின்றார்.

பழியஞ்சிப் பாத்துாண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44 இல்வாழ்க்கை

ஒரு மனிதனுடைய வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் இவ்வாறு உணர்த்தியிருக்கிறார். பழி யாதும் இல்லாமல் நல்ல வழிகளில் பொருளை ஈட்ட வேண்டும்; அங்ஙனம் ஈட்டிய பொருளைப் பிறர்க்கும் வகையாய் உதவித் தானுண்டு உயிர் வாழ வேண்டும்; அத்தகைய வாழ்வு உத்தமமாய் ஒளி சிறந்து என்றும் நித்தியமாய்ப் பெருகி நிலைத்து வரும் என்றதனால் இதன் உயர்வை உணர்ந்து கொள்கிறோம். பழி கலவாததே விழுமிய வாழ்வாம்; பரம புனிதமாய் உயர்ந்து அது ஒளி சிறந்து திகழும். பொருள் எவ்வளவு மிகுந்திருப்பினும் அது பழி புகுந்திருப்பின் எவ்வழியும் இழிந்ததேயாம்.

பழிமலைந்(து) எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 657 வினைத்தூய்மை

பழிவழியில் வரின் அச்செல்வம் இழிவாம் என இது விளக்கியுளது. கள்ளம், வஞ்சம், கபடம் முதலிய பிழை வழிகளில் பொருளைச் சேர்த்து ஒருவன் பெரிய செல்வனாய் வெளியே மினுக்கியிருப்பினும் அந்த இருப்பு நிந்தை மிகவுடையதே.

யாதும் பழியுறாதபடி தம்மைப் பாதுகாத்து. அமைதியாயிருக்கும் விழுமியோரிடமுள்ள வறுமை அந்தப் பழியாளனுடைய செல்வத்தினும் கோடி மடங்கு மகிமையுடையதாம். பழியால் வந்த ஆக்கம் துயரத்தையே விளைத்து அவனை நரகத்தில் தள்ளி விடுமாதலால் அது இப்படி எள்ளப்பட்டது.

பழி வழியில் வந்த பொருள் முதலில் இனிமையாய்த் தோன்றினும் பின்பு சிறுமையும் துன்பமுமே தரும்; ஆகவே அந்தப் பழி ஆக்கம் எவ்வழியும் அழி துயரமே என்று கருதி அதனை அடியோடு ஒழிய விட வேண்டும்.

“Bread of deceit is sweet to a man; but afterwards
his mouth shall be filled with gravel.” (Bible)

'வஞ்சனையால் வந்த உணவு ஒரு மனிதனுக்கு முதலில் சுவையாயிருக்கும்; பின்பு அவன் வாய் மண்ணையும் கல்லையும் விழுங்கும்” என்னும் இது இங்கே எண்ணி உணரவுரியது.

பழி வினையால் எதையும் செய்யலாகாது; அவ்வாறு செய்யாதவரே தெய்வத் திருவருளையடைந்து உய்தி பெறுகின்றார். உயர்வும் இன்பமும் வரும் வழியை இதனால் உணர்ந்து கொள்கிறோம். இன்பம் பொருளில் இல்லை; புண்ணியத்தில் உள்ளது.

பழி படியின் அந்த மனிதன் இழிந்த கீழ்மகனாகிறான். அது படியாவிடின் அவன் உயர்ந்த சான்றோனாய் ஒளி மிகுந்து நிற்கின்றான். கீழ்மை ஒழிய மேன்மை விளைகின்றது.

இழிந்த காரியங்களைச் செய்ய நாணுகின்ற நாணமே மனிதனை உயர்ந்தவனாக்கி வருகிறது. மேலோனுடைய மனம், மொழி, மெய்கள் கீழ்மையில் படியாதாதலால் அவை என்றும் செம்மை தோய்ந்து சீர்மை வாய்ந்து சிறந்து திகழ்கின்றன.

கருமங்கள் இனியனவாயின் அங்கே புகழ்மணம் வீசுகின்றது; கொடியனவாயின் நெடிய பழி நாற்றம் பரவுகின்றது.

பழியாய் வருவது மொழியாது ஒழிவது. - நறுந்தொகை,76

’வசையாக வருவதை வாயாலும் பேசலாகாது’ என அதிவீரராம பாண்டியன் இவ்வாறு பேசியிருக்கிறார். பழி புகாமல் எவ்வழியும் தன்னை ஒருவன் பாதுகாத்துவரின் அவன் புகழ்மகன் ஆகின்றான். அவ்வாறு ஆகாதவன் இழிமகனாயிழிந்து படுகின்றான். புகழ் மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது; பழி அவனை ஈன மிருகமாய் இழித்துத் தள்ளுகிறது. உண்மையுணர்ந்து உய்தியுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-20, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே