துன்பம்,நீ எத்துணையும் எவ்வுயிர்க்கும் என்றுமே செய்யற்க - கொலை, தருமதீபிகை 705

நேரிசை வெண்பா

இன்பம் உறவிழைந்(து) எல்லா உயிர்களுமே
புன்பாடு நீடிப் புரிகின்ற - துன்பம்,நீ
எத்துணையும் எவ்வுயிர்க்கும் என்றுமே செய்யற்க
ஒத்துதவி செய்க உணர்ந்து. 705

- கொலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாம் நல்ல இன்பங்களை அடையவேண்டும் என்றே எல்லா உயிர்களும் ஆவலோடு யாண்டும் முயன்று வருகின்றன; அத்தகைய நிலையிலுள்ள சீவர்களிடம் யாதொரு துன்பமும் எத்துணையும் செய்யலாகாது; எவ்வழியும் ஒத்து உதவி செய்வதே உத்தமம்; அவ்வாறே என்றும் செய்துவருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சீவர்களுடைய வாழ்வில் அவலக் கவலைகளே தொடர்ந்திருக்கின்றன. பசித்துயர் முதலியன இயல்பாகவே பற்றியிருத்தலால் அவற்றை நீக்கி வாழ வேண்டிய பொறுப்பு நீண்டு நின்றது. அதனால் உழைப்புகள் நேர்ந்தன. உழைப்பும் பிழைப்பும் காரண காரிய உரிமையில் தொடர்ந்திருக்கின்றன. துன்பச் சூழல்களைக் களைந்து நாளும் இன்பம் காண முயன்று வருவது வாழ்க்கைப் போராட்டமாய் வளர்ந்திருக்கிறது. உடலைப் பேண ஓடி உழைப்பதில் உயிருக்கு உரிய உறுதி நலங்களை மனிதன் மறந்து விடுகிறான். குடும்ப இடும்பைகள் எவ்வழியும் நெடும் படர்களாய் விரிந்து யாண்டும் நெடிது நீண்டு நிற்கின்றன.

பொருளுடையவன் மேலும் பொருளை நாடி உழல்கின்றான். செல்வம் இருந்தும் பிள்ளைப் பேறு இல்லையே என்று சிலர் உள்ளம் கவல்கின்றார். அறியாமை மண்டிப் பொறிவெறி கொண்டு யாண்டும் சீவர்கள் வறியராயுழந்து சிறியராயிழிந்து படுகின்றனர். உடல் நோயும் பசி நோயும் காம நோயும் கடல் அலைகள் போல் ஓயாமல் அடல்புரிந்து அடர்ந்து வருகின்றன.

கட்டளைக் கலித்துறை

அன்ன விசாரம் அதுவே விசாரம் அதுவொழிந்தாற்
சொன்ன விசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சுக்(கு)
என்ன விசாரம்வைத் தாய்இறை வாகச்சி ஏகம்பனே. 8 திருவேகம்ப மாலை, பட்டினத்தார்
.
மனித வாழ்வின் நிலைமையைப் பட்டினத்தார் இப்படிப் பரிந்து காட்டியிருக்கிறார். இன்னவாறு இன்னல் இடர்களோடு மன்னியுழல்கின்ற சீவர்களுக்கு இரங்கி இதம் புரிவதே யாவருக்கும் உரிய கடமையாம். பரிவு தோய்ந்து வருமளவே அறிவு தோய்ந்ததாம். பிறவுயிர்கட்கு இரங்குவது பேரறமாகிறது.

இரக்கம், இதம், உதவி, உபகாரம் என்னும் உரைகள் உயிரினங்களின் நிலைமைகளை விளக்கி உயர்ந்தாருடைய தலைமையைத் துலக்கியுள்ளன. பரிதாப நிலைகளில் இழிந்து திரிகின்ற பிராணிகளிடம் இரங்கியருளவே உயர்ந்த பிறப்பை மனிதன் அடைந்திருக்கிறான். உபகாரம் செய்துவரும் அளவு பயனுடைய பிறவியாய் அவன் உயர்நிலையை அடைகிறான். உயிர் ஊதியமான அந்த உதவி நலனை இழந்த போது பிறந்து வந்த பிறப்பு பிழையாய் இழிந்து போகின்றது.

சீவர்களுக்கு நேர்ந்த இடர்களை நீக்கி இதம் புரிந்துவரும் இயல்பு எந்த மனிதனிடம் இனிது அமைந்திருக்கிறதோ அவன் தெய்வீக நிலையில் உயர்ந்து திவ்விய மகிமைகளை அடைந்து கொள்கிறான். சீவ இதம் தேவபதம் தருகிறது.

உபகார நீர்மை உன்னத மேன்மையாளரது பான்மையாய் அமைந்து புகழ் புண்ணியங்களின் தெளிவாய் விழுமிய ஒளி வீசியுளது. அதனால் அரிய பல மகிமைகள் விளைகின்றன.

நேரிசை வெண்பா

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா(து) உலகில்
நிறைஇருளை நீக்கும்மேல் நின்று. 10 - நன்னெறி

தன்னலம் கருதாமல் பிறர்க்கு உதவி புரிவோரே பெரியோர்; அவர் விழுமியோராய் உன்னத நிலையில் உயர்ந்து சந்திரன் போல் ஒளி வீசியுள்ளார் என இது உணர்த்தியுள்ளது. திங்கள் நிலையை எடுத்துக் காட்டிப் பெரியோரியல்பைக் குறித்திருப்பது இங்கே சிந்தித்து உணரத்தக்கது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைகண் இல்லார்
அற்றவர் அந்த ணாளர் அன்றியும் அனைய நீரார்க்(கு)
உற்றதோர் இடுக்கண் வந்தால் உதவுதற் குரித்தன் றாயின்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபயன் இல்லை மன்னோ. 202 சீயவதைச் சருக்கம், சூளாமணி

பெற்ற பிறவிக்குப் பயன் பிறர்க்கு உதவி புரிவதே என இது உரைத்துளது. இன்னவாறு உதவி புரியவே உரிமையுடன் மனித உருவில் வந்தவர் அவ்வுதவியைச் செய்யாமையோடு ஒழியாமல் வேறே இன்னலும் செய்ய நேர்ந்தால் அது எவ்வளவு மடமை! எத்துனைக் கொடுமை! உய்த்துணர வேண்டும்.

உதவி செய்பவர் பிறவிப் பயனைப் பெற்ற பெரியவர் ஆகின்றார். உதவாதவர் இருந்தும் இறந்தவராய் இழிந்து படுகின்றார். இடர் செய்பவர் கொடிய நரகராய் அடுதுயர்க்கே ஆளாகின்றார். செயல் இனியதாயின் சீவன் புனிதமாய் உயர்கின்றது.

உபகாரம் உய்தி தருகின்றது; அபகாரம் அதோ கதியில் ஆழ்த்துகின்றது. சொல்லும் செயலும் பயன்பட்டு வருநிலையிலேயே மனிதன் நயனுடையனாய் வியன் பெற்று நிற்கின்றான். மேலோர், பெரியோர் என்னும் பேர்கள் மனித சமுதாயத்தில் மகிமை மிகுந்துள்ளன. இனிய இயல்புகள் அரிய உயர்வுகளை அருளி வருகின்றன. இன்னாதன இழிதுயர்களே தருகின்றன.

இன்னிசை வெண்பா

சொல்லான் அறிப வொருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும்
ஒப்புரவி னானறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா. 78 நான்மணிக்கடிகை

மனிதர் நிலைகளை அளந்து அறிதற்குச் சில கருவிகளை இது வரைந்து காட்டியுளது. ஒருவன் சான்றோன் என்பதை அவனது உபகார நீர்மையால் உணர்ந்து கொள்ளலாம் என விளம்பி நாகனர் இங்ஙனம் தெளிவாக நன்கு விளம்பியிருக்கிறார்.

யாருக்கும் யாண்டும் அகிதம் செய்யாதே; எவ்வழியும் இதமாய் உதவியே செய்; அதனால் அரிய மேன்மைகளும் பெரிய நன்மைகளும் இனிய இன்பங்களும் உனக்கு உளவாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-20, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே