மரம்
காய் தந்தவையின்
கர்ப்பம் கலைக்கப்பட்டது
உயிர்போன வேர்களுக்கு
இடையில்
தனிமை படுத்தப்பட்டன
குருவிகளின் வீடுகள்
அணிலின் மாடி வீட்டு
படிக்கட்டுகள் இடிந்து
போனது
புறாக்களின் ரகசிய
மெத்தைகள் கிழிந்து
போனது
வௌவால்களின் ஊஞ்சல்கள்
அறுந்து போனது
காகங்களின் கூட்டாண்மை
ஒத்திவைக்கப்பட்டது
எறும்புகளின் நடை
மேடை தகர்க்கப்பட்டது
விட்டிகளின் ஓய்விடம்
கலைக்கப்பட்டது
பறவைகளின்
மாலை நேர மாநாடு
மாய்ந்து போனது
கிளை கைகளில்
இருந்த மோதிரங்கள்
பறிக்கப்பட்டன
தென்றல் வருடிய
இலைகளையெல்லாம்
அருவா கீறியது
இயற்கையின் இதயத்தில்
கோடாரி அம்புகள்
ஏவப்பட்டது
திடீரென்று
மரமும் காற்றும்
மௌனமானது
நின்று நிழல்
தந்தவை
இன்று சாய்ந்து
சாம்பலானது
எல்லோர்க்கும் வருத்தம்தான்
என்ன செய்வது
எல்லாம் கால நேரம்
வெட்டிவிட்டு வலிகளோடு
வழி கடந்து
செல்கிறேன்...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி