ஊடல்

உரசல் ஓரங்கமானால் தேடல்
அந்த உரசல் விரிசலானால் ஊடல்.
உணர்வு சங்கமங்களின் ஓடுபாதை
இரு மனங்களின் ஈர்ப்பு தண்டவாளம்.
குறுக்கு நெடுக்கு கோலங்களின்
அசைவும் இசைவுமே ஆனந்த சங்கல்பம்.
ஊசிக்கு உடன்படா நூலுக்குள்
யோசிக்கும் பேதமே ஊடல்.
உன்னில் நான் என்னில் நீ என்றால் ஊடலில்லை
உனக்கா எனக்கா என்ற வேள்வியில் தேடலில்லை
உணர்ச்சிகள் மரித்துப்போனபின்
நீயுமில்லை நானுமில்லை – அந்த ஊடலில்
தேகப்பந்தில் காற்றில்லை கரிசனமுண்டு
கவலையுண்டு கண்ணீருண்டு
கோபம் பிரளயமானால் கொதிப்பதுண்டு
விட்டுக்கொடுத்தால் இணைப்புண்டு
அணைப்புண்டு அடங்குவதுண்டு
கிளர்ச்சியின்றி மலர்ச்சியுண்டு
மயங்குவதுண்டு மலர்தேன் சுரப்பதுண்டு
தேனள்ளி பருகுகையில் திகட்டாத சுவையுண்டு.!

எழுதியவர் : செல்வமணி (17-Dec-20, 10:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 187

மேலே