கடிதம் ஐந்து

பாலு என்கிற பாலுசாமியின் கடிதம்

அன்புள்ள அப்பா அம்மாவுக்கு! உன் மகன் பாலு என்கிற பாலுசாமி எழுதிக்கொள்வது !

நீண்ட நாட்களாக உங்கள் இருவருக்கும் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து
கொண்டிருந்தேன். நினைத்து கொண்டிருந்தேன் என்பதால் கடந்த ஒன்றிரண்டு வருட காலமாக நினைத்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். இந்த கால இடைவெளி என்பது இருபது வருடங்களுக்கு மேல் இருக்கலாம். இது மிகவும் பெருமூச்சு விடும் விசயமல்லவா? அதுவும் உங்கள் இருவரையும் இழந்த மறு நாள் முதல் இந்த இருபது வருடங்களாக கடிதம் எழுத நினைத்து கொண்டிருந்தேன் என்பது உங்கள் இருவருக்கும் வியப்பாய் இருக்கும் அல்லவா?
ஒரு முறை “காலம் கடந்த பின்பு” என்ற தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொண்ட ஒரு சில நினைவுகளை எழுதி இருந்தேன். ஆனால் இடையில் என்ன நடந்தது என்பதை எழுத முடியவில்லை.இது அதற்கான தக்க சமயம் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? படிக்கும் காலத்தில் என்னிடமிருந்து வரும் கடிதங்களை அம்மா “என் பையன் கடிதம் போட்டிருக்கிறான்” பெருமையுடன் பேசுவார்கள். அப்பா அதற்கு உன் பையனுக்கு இந்த ஒண்ணை தவிர வேற எதுவும் எழுத தெரியாது சலித்துக்கொள்வார். உண்மைதான். காரணம், என் மகனும் எங்களுக்கு எழுதும் கடிதம் அனுப்பும் பொழுது இல்லை இல்லை கம்யூட்டர் உபயோகத்தில் இ.மெயில் அனுப்பும் பொழுது “பணம் அனுப்பவும்” இந்த வார்த்தைதான் அடிக்கடி அவன் கடிதம் அல்லது இ-மெயிலில் வந்தது..
அப்பா அன்று உன்னிடம் கொண்ட கோபத்தில் தாறுமாறாக சண்டையிட்டிருக்கிறேன், இன்று அதற்காக வருத்தப்படுகிறேன், ஆனால் ஒரு பக்கம் சந்தோசமும் கூட படுகிறேன். காரணம் உன் எதிரிலேயே உன்னிடம் சண்டையிட்டிருக்கிறேன், உன்னுடன் உட்கார்ந்து அளவளாவியிருக்கிறேன், நீ, நான், அம்மா, இந்த கூட்டணி நெருக்கத்தில் நமது சண்டைகள் தொடர்ந்தாலும், முகம் பார்த்து உருவம் பார்த்து வாழ்ந்து வந்திருக்கிறோம். இது இப்பொழுது எனக்கு கிடைத்த அனுபவத்தில் இல்லை. ஏனென்றால் என் மகன் என்னுடன் வாழ்வதுமில்லை, பேசுவதுமில்லை. காரணம் அவனளவுக்கு என்னிடம் வேகமில்லை என்கிறான். இது என் வயதின் தளர்ச்சியோ அல்லது அறிவின் தளர்ச்சியோ என்பதை கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஏகப்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை உபயோகப் படுத்துகிறான். நிறைய நண்பர்கள் இருப்பதாக அவனும் சரி அவன் மனைவியும் சொல்கிறார்கள், தினமும் முக நூலில் பேசுவதாக சொல்கிறார்கள்.உனக்கு “செல்” (அதுதான் கைபேசி) அதைக்கூட சரியாக கையாள தெரியவில்லை உன்னிடம் ஒரு சைக்கிள் வாங்கி தர சொல்லி நான்கு மாதம் கேட்ட பின்னால் உன் அலுவலகத்தில் கடன் வாங்கி, வாங்கி கொடுத்திருக்கிறாய். அவனோ இண்டர்நெட், டிவிட்டர், வாட்ஸ் சப், இன்னும் என்னவென்னவோ எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு வேடிக்கை தெரியுமா? அவனின் மகன் அவனை விட வேகமாய் இருக்கிறான். அதை பார்த்து இவன் வாயை பிளந்து கொண்டிருக்கிறான். பார்க்கலாம் நாளை இவன் இவன் மகனின் வேகத்திற்கு ஈடு கொடுக்கிறானா என்று?
அம்மா உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், காரணம் உன் ஆதங்கம் புரியாமல் இவளின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்டவன், உன்னிடமும் கொஞ்சம் பரிவுடன் கேட்டிருக்கலாம். எத்தனை முறை அப்பாவிடம் முறையிட்டிருப்பாய் நான் சொல்வதை இவன் காது கொடுத்து கேட்கவே மாட்டேனெங்கிறானே? உண்மைதான்.நீ மருமகளாய் இருந்த பொழுது பெரிய கூட்டு குடும்பத்தில் வாழ்க்கை பட்டாய். உன் கணவனிடம் பேசுவது கூட உனக்கு இமாலய செயலாய் இருந்தது. அதற்கு பின் நான் ஒரு பெண்ணுக்கு கணவனாகும் போது உன்னை விட கொஞ்சம் முன்னேறியிருந்த காலம் அல்லவா? அதனால் உங்கள் இருவருக்கும் முரண்பாடுகள் வரலாமல்லவா? இருந்தாலும் அம்மா நீ இதற்கும் சந்தோசப்படு. காரணம் இப்பொழுது இவள் தன்னுடைய மருமகளை பற்றி என்னிடம் இதே வார்த்தைகள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நீயாவது பரவாயில்லை, உன் மருமகளிடம் முகத்தை தூக்கி வைத்து கொண்டாலும், இருவரும் ஒரே வீட்டுக்குள் முட்டிக்கொண்டீர்கள், மோதிக்கொண்டீர்கள். மூவர் கூட்டணி நால்வரானாலும் சண்டைகளும்,அதிகமாகவே நடந்து கொண்டிருந்தது நம் வீட்டில். இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு “நாம்” ஒரு குடும்பமாய் !
ஆனால் இப்பொழுது மருமகளிடத்து சண்டை என்பதெல்லாம் இல்லை. எதிரில் இருந்தால்தானே சண்டை? எங்களை தனியே விட்டு விட்டு அவர்கள் இருவரும் தனித்து சென்று விட்டார்கள்.
இன்னோரு கதையும் சொல்கிறேன் கேள். நீங்கள் சிரிப்பாய் சிரிப்பீர்கள். இவள் மகனிடம் ஒரு முறை மருமகள் எப்படி இருக்கீங்க அத்தை என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பாளா? என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாள். அதற்கு மகன் சொன்னான் “அம்மா
நீ ஒரு காஸ்ட்லி செல் வாங்கி வச்சுக்கோ” அதுல வாட்ஸ் அப், பேஸ் புக் எல்லாம் வச்சுக்கோ, அவளை தினமும் ஹாய் சொல்ல சொல்றேன். இதை கேட்டு அவள் திகைத்து போனாள். காரணம் என்னை கல்யாணம் செய்து வரும்போது அவள் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த ஒரு “வெஸ்பா” ஸ்கூட்டரையே பெரிய அறிவியல் கண்டு பிடிப்பாக நினைத்து கொண்டிருந்தாள். இந்த செல்லை காதில் வைத்து பேசுவதற்கு மட்டும் என்ற அளவிலே உபயோகப்படுத்தி கொண்டிருப்பவள்.
நிதானமாய் ஒரு செயலை செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் பத்தாம் பசலித்தனம் என்று சொல்வது இந்த கால கட்டத்திற்கு சரி என்று தோன்றினாலும், நான் இளமையில் இருக்கும்போது உன் செயல்களையும், அம்மாவின் செய்லகளையும் கிண்டல் கேலி செய்திருக்கிறேன். அப்பொழுது எனக்கு புரியவில்லை, இதன் தத்துவம் “இந்த உலகம்
உன்னை அவசரப்படுத்தவில்லை” நீதான் அவசரப்படுத்திக்கொள்கிறாய்.” நீ கூட சொல்வாய்
எந்த செயலை செய்தாலும் நிதானமாய் செயல்படுவது நல்லது. இது மாதிரியே “வாழ்க்கை” என்பது அவசரமாய் வாழ்ந்து அவசரமாய் நம்மை முடித்து கொள்வது அல்ல. இந்த பிறப்பு என்பது, நமக்கு ஒரு முறை, அது மட்டுமல்ல நமக்கு வாழ்வதற்கு என்று ஒரு காலகட்டத்தை காலமே நிர்ணயித்திருக்கும். அது வரை இந்த பூமியில் நிதானமாய் வாழ்ந்து செல்வோமே? நாளையே இறக்கப்போகிறேன் என்று தெரிந்து விட்டாலும், நாளை வரை நமக்கு கிடைக்கும் பூமியில் வாழும் வாய்ப்பை நாம் ஏன் அவசரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்ன தத்துவமாய் உதிக்கிறான் என்று நினைக்கிறீர்களா? இல்லை அனுபவத்தில் பலனாய் சொல்கிறேன். நீங்கள் இந்த உலகை விட்டு செல்லும்போது உங்கள் இருவருக்கும் வயது ஏறத்தால எண்பதுக்கு மேல் இருக்கும். அது வரை சிற்சில தொந்தரவுகள் தவிர உங்களை மருத்துவமனையிலோ, அல்லது படுத்த படுக்கையாகவோ பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் எழுபதில் இருக்கும் எனக்கு நிரந்தரமாய் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறேன். காரணம் நீ சொன்ன அந்த “நிதான வாழ்க்கை கடை பிடிக்காத காரணமாய் கூட இருக்கலாம்” அவசரமாய் சாப்பிட்டு, அவசரமாய் வாழ்ந்து இப்பொழுதும் அவசரமாய் வாழ்வதற்கு மருந்துகளும், மாத்திரைகளும்தான் தேவைப்படுகிறது..இதை விட வருத்தம் என் மனைவி எனக்கு முன்னால் போய் சேர்ந்ததற்கு கூட இந்த அவசர உலகமும், எல்லா இடத்திலும் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாய் இருக்குமோ என்ற அர்த்தமற்ற கோபம் கூட என்னிடம் உண்டு. காரணம் இவள் வரும் காலத்திலேயே வீட்டு வேலைகள் ஆகட்டும், மற்ற எல்லாவிதமான அறிவியல் உபகரணங்களும் வந்து விட்டிருந்தது. அது மட்டுமல்ல, இவள் அரக்க பரக்க ஓடி பணிக்கு சென்று வந்த சுமை, நானும் இவளும் ஓடி ஓடி சம்பாதித்து வசதிகளை பெருக்கித்தான் கொண்டோம், ஆனால் நிறைய உள்ளங்களை இழந்து கொண்டே இருந்தோம். இது எங்களுக்கு தெரியாமலே நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த உள்ளங்களை தேடி அலுத்து போய் இப்படி தனியாளாய் முதியோர் இல்லத்தில் அமர்ந்திருப்பவனுக்கு மனைவியை இழந்த துக்கம் இப்படித்தானே வெளிப்படும்.
அப்பா, அம்மா, எப்படியோ என் உள்ளத்தை திறந்து உங்கள் முன் கொட்டி விட்டேன்
என்னுடைய வாழ்க்கையில் உங்களுடன் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் மறையும் வரை வாழ்ந்த வாழ்க்கையை பொற்காலமாக கருதிக்கொள்கிறேன். அதற்கு பின் ஐந்தாறு வருடங்கள் மட்டுமே மகனுடன் வாழ முடிந்தது. அதற்கு பின் அவன் மனைவியுடன் எங்களை விட்டு பிரிந்து விட்டான். அதுவரை எப்படி எங்களுடன் இருந்தான் என்று நினைத்த பொழுது அவன் உங்களுக்காக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்கள் மீது வைத்திருந்த பயபக்தியோ அல்லது பயமோ கூட காரணமாய் இருக்கலாம். அந்த பாக்கியம் எங்கள் இருவருக்கும் பேர குழந்தைகளுடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை..
இறுதியாக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை இந்த உலகத்திற்கு படைத்து உங்களோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு.!
இருபது வருடங்கள் கழித்து என் மகன் இதே போல் எங்களுக்கு கடிதம் எழுதுவானா? என்ற எண்ணமும் கூடவே வருகிறதே?.

உங்கள் இருவரின் விலாசமும் மேலோகமாய் இருப்பதால் “ஆகாயம்” என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.

இப்படிக்கு
வாழ்க்கையை அவசரமாய் வாழ்ந்து முடித்து விட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும்
பாலு என்கிற பாலுசாமி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Jan-21, 10:35 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaditham eunthu
பார்வை : 108

மேலே