புதுப்பானைப் பொங்கலிட்டு போற்றிடுவோம் சூரியர

மார்கழி பனிப்பொழிவில்
மாக்கோலம் வாசலில்
பூசணி பூவெய்தி
பூமகள் மலர்ந்தாளே

உறவுகள் கூடி
உள்ளம் மகிழ்வோம்
தைப்பிறக்க வழிப்பிறக்கும்
தைமகளே விரைந்துவா

மஞ்சள் மணங்கமழ
மங்களம் உண்டாக
இனிக்கும் செங்கரும்பு
இன்பம் சேர்க்கட்டும்

உழவுத்தொழில் செழிக்க
உழவன் களிக்க
பஞ்ச பசிதீர்க்க
பகலவன் அருளால்

பச்சரிசி பாசிப்பருப்பு
பக்குவமா கொதிக்க
அச்சுவெல்லம் தட்டிப்போட்டு
அதிகாலையில் பொங்கவைப்போம்

நாட்டுக் காய்கறி
நால்வகை சமைத்து
வாழையிலையில் படையலிட்டு
வாயாரக் குலவையிட்டு

ஏர்தழுவி திளைப்போம்
ஏற்றமிகு நன்னாளில்
நிறைவான நல்வாழ்வு
நித்தம் வரமாக்கு

மாடுகன்னு நல்லாயிருக்க
மனமார வேண்டி
ஒன்னுக்கொன்னா வாழ்வோம்
ஒத்தாசையா இருப்போம்

புதுத்துணி உடுத்தி
புன்னகைச் சூடி
புதுப்பானைப் பொங்கலிட்டு
போற்றிடுவோம் சூரியரை!

எழுதியவர் : அருண்மொழி (14-Jan-21, 10:35 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 179

மேலே