பட்டித்தினிப் பிரவாகம்
அடியே கருப்பாயி
வானம் தான் வெளுத்துருச்சு
வான்கோழி கூவிருச்சு
வயித்து பொழப்போட்ட
வயல் வேலை காத்திருக்கு
வாடி புள்ள சீக்கிரமா
வாங்கருவா எடுத்துக்கிட்டு
இருடி செல்லத்தாயி
வயசுக்கு வந்த புள்ள
வாசலிலே படுத்திருக்கு நேத்து
வாங்கி வந்த அரிசியும் தான்
வட்டையில வேகுதடி
வயசுப்புள்ள வயித்துக்கு
வடிகஞ்சி வச்சிப்புட்டு
வயித்துல ஈரத்துணியிட்டு
வந்துடறேன் விரசாத்தான்
வக்கனையா வாழனும்னு
வாக்கப்பட்டு வந்தவதான்
வாந்தி எடுத்த முதல் நாளே
வந்தவனும் போயிட்டானே
வாய்க்கரிசி வாங்கிக்கிட்டு
தாலி கட்டியவன்
கட்டையில போகயில
கூடத்தான் போக எனக்கு
கொடுப்பினை இல்லையடி.
வயித்த சுமந்துக்கிட்டு
வழியே தும் தெரியாம
வாழ்ந்த வீட்டை வித்தேன் இரு
வயித்தையுந்தான் நிரப்பிடவே
வயிறு வலியெடுக்க
வறண்ட நா உள்ளுளிக்க
வந்து பொறந்ததுவும்
வளைகரம் உடையதாச்சு
வாழ்க்கையும் தான் கடியதாச்சு
பச்சப்புள்ள பசியாத்த
பாலுந்தான் ஊறனும்டி
பட்டினியா நான் கிடந்தா
பாலெப்படி ஊறுமடி
வக்கனையா வாங்கித்திங்க
வசதியுந்தான் இல்லையடி
வண்டிப்பாலு வாங்க
வரவுந்தான் பத்தலடி.
வயித்துக்கு சோறுபோட
வந்தாங்க பலபேரு
பதிலுக்கு தீனி போட
பாவியென்னை கேட்டாக
ஒத்தையில தானிருந்தா
ஒரசித்தான் பாப்பாங்க
ஒதுங்கி போனாலும்
உறவாட நினைப்பாக
பத்தினியை பதம் பார்க்கும்
பத்தாத உலகமடி
உத்தமியா நான் வாழ
உருண்டதெல்லாம் வெறும் பானையடி
காலமெல்லாம் கஷ்டப்பட்டு
காடு கரை வேலை பார்த்து
பட்டினியா தான் கிடந்து
பாசமகள் படிப்பதற்கு
பாத்திரமும் தான் விளக்கி
பட்டினியை பா ஆக்கி
பாவினையே சோறாக்கி
பாசத்தை நூறாக்கி
பாசமகளை வளர்த்தேனே
பத்தாவது படிச்ச மகள்
பள்ளிக்கு சென்ற மகள்
பாதியில திரும்பி வந்தாள்
பாரிஜாதம் பூத்ததுன்னு
திண்ணையில குத்தவச்சு
திருமஞ்சள் தான் அரைச்சு
தங்கத்தை உருமாற்றி
தலை நிறைய பூ முடிக்க
தாய்மாமன் இல்லையடி பெற்ற
தாய் நானும் என்ன சொல்ல
காசு பணம் வேணுமின்னா
கடனாச்சும் வாங்கிடலாம்
பட்டினியா நானிருந்தா
பத்து ரூபாய் சேத்திடலாம்
உறவுன்னு கொண்டு வர
ஒரு நாதி இல்லையடி
கட்டியவன் குடும்பமெல்லாம்
காரியத்தோட போச்சுதடி
ஊருல தான் சொல்லிப் புட்டு
உச்சந்தலை தண்ணி விட்டேன்
உடுப்ப மட்டும் மாத்திவிட்டு
உலக்கையை தான் தாண்டவச்சேன்
ஓரமாத்தான் என் உசிரை வச்சேன்
உள்ளத்திலே தெம்பை வச்சேன்
வந்து பொறந்தவள
வாழவைக்க வேணுமேன்னு
வயக்காட்டு வேலை செஞ்சும்
வயிறார பத்தலேன்னு
வண்டலிலே விறகு வெட்டி
வாழ்க்கையைத் தான் ஓட்டுனேனே
விறகு வெட்டி சந்தையில
விற்பனைக்கு போகையிலே
விளைஞ்ச காளையெல்லாம்
விரசமாத்தான் பார்ப்பாங்க
வீண்வம்பு இழுப்பாங்க
வழுக்கி நான் விழுந்துப்புட்டா
வயித்துல பொறந்தவளின்
வாழ்க்கை வீணாகும்மேன்னு
வந்த விலை விறகை வித்து
வரகரிசி வாங்கியுந்தான் முந்தியில முடிஞ்சிக்கிட்டு
வீட்டுக்கு திரும்பயிலே
வானமும் தான் கருத்துருண்டி வழியும் தான் மறைஞ்சிருண்டி
வயசுக்கு வந்த புள்ள
வாசலிலே தனியிருக்கா
காவலுக்கு யாருமில்லை
காளியாத்தா காப்பாத்து
காத்து கருப்பு அண்டாம
பச்சப்புள்ள தனியிருக்க
பரமன் தான் துணையிருக்க
வேண்டும் வரம் வேண்டிக்கிட்டு
விரசாத்தான் வீடு வந்து
வயசுப்புள்ள வயித்துக்கு
வரகரிசி கஞ்சி காய்ச்சி
வரமிளகாய் உடனிருக்க
வாயில தான் வைக்கயிலே
கண்ணீரும் கொட்டுமடி
உப்புந்தான் சரியாகுமடி
கஞ்சியால பாதி ரொப்பி
பச்சைத் தண்ணியாலே மீதி ரொப்பி
படுக்கைக்கு போகையில
பாவி மனம் துடிக்குதடி
பழங்கதையை நினைக்குதடி
அடியே ராசாத்தி உன்
அப்பன் போயி நாளாச்சு
ஆத்தா உனை வளர்க்க
ஆதாரம் போதலடி
அடிமேல் அடியெடுத்து
அரைகிணறு தாண்டியாச்சு
முதுகுத்தண்டு இடம்கொடுத்தா
முழுக் கிணறும் தாண்டிடலாம்
பத்தாவது படிச்சா போதும்
படிப்பையுந்தான் நிறுத்திடலாம்
பால்மாடு கடனா வாங்கி
பாக்கிக்காலம் ஓட்டிடலாம்
மூணு வேளை சோறு பார்க்க
முக்கால் வயசு முடிஞ்சு போச்சு
கன்னி உன்னை கரைசேர்க்க
காலம் முழுதும் ஒரு வேளை தானோ
மகளின் பரிதவிப்பு
ஆத்தா நீயும் அழுகாதே
கதிகலங்கிப் போவாதே
கடல் பயணத்துல
கட்டுமரம் ஓட்டையானா
கரை எப்படி சேர்றது
துடுப்பாக நானிருக்கேன்
தூண்டிவிட நீயிருக்கே
துன்பமெல்லாம் போக்கிடலாம்
துயரெல்லாம் நீக்கிடலாம்
ஆத்தா எனை வளர்க்க
அங்கமெல்லாம் தேய்ச்சுபுட்ட
அப்பன் தான் இல்லாம
அன்பை ஊட்டி வளர்த்துப்புட்டே
பந்தக்காலு பார்த்துப்புட்டா
பாவி நானும் உன்னைவிட்டு
பல தூரம் போகவேண்டும்
பாசத்தை அறுக்க வேண்டும்
சாமி உனைப் பிரிஞ்சு
சத்தியமா போகமாட்டேன்
பட்டினியைப் போக்கனும்னு
படியேறி வாழமாட்டேன்
பட்டு உடுப்பு தேவை இல்லை
பந்தலிலே நாட்டமில்லை
முடிஞ்சவரை வேலை பார்த்து
மூணுவேலை சோறு தாரேன்
முடிஞ்சவரை வேலை பார்த்து
மூணுவேலை சோறு தாரேன்
அதுவும்
முடியாம போச்சுதுண்ணா
சாவிலும் உன்கூட வாரேன்...