தலைவணங்கி ஏற்கிறேன்

தலைவணங்கி ஏற்கிறேன் !
--------------------------------------------

வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதை எழுத நினைத்தேன் !
எண்ணத்தில் பரவிக்கிடந்த
எழுத்துக்களை அழைத்தேன் !

முரண்டு பிடித்தன
முரட்டுக் காளைகளாய் !
ஒன்றிணைய மறுத்தன
ஒற்றுமையை மறந்தன !

காரணத்தைக் கேட்டதும்
கோபத்தில் வெகுண்டன !
ஓய்வெனில் ஒதுங்குகிறாய்
தேவையெனில் கெஞ்சுகிறாய் !

அடிமைகளல்ல நாங்கள்
அடிபணிந்து ஓடிவர !
உயிர்மெய்யுள்ள நாங்கள்
உலகில் மூத்தவர்கள் !

இலக்கணம் வகுத்தவர்கள்
இலக்கியத்தில் சிறந்தவர்கள்
இமயமளவு உயர்ந்தவர்கள்
இப்புவனம் புகழ்பவர்கள் !

சிந்தையை உழுதிடுக
சிந்தனையை விரித்திடுக
கவிதைகள் படைத்திடுக
கவிவானில் பறந்திடுக !

கடந்ததைப் புறந்தள்ளு
நடப்பதைப் புரிந்திடு !
காலத்தைஇனி பயனாக்கு
காண்பவர்க்கு பலனாக்கு !

தாய்மொழி எனக்குரைத்த
வாய்மொழி அறிவுரையிது !
தமிழன்னை ஆணையை
தலைவணங்கி ஏற்கிறேன் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-21, 8:58 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 217

மேலே