சங்குவண்ணன்



      
            "டேய்..சங்கு...நாளைக்கு ஜல்லிக்கட்டுல  ஜெயிச்சிடுவியிடா.. ?
பரம்பரை பரம்பரையா நாம தோத்ததே இல்ல.. என்னா..? புரியுதாடா ?  " மன்னையன்
மீசையை முறுக்கியவாறே சங்கு வண்ணனை கேட்டுக் கொண்டே பெருமையாகப் பார்த்தார்.

            சங்கு அவர் அருகில் வந்து  அவரையே  மேலும் கீழும் பார்த்தான்.

           " டேய்.. அப்பா கேட்குறாங்கல்ல.. நீ பாட்டுக்கு பேசாம நிக்கிற..? நாளைக்கு ஜெயிச்சு அந்த  மாருதி காரை  வாங்குற.. அதுல போயிதான் உனக்கு பொண்ணு பாக்கப் போறோம்.. என்ன..? "

           சங்கு வண்ணனுக்கு மன்னையன் மேல் ஏகப்பட்ட மரியாதை. தலையை மட்டும் ஆட்டி விட்டு கிணற்றுப்பக்கமாக நகர்ந்தான்.

            மன்னையன் கண்ணாடியைப் பார்த்து கருப்பும் வெளுப்புமாயிருந்த நரைத்துப்போன கடா மீசையை  முறுக்கி இன்னும்  கூர்மையாக்கிக் கொண்டார். 

           'அந்த  காளையார் கோயில் நாட்டமைக்காரன் ரொம்ப நாளா  மண்டைய சிலுப்பிக்கிட்டே நிக்கிறான். அவன் முகத்துல நாளைக்கு என் சங்கு வண்ணன் கரியைப் பூசப்போறான்.' நாளைய  வெற்றியின் ஆனந்தம் மனதை நிறைக்க திண்ணையிலேயே உறங்கிப்போனார் மன்னையன்.

           இரவு மணி பன்னிரண்டு.

           காளையார் கோயிலின் நாட்டாமை வீடு.

           " டேய்.. மருதா.. நான் சொன்ன வேலையை சரியா செஞ்சிடுவியா..? சொதப்பிடாதேடா. சங்கு வண்ணன் மட்டும் ஜெயிச்சிட்டான்னா .. நான் வெளியில தலை காட்ட முடியாது.."

           " இல்லங்க ஐயா.. சரியாவே செஞ்சிடுவேங்கய்யா.."

            "சரி.. புறப்படு.. "

             *                         *                                                                          *                          *

            மருதன்  மடியில் செருகியிருந்த சயனைடு குப்பியையும், கத்தியையும் ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொண்டு மன்னையன் வீட்டுச்சுவரில் ஏறி தோட்டத்தில் குதித்தான்.
மெல்ல மெல்ல இருட்டில் ஊர்ந்து சங்கு படுத்திருந்த இடத்திற்கு வந்து சயனைடு குப்பியைத் திறந்தான். சங்கு வண்ணனின்  கழுத்தை அழுத்திப் பிடித்தவன் அவனது வாயில் சயனைடை ஊற்ற முயன்றான்.

             " ஆ...." என்ற அலறல் கேட்ட மாத்திரத்தில் மன்னையன் வீட்டு மின்விளக்குள் எரியத் தொடங்கின.

             மன்னையனும் அவரது மனைவியும் ஓடி வந்தார்கள். மருதன் வயிறு கிழிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

             மன்னையன் சங்கு வண்ணனை குனிந்து பார்த்தார். இரத்தம் சொட்டும் தன் இரண்டு கொம்புகளோடு அவரது முகத்தை முகர்ந்தான் சங்கு.

                                                                    *    *   *

87 வகை நாட்டு மாடுகள். நம் சொத்து. அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்து விட்டோம்.

87 வகை மாடுகளின் பட்டியல்.. இதில் உள்ள சங்கு வண்ணன்தான் நம்ம ஹீரோ..!                       



இன்னும்..
வெள்ளைப்போரான்,மயிலைக்காளை,வெள்ளை,கழூத்திகாபிள்ளை,கருக்கா மயிலை,பணங்காரி,சந்தனப்பிள்ளை,செம்பூத்துக்காரி,காரிமாடு, புலிக்குளம்காளை..

வாழ்ந்திருக்கான் தமிழன்.



      
          
          

எழுதியவர் : ராஜசேகரன் (22-Feb-21, 5:24 pm)
சேர்த்தது : இராசசேகரன்
பார்வை : 118

மேலே