62 இலியிச்
அது இலியிச்சின் கை எழுத்துக்கள் என்று நளினி கூறியதும் நான் வாங்கி ஆவலோடு பார்த்தேன்.
ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் சரியான இடைவெளி இருந்தது. அது கை நடுக்கத்தோடு எழுதி இருந்தது.
அந்த எழுத்துக்களும் நம்மோடு பேசும் என்ற உணர்வை கொடுத்த போது நான் வாசிக்க முற்படாமல் அதை நளினியிடம் திருப்பி கொடுத்தேன்.
இதை ஏன் இவர் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று லிப்னியிடம் கேட்டேன்.
லிப்னி பெரியவரோடு சற்று நேரம் பேசிவிட்டு எங்களிடம் சொன்னது இதுதான்...
இலியிச் மழை பொழிந்த நள்ளிரவில் இங்கு வந்து இருக்கிறான். அச்சமயம் அவரிடம் அவன் எதுவும் பேசாமல் கீழே அமர்ந்த நிலையில் மயங்கியும் போய் இருக்கிறான். இவர் அவன் கண்கள் வீங்கி இருப்பதை பார்த்து அது விஷம் கொண்ட ஒரு ரெனோ குளவியின் கடியால்தான் வந்தது என்பதையும் புரிந்து கொண்டு அதற்குரிய மருத்துவத்தை செய்ததும் இரண்டு நாட்கள் கழித்துதான் கண் விழித்து இருக்கிறான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாது சில நாட்கள் சென்று இருக்கிறது. கிழவனாரோடு இருக்கும் போது அவருக்கு மீன்கள் பிடித்தும் இந்த குடிலுக்கு சில தச்சு வேலைகளும் செய்து உதவி இருக்கிறான் என்று லிப்னி முடித்தார்
இதை எப்போது எழுதினான் என்று கேளுங்கள் இன்னும் வேறெதுவும் இருக்கிறதா என்றும் கேளுங்கள் என நான் லிப்னியை துரிதப்படுத்தினேன்.
லிப்னி அவரிடம் கேட்க அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் லிப்னியை பார்த்து ஏதோ சொன்னார்.
க்ரோனித்தியா மழை மாதத்தில் கெஜங் நாளில் அந்த மனிதன் இங்கு வந்தான் என்று சொல்கிறார் என்றபடியே கிழவனாரை மீண்டும் திரும்பி பார்த்தார் லிப்னி.
இந்த நாட்கள் என்பது ஒருவேளை பௌகாணிக காலெண்டரின் நாட்கள் போலும் என நளினியிடம் கூறினேன்.
அவர் கண்கள் குவிந்து நின்றது. காலத்தை வசீகரித்து அதில் அவர் குரல் நழுவி செல்ல இலியிச் வந்து பேசுவது போல் இருக்கிறது என்றாள் நளினி.
நளினி அவரை அமைதியாக பார்த்து கொண்டே இருந்தாள். இலியிச் நேரே இருப்பது போல் அவள் உணரக்கூடும் என்று நினைத்தேன்.
முதியவர் தெளிந்த குரலில் எந்த ஒரு அனுமானமும் இல்லாமல் பார்த்து கொண்டிருப்பதை சொல்வது போல் சருகொலியில் பேச ஆரம்பித்தார்.
இதுவும் கேட்க இலியிச்சின் குரல் போலவே எனக்கு தோன்றுகிறது என்றாள் நளினி.
லிப்னியை பார்த்தேன். அவர் அந்த முதியவர் சொல்வதை கவனமாக கேட்டு கொண்டிருந்தார்.
நானும் அது இலியிச் என்றே ஏற்று கொள்ள விரும்பினேன். கேட்க அவ்வளவு அழகான குரல்தான்...
தரையில் ஏதேதோ வரைந்தும் அழித்தும் கோடுகளை போட்டு கொண்டும் அவர் பேசினார். அது அவரின் சுபாவம் என்று நான் நினைத்தேன்.
நளினி, அவைகள் அனைத்தும் ஒரு குறியீடுகள் என்றாள்.
=========வரும்.============