முடியாத முடி புராணம்
அன்று முடி சூடிய மன்னர்கள் காலத்திலே இருந்து, இன்று முடி சூடா மன்னர்களாகிய நம்ம காலம் வரையிலும் நம்ம நாட்டுலே முடிக்கு நாம் ஒரு சிறப்பிடம் தந்து வந்திருக்கிறோம்.
முடி ஆட்சியிலே இருந்து, குடி ஆட்சி வந்த காலகட்டத்திலே நம்முடியில், முடிவில்லா மாற்றங்கள் பல நடந்து வருகின்றன. ஆண்கள் முடி இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்களைக் கண்டு விட்டது. இன்றைக்கு உலகம்முழுவதும் பெரும்பாலான ஆண்கள் கிராப் என்று சொல்லக்கூடிய தலை முடி வைத்துக்கொள்கிறார்கள். இதிலும்கூட தலைமுடியை எவ்வளவு விதவிதமாக வெட்டிக் கொள்ள முடியுமோ, அப்படி வெட்டிக்கொள்கிறார்கள். பெண்களைப்பொருத்த வரையில் நம்நாட்டில் இன்று ஜடை பின்னிக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இடைக்காலத்தில் குதிரைவால் கொண்டை ஒரு ஃபேஷனாக மாறியது. பலபெண்கள் தங்கள் முடியை வாராது பாண்டிய மன்னன் அவையில் இருந்த கண்ணகியின் கோலத்தில் அதைப் பறக்கவிட்டு அப்படிப்பட்ட முடியுடன் இருப்பதை விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப்பார்த்த பழைய காலத்துப்பாட்டி தன் பேத்தியைப்பார்த்து “ ஐயோ, இந்தச்சின்ன வயசிலே இந்தப்பெண்ணுக்கு இந்த நிலையா என்று மனம் உருக, “ இல்லை , பாட்டி, இதுதான் இப்போதைய ஃபேஷன் என்று கூறி பாட்டியை சமாதானப்படுத்தினாள்.
இன்று பல பெண்களும் தங்கள் கூந்தலை பரவ்விட்டபடி இருக்கிறார்கள். இதைத்தவிர இப்போது பாப் செய்துகொள்வது பரவலாகக்காணப்படுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும் நான் சொல்லப்போவது அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்தவிதமான கிராப்பாக இருந்தாலும் பாப்பாக இருந்தாலும் பொதுவான ஒரு பிரச்சினையாகும்.
இது குறிப்பாக நம்ம ஊர் பிரச்சினையாகும். எல்லாரும் ஏதோ ஒரு நேரத்திலேயாவது தங்கள் தலை முடியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமாட்டாங்க. நம்ம ஊரிலே பொதுவா எல்லார் முடியும் நல்ல கருப்பாகத்தான் இருக்கும். இதுலே அதிசயமோ ஆச்சரியமோ படவோ ஒண்ணுமே இல்லை. ஏதோ ஆயிரத்து அல்லது பத்தாயிரத்துலே ஒண்ணு ரெண்டு பேருக்கு தலை மயிர் செம்பட்டையா இருக்கிறது உண்டு. அவங்களை வேத்து கிரகத்துலே இருந்து வந்தவங்க மாதிரி நம்ம ஜனங்க பாப்பாங்க. நம்ம ஜனங்க கருப்பு நிறத்தை விரும்பல்லைனாலும் தலை மயிர் கருப்பா இருக்கறதைத்தான் பெரும்பாலானோரும் விரும்பறாங்க.
நம்ம ஊரிலே வெள்ளைத்தோலுக்கு சொன்னாலும், சொல்லாட்டியும் ஒரு மவுசு. பேச்சளவுலே “ கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு” ன்னு பாடினா கூட மனசுக்குள்ளே வெள்ளையா இருக்கணும்னு நெனக்கிறவங்கதான் ஜாஸ்தி. வெள்ளைக்காரன் ஆட்சியிலே நாம இருந்ததாலோ என்னவோ தெரியல்லே அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டுப்போச்சு.
பாருங்களேன். ஒரு பையனுக்குப் பெண் பாக்கும்போது மொத கேள்வியே பொண்ணு சிவப்பா, கருப்பாங்கிறதுதான். என்ன இப்படிச்சொல்றேனேன்னு பாக்கறீங்களா? கருப்பைப்பத்தி பெருமையா பேசற சினிமாவுலே கூட அங்கே நடிக்கிற நடிகைங்க சிவப்பாத்தான் இருப்பாங்க. இது நம்மையையும் மீறி நம்ம உடம்புலே ஊறிப்போன சமாசாரம். அதுலே பொண்ணு கருப்பா இருக்கிறதுதான் பிரச்சினை. ஆம்பளை கருப்பா இருக்கிறதைப் பத்தி யாரும் கவலைப்படறது இல்லே. எனக்குத்தெரிஞ்சு ஒரு நல்ல கருப்புப் பையனுக்குப் பெண் பாத்தாங்க. அந்தப்பையனோட பெத்தவங்க அந்தப்பொண்ணு நல்ல வசதியான வீட்டுப்பொண்ணுன்னு தெரிஞ்சும், பொண்ணு கருப்புன்னதும் முகம் சுளிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா உங்க பையன் கருப்புத்தானேன்னு கேட்டா அதைக் கண்டுக்கவே இல்லை. இதுதான் நம்ம ஊரு. சிலபேருக்கு இதனாலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கொஞ்சம் மாநிறமா இருக்கறவங்களைப்பாத்தா கூட அவங்க வேறே இனம், நாங்க வேறே இனம்னு வேத்துமைப்படுத்தி அதை வெறுப்புன்னு சொல்லக் கூடிய அளவுக்கு வளர்த்து விட்டுட்டாங்க. நம்ம ஊரிலேயே கொஞ்சம் வெள்ளையா இருக்கிறவங்களைப்பாத்தா பொறாமைப்படறவங்க உண்டு. ஆனா இவங்களையே கருப்புன்னுதான் அந்த மேலைநாட்டுக்காரன் சொல்வானே ஒழிய, வெள்ளைன்னு ஒத்துக்க மாட்டான். ஆனா நம்ம ஊர்க்காரனைப்பொறுத்தவரையிலும் அவங்க வெள்ளைதான். வேறே இனம்தான்.
ஆனா இப்படி வெள்ளைத்தோலை விரும்பறவங்க, பொண்ணுக்குத் தலை முடி நல்ல வெள்ள வெளேர்னு இருக்குன்னா சரிம்பாங்களா? இதுலேதாங்க பிரச்சினையே ஆரம்பமாகுது. 18 அல்லது 20 வயசே ஆன ஆம்பிளையோ பொம்பளையோ அவங்களோட கரு கரு முடியிலே ஒரு வெள்ளி முடி தெரிஞ்சிச்சுன்னா “ஆகா எனக்கு வெள்ளி முடி இருக்கு”ன்னு சொல்லி கொண்டாடவா போறாங்க? இங்கிலீஷ் ஸ்டோரி பொய்ம்( story poem)லே வேணா அப்படி வரலாம். ஆனா அது நம்ம ஊருக்குப் பொருந்தாது. அப்படி ஒரு வெள்ளி முடியை அவங்க தலையிலே பாத்துட்டா அவங்களோட முதல் ரியாக்ஷனே ‘அய்யய்யோ‘ தான். அண்ணிக்கு ராத்திரி தூக்கம் போச்சு. இந்த அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
உடனே நீங்க பேப்பர்லே வர விளம்பரங்களைப் பாக்க ஆரம்பிச்சுடுவீங்க. எந்த எண்ணையை உபயோகப்படுத்தினா தலை முடி கருப்பாகும் அப்படீன்னு தேட ஆரம்பிச்சுடுவீங்க.
“எங்கள் மருதாணி எண்ணையை உபயோகித்தால் தலை முடி அடர்த்தியாக கருகரு வென்று இருக்கும்” னு ஒரு பத்து கம்பெனிகளாவது விளம்பரப்படுத்தி இருக்கும்.
நீங்க எதை வாங்கறதுன்னு புரியாம திணறிக்கிட்டு இருக்கும்போது, உங்களுக்கு ஃப்ரீயா அட்வைஸ் பண்ண நேத்து பொறந்த குழந்தைகூட வந்துடும். ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிஞ்ச எண்ணையையோ, தைலத்தையோ, க்ரீமையோ பத்தி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச்சொல்லி, உங்க தலையிலே அதைத் தடவறதாலே என்ன ஆகுதுன்னு பாத்து தங்களோட அனுபவத்தைத் திருத்திப்பாங்க.
ஒருகம்பனி ‘எங்க மாங்குடி எண்ணையை உபயோகிச்சா, உங்க முடி வெள்ளை ஆகாது. வெள்ளை ஆகவே ஆகாது. இது காரண்டி. அப்படி வெள்ளை ஆயிருந்தா உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்போம்’ என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அது என்ன நஷ்ட ஈடுங்கறது யாருக்கும் தெரியாது. அதைப்பாத்த அத்தனை இளைஞர்களும், இளைஞிகளும், தங்கள் தலை நரையை வருமுன் தடுக்க இந்த எண்ணெயை உபயோகித்தனர். இப்படி உபயோகித்த பல ஆண்களும் முப்பது வயதுக்குள்ளேயே முடியை இழந்து கம்பனியிடம் கம்பளெயின் செய்ய, அவர்கள்
‘நரைக்காது என்றுதானே காரண்டி கொடுத்தோம். உங்கள் தலை வழுக்கையாகத்தானே ஆயிருக்கு. எனவே இனிமேல் இந்த ஜன்மத்தில் என்ன, அடுத்த ஜன்மத்தில்கூட உங்களுக்கு வெள்ளை முடி பிரச்சினையை வராது’ என்று கை கழுவி விட்டனர்.
ஆனா அது என்ன மாஜிக்கோ தெரியல்லே. நீங்க குளிக்கும்போது உதிருர முடியைப்பாத்தீங்கன்னா, அது பெரும்பாலும் கருப்பு முடியாத்தான் இருக்கும். அதே போல முடியை சீவும் போது சீப்பு நிறைய வர முடியெல்லாம் அநேகமா கருப்பு முடியாத்தான் இருக்கும். தலையிலே இருக்கிற வெள்ளை முடி உதிராம கொள்ளாம அப்படியே கோந்து போட்டு ஒட்டினமாதிரி தலையிலேயே ஒட்டிக்கிட்டு இருக்கும். நாளாக நாளாக தலையிலே வெள்ளை முடியோட ‘ டாமினேஷன்’ ஜாஸ்தி ஆயிக்கிட்டே போகும். கொஞ்ச நாளிலே ஈன்ஸ்டீன் லெவலுக்கு உங்க தலைமுடி வந்துடும். அறிவு உள்ளவங்களுக்கெல்லாம் வழுக்கையோ வெள்ளை முடியோ இருக்கும்னு உதார் விடுங்க. எத்தனையோ கட்சிகளோட உதாரை எல்லாம் நம்பற ஜனங்க இதை நம்பாம போயிடுவாங்களா என்ன? நம்ம ஊரிலே சாமியாரா ஆகணும்னு ஆசைப்படறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். “சாமி” ன்னு சொல்லி அவர்காலிலே விழுந்து கும்பிடாதவங்களே இருக்கமாட்டாங்க. வெள்ளை முடிக்கும், வெண் தாடிக்கும் அப்படி ஒரு மதிப்பு இருக்கு.
ஆனா வெள்ளைமுடியைத் தங்கள் தலையிலே பாத்தவுடனே கவலைப்படறவங்களை என்ன செய்ய முடியும்? எத்தனை நாள்தான் வெள்ளைமுடியை நெனச்சு கவலைப் பட முடியும்? வயசாக, வயசாக எல்லாப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இயற்கையா நடக்கிற விஷயம் இதுதாங்கிற ஞானோபதேசம் வந்தா பிரச்சினை இல்லை. இப்போதுதான் ஒரு புது பிரச்சினை ஆரம்பமாகுது. அதுதான் தலைக்கு டை அடிச்சிக்கிறது.
‘ஐ வாண்ட்டு டை ‘ அப்படின்னு ஒருத்தி அவ புருஷனுக்குப் போன் பண்ணினா. இவளை எப்படி கழட்டிவிடறதுன்னு தெரியாம இருந்த அவன் இதைக்கேட்டதும் மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டான். ‘ ஆகா! அவளே சாகத்தீர்மானிச்சுட்டாளா? என்காட்டுலே இனிமே மழைதான்னு’ சந்தோஷப்பட்டாலும்,அதை வெளியிலே காட்டிக்க முடியுமா?. அதனாலே இல்லாத துக்கத்தை வரவழைச்சிக்கிட்டு “ மை டியர், ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததே? என்ன ஆச்சு உனக்குன்னு? ‘ கவலையோட கேட்டான். அதுக்கு அவ ‘எனக்கு ஒண்ணும் ஆகல்லே. கவலைப்படாதீங்க. நீங்க ஆபீஸிலிருந்து வரும்போது எனக்கு அட்லாண்டா கருப்பு டை வாங்கிட்டு வாங்க’ ன்னு சொன்னதும் அவன் முகம் சுட்ட கத்தரிக்கா மாதிரி வாடினதை அவமட்டும் பாத்திருந்தா கதையே வேறே மாதிரி ஆயிருக்கும். அதென்ன அட்லாண்டா டைன்னு கேக்கறீங்களா? நீங்க அந்தப் பொண்ணைத்தான்கேக்கணும்.
இப்ப எல்லாம் ஒரு சில நாரீமணிகள் கலர் கலரா டை அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கேட்டா அதுதான் இப்போ ஃபேஷன்னு சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்ச அம்மணி ஒருத்தருக்கு திடீர்னு தலைமயிர் செம்பட்டையா இருந்தது. என்னன்னு கேட்டதுக்கு அவங்க இப்ப ‘நாடகமே உலகம்’ படத்துலே நடிச்ச தன் ஃபேவரிட் நடிகையான நந்திதா, ‘பழம் புளிக்கும்’ படத்துலே நடிச்ச பத்மஜா இவங்க எல்லாம் இப்படித்தான் செம்பட்டையா தலை முடியை டை பண்ணிக்கிறாங்க. அதைப்போல தான் தானும் பண்ணி இருக்கேன்’ என்றார். “ டை அடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் அதைக் காப்பி அடித்துப் பின் செல்பவர்” னு சொன்னா நாம அதுக்குமேலே என்ன பேசமுடியும்?
இதுலே திடீர்னு ஒரு நாள் சரியான டையை யூஸ் பண்ணல்லைன்னா அதனாலை கான்சர் வர சான்ஸ் இருக்குன்ன நியூஸ் வந்த ..உடனே எல்லாரும் டை ஆராய்ச்சியிலே இறங்கிட்டாங்க. ‘எங்க டையிலை அம்மோனியா இல்லை, எங்க டையை யூஸ் பண்ணினா, நீங்க செத்தாலும் உங்க தலை வெள்ளையாகாது’ என்ற விளம்பரங்கள் வரலாயின. இதுக்காக நாம செத்து இந்த உண்மையை ப்ரூவ் பண்ண வேண்டியதில்லை.
நீங்க இதுலே சந்தோஷப்படற ஒரே சமாசாரம் உங்க வயசுள்ள எல்லாப் பெண்களுக்கும் தலைமுடி இப்படி ஆறதுதான். அது எவ்வளவு பெரிய சினிமா ஆக்டரா இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய உலக மகா அழகியா இருந்தாலும் சரி, தலையிலேமுடின்னு ஒண்ணு இருந்தா, இப்படி ஆறதை வயசாக வயசாக தடுக்க முடியாதுங்கறதுதான். ஆனால் 1000த்துலேயோ, 10000 த்துலேயோஒருத்தருக்கு முடி வெளுக்காம போகலாம், அல்லது சிலபேர் முடி வெளுக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னேயே அவங்க சிவலோகப்ராப்தியையோ, வைகுண்டப்ராப்தியோ அடைஞ்சி இதுலே இருந்து தப்பிச்சிருக்கலாம். அவங்களைப்பாத்து நீங்க பொறாமைப்படறதுலே அர்த்தமே இல்லை. ஏன்னா எனக்குத்தெரிஞ்ச இன்னொரு கேசுலே ஒரு பொண்ணுக்குப்பெரிய கவலை அவ முடி கருப்பா இருக்கிறதுங்கறதுதான். ஏன்னு கேட்டா “ அங்கிள், என் முடி இவ்வளவு டார்க் ப்ளாக்கா இருக்கிறதாலே என்னாலை எந்த டையையும் சரியா யூஸ் பண்ண முடியறது இல்லே.’ அப்படீன்னுச்சு. இது எப்படி இருக்கு?
சில பெண்கள், அப்படி சொல்றது தப்பு, சில பாட்டிகள், தங்கள் தலையில் மிகுந்து இருக்கும் கூந்தலைப் பாத்து அந்தக் காலத்துலே எப்படி என்பாட்டி தலையைக் கோதி விரல்களால் முடியை மூணாப்பிரிச்சி பின்னிப்பின்னி அழகா ஜடை போடுவா தெரியுமா? அப்படி ஒரு ஜடை போடறதுக்குப் பாட்டி முக்கால் மணி நேரம் எடுத்துப்பா. அந்த ஜடை என் முழங்காலை எட்டும். அப்படி அடர்த்தியா இருந்த என் ஜடை, இப்படி எலிவாலாய்ப்போயிட்டுதே’ன்னு, ‘ எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன்’ னு கூனிக்குறுகி விவேக் மாதிரி கவலைப்பட்டு, அதுக்கு ஏதோ ஒரு தைலம் பூசி இருக்கிற அஞ்சாறு முடியையும் பின்னோ பின்னுன்னுன்னு பின்னி அதை ஒரு சோகப்பார்வையோட பார்ப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
பெண்களுக்கு வழுக்கை விழாததாலே அந்தப்பிரச்சினை அவங்களுக்கு இல்லை. அபூர்வமா சில பேருக்கு அறைகுறையா அப்படி ஆகலாம். ஆனா பல ஆண்களுக்கும் முடி வெள்ளையாரதைவிட, தலை வழுக்கையா ஆறதுதான் பெரிய பிரச்சினை. இதுக்கும் இப்ப ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்துட்டுது. நாங்கள் எங்கள் லேபிலே 20 ஆண்டுகளாக ஒரு அமெரிக்கக்கம்பனியுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ததன் விளைவாக நாங்கள் கண்டுபிடித்த எங்கள் வழுக்கைத்தைலத்தை உபயோகித்துப் பாருங்கள். . உங்கள் தலை வழுக்கை ஒரே ஆண்டிற்குள் மறைந்து உங்கள் தலையில் புல் முளைத்த டர்ஃப் போல அடர்த்தியாக முடி வளருவதற்கு உத்தரவாதம். அப்படி வளரவில்லை என்றால் எங்கள் சொந்த செலவில் உங்களுக்கான டெய்லர்மேட் ( tailor made) கருப்பு விக் தரப்படும் “ என்று ஒரு விளம்பரம். மற்றொன்று 32 மூலிகைகளைப் பயன்படுத்தி சித்தர்கள் சொன்னபடி தயாரித்த தைலம். இதைப் பயன் படுத்தினால் முடி உதிரவே உதிராது. முடி உதிர்ந்த சித்தர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது” அப்படின்னு ஒரு விளம்பரம். நாங்கள் மேலை நாட்டு முறைப்படி ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் செய்வது எங்கள் ஸ்பெஷாலிட்டி. குடு குடு கிழவர்கள் கூட தாங்கள் இழந்த இளமையைப் பெற்று மகிழ்ச்சியாக மறு வாழ்வு வாழ்கிறார்கள்” என்று ஒரு விளம்பரம். அதை உறுதிப்படுத்துவதேபோல் எங்கள் ட்ரான்ஸ்பிளாண்ட் லேபிற்கு வருமுன் இப்படி இருந்தவர், எங்கள் சிகிச்சிக்குப் பின் இப்படி ஆகிவிட்டார் என்று அவர்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்வதோடு மட்டுமில்லாமல் அதை ஒரு முக்கால்மணி நேர வீடியாவாக வேறு போட்டு விளம்பரப்படுத்தினார்கள். அதற்கும் நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு போய் தங்கள் வழுக்கையை மறைத்து தங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக்கொள்ள நூற்றுக்கணக்கானவர்கள் வரும்போதுதான், நம்நாட்டில் இத்தனை வழுக்கையர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைக்கும்.
ஒரு கல்யாணம் ஆகாத பெண் என்னிடம் தனக்கு வழுக்கைதான் பிடிக்கும் என்று சொன்ன போது நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறகு விசாரித்ததில் அப்பெண் இளநீர் வழுக்கையைப் பற்றி சொல்கிறார் என்பது தெரிந்தது. எனக்குத் தெரிந்த தலை முடி நரையின் காரணமாகவும், இள வழுக்கை காரணமாகவும் கல்யாணம் ஆகாமலே கடைசிவரையில் பிரம்மசாரிகளாகவும், பிரம்மசாரிணிகளாகவும் சிலர் இருந்ததும் , இறந்ததும் எனக்குத் தெரியும். எனவே அவர்கள் வாழாவெட்டியாகப்போக அவர்களுடைய வழுக்கையும், வெள்ளை முடியுமே காரணம்.
ஆனா எனக்கென்னவோ வழுக்கைங்கறது ஆம்பளைங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்னு தான் தோணுது. தலைக்கு எண்ணையோ, தைலமோ தடவத்தேவை இல்லே. தலை சீவிக்க வேண்டிய ரோதனை இல்லை. காத்தடிக்குதே. தலை கலையுதேங்கற கவலை இல்லை. அதை விடுங்க. அவங்க சலூனுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இதனால் வருஷா வருஷம் ஏறர விலைவாசி மாதிரி வருஷாவருஷம் ஏறர முடி வெட்டிக்கிற செலவும் இல்லை. கொரோனாவலே மாசக்கணக்குலே க்வாரன்டின் இருக்கும்போது மத்தவங்களைப்போல இவங்க கவலைப்பட வேண்டியதே இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கத்தெரியாதவங்க தான் இதைப்பத்திக் கவலைப்படுவாங்க.
இப்ப ஒரு நாலைந்து மாதமா பூதாகாரமான ஒரு பிரச்சினை நம்நாட்டுலே மட்டும்இல்லே. உலகம் பூராவும் தோணியிருக்கு. இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது, அவரவர் 1940 களிலே இருந்த மாதிரி பாகவதர் கிராப்பு வளர்க்க ஆரம்பிச்சுட்டனர். அதென்ன பாகவதர் கிராப்பு? 40 களிலே ரிலீஸ் ஆன தியாகராஜபாகவதர் நடிச்ச படங்களைப் பாத்தீங்கன்னா தெரியும். கொரோனா ஆம்பிளைங்க முடி ஸ்டைலை மாத்தி அவங்களை 1940க்கே அழைச்சுகிட்டு போயிட்டுது. இது புடிக்காத சிலர் செல்ஃப் ஷேவிங் செஞ்சுக்கறாப்போல செல்ஃப் கட்டிங் செஞ்சுகிட்டு ஊரிலே இருக்கறவங்களை எல்லாம் சிரிக்க வச்சாங்க. ஒரு சிலபேர் வீட்டுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் முடியை மழிச்சிக்கிட்டும், ஒருத்தரை ஒருத்தர் பழிச்சிக்கிட்டும் பொழுதைப்போக்கினாங்க. இதனாலே 75 இல்லை 100 ரூபாயோ மிச்சம் பண்ணின சந்தோஷத்துலே மாசக்கணக்கா தங்கள் கடையை மூடி வெச்சிருக்கறதாலே ஏற்பட்ட நஷ்டத்தையும் மறந்து சந்தோஷப்பட்டாங்க. ஆனால் பல பேருக்கும்தங்கள் கையிலே வேறு ஒரு தொழில் இருக்குங்கிற தைரியமும் ஏற்பட்டுது. இதுலே ஒரு சிலர் கண்ணாடிமுன் நின்று திடுக்கிட்டு வேறு எவனோ நம் வீட்டில் புகுந்துவிட்டானோ என்ற சந்தேகத்தில் குழம்பியபடி கடைசியாக நிலை தெளிந்து அது முகம பார்க்கும் கண்ணாடி என்றும் தான் பார்ப்பது தன் முகத்தைத்தான் என்பதைப்புரிந்து கொண்டு “நானே நானா, இல்லை யாரோ தானா” என்று புலம்பியபடி காடாய் வளர்ந்துவிட்ட தன்தலைமுடியை தன் விரல்களால் கோபமாகக் கோதிவிட்டபடி கொரோனாவைச் சபித்து, தன் தலை முடிக்கு எப்போது சாபவிமோசனம் கிடைக்கும் என்று யோசித்தபடி காலம் தள்ளினார்கள்.
வெளிநாட்டிலே இப்ப ஆம்பிளைங்க மட்டும் இல்லை, பொம்பிளைங்களும் மொட்டை அடிச்சிக்கிறதை ஒரு ஃபேஷன் ஆக்கிட்டாங்க. மொட்டை அடிக்கிறது காலங்காலமாக இருந்து வந்திருக்கிற ஒரு சமாசாரம். மொட்டை அடிச்சுக்கிறது வேறே, மொட்டை அடிக்கிறது வேறே, மொட்டை அல்லது முடி இறக்கிறது அது வேறே. ஒவ்வொண்ணுக்கும் டெக்னிகலா வெவ்வேறே டெஃபனிஷன் இருக்கு. இந்த மொட்டை அடிச்சிக்கற ஃபேஷன் இன்னுங்கொஞ்ச நாளிலே நம்ம நாட்டுக்கும்பரவிடும். இது வந்தா திருப்பதிக்கும், பழனிக்கும் கிராக்கி கூடக்கூடும். வேறே எந்த நல்ல விஷயங்களையும் காப்பி அடிக்காம போனாலும், இந்த மாதிரி ஃபேஷன் விஷயங்களை காப்பி அடிக்கிறதுலே நம்ம ஜனங்களை அடிச்சிக்கிறதுக்கு யாருமில்லை. அப்ப இந்த வழுக்கைகள் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இன்று சில சின்ன நகரங்களிலும்கூட பார்லர் என்னும் அலங்கார நிலையம் வந்துவிட்டது. இங்கு சிகை அலங்காரம்தவிர உங்கள் முகத்தை நீங்களே அதிசயிக்கும்படி அழகு படுத்திவிடுவார்கள். எனவே பார்லர் எல்லாம் இப்போது வெறும் முடி அலங்காரத்தோடு நிற்காமல் முக அழகையும் மேம்படுத்துவதால் அவை அழகு நிலையங்களாக ( Beauty Parlour) மாறிவிட்டன. ஒரு அழகு நிலையத்தில்” எங்கள் பார்லரிலிருந்து வெளி வரும் பெண்ணை சைட் அடிக்காதீர்கள். ஏனென்றால் அவர் ஒரு வேளை உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்” என்று விளம்பரம் செய்யுமளவிற்கு இன்று பார்லர்கள் முன்னேறிவிட்டதால் இப்பொழுது பல பெண்மணிகளும் பழங்கால பெண்களைப்போல கவலைப்படுவதே இல்லை. இருக்கவே இருக்கு பார்லர் என்ற தைரியம். எந்த மாதிரி அலங்காரம் செய்தாலும், அதற்கு சிகரமாக இருப்பது தலை அலங்காரம். அதைவிட்டு விட்டி முகத்தை வேறு எவ்வளவு அலங்காரப்படுத்தினாலும் அது அலங்கோலம்தான்.
போதாததற்கு பிரைவேட்டா பிராக்டிஸ் செய்யும் டாக்டர்கள்போல, பல பிரைவேட் அலங்கார நிபுணிகளும் இன்று இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்தே இருக்கும் முடியை வைத்து அலங்காரம்செய்ய அவர்கள் ரெடி. எனவே இங்கே எசகு பிசகான எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லை. இப்பொழுதே அநேக மணப்பெண்கள் இப்படிப்பட்ட ஸ்பெஷலிஸ்டுகளின் தயவை பெண்பார்க்கும் படலத்தின் போதும், திருமண நாட்களிலும் நாடுகிறார்கள். பெண்பார்க்கும்படலத்தின்போதே சிகை அலங்கார நிபுணிகள் தங்கள் கை வரிசையைக்காட்டுவதால், பெண்பார்க்க வரும் பல ஆண்களும், அதே போல ஆண்பார்க்க வரும் பெண்களும் ( இது எப்போ?), தங்கள் எதிர்காலம் பூராவும் தங்கள் தவற்றை நினைத்து நொந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. பல கணவன்மார்களும், மனைவிமார்களும் இப்படி இந்தப் பார்லரினால் ஏமாற்றப்பட்டு விட்டோமே என்று ஆயுளுக்கும் புலம்பிக்கொண்டு இருப்பதாகக் கேள்வி. அன்று பஜ்ஜி, சொஜ்ஜி செய்த அதே வேலையை இன்று இந்த அலங்கார நிபணர்களும், நிபுணிகளும் செய்து வருகிறார்கள்
ஆனாலும் இன்று வெறும் சலூன் லெவலுக்கு இருந்த நம்ம ஹேர் டிரெஸ்ஸிங் டெக்னாலஜி இப்ப பார்லர் லெவலுக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு நம் நாடு தொழில் முன்னேற்றம் அடைந்து விட்டது என்று பெருமைப்படலாம். வெளிநாட்டிலே சலூன்லே வேலை செய்பவர்கள் எல்லாம் அதற்கான படிப்பிலே தகுதி செர்டிபிகேட் வாங்கினாத்தான் இந்தத்தொழிலிலே ஈடுபடலாம். அங்கே சலூன்களிலே ஆண்களுக்கும் முடி அலங்காரம் செய்யறவங்க பெரும்பாலும் பெண்கள்தான். அப்படி ஒரு முன்னேற்றம் நம்ம நாட்டிலே எப்ப வரும்னு சில இளவட்டங்கள் இங்கே ஏங்குவது தெரிகிறது. முடி அலங்காரம் செய்ய, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் என்று தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் அதுக்குன்னு படிச்சிட்டு வரலாம். கேட்டரிங் டெக்னாலஜியைப்போல, மேக் அப் டெக்னாலஜி ஒரு தனி அந்தஸ்து பெறலாம். அதன் பகுதியாக ஹேர் டிரெஸ்ஸிங்க் டெக்னாலஜிக்கு தனியா ஒரு பட்டப்படிப்பு (டிக்ரி கோர்ஸ்) வரலாம். அதில் செர்டிபிகேட் வாங்கினவங்கதான் இனி இந்த சிகை அலங்காரத்தொழிலிலோ இல்லை மேக் அப் தொழிலிலோ ஈடுபடலாம்னு ஒரு சட்டமே வரலாம். அந்த நாளும் வெகு தொலைவிலில்லை. இவர்கள் பலருக்கும் சினிமாத்தொழிலில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட வாய்ப்பு இருக்கு.இதனால் பல வயதான ஆண்நடிகர்களும், மிகவும் வயதான பெண்நடிகைகளும் மறுவாழ்வு பெற்று கனவுக்காளைகளாகவும், கனவுக் கன்னிகளாகவும் மாறலாம்.