உலகம் பெரிது
கருப்புக்கண்ணாடியணிந்து
நாம் பார்ப்பதால்
உலகம்
கறுப்பாகிடுமோ?
முட்புதரும்
கற்பாறையுமே
நம் கண்ணிற்படுவதால்
அனைவரும்
அதையே காண்பரோ?
உருண்டை பூமியின்
ஒரு புறமே
நமக்குத்தெரிவதால்
மறுபுறம்
இல்லையென்று
அர்த்தமாகுமோ?
சிவப்பு விளக்கு
நம்மைத்தடுக்குங்கால்
பச்சை விளக்கு
பலரை விடுக்காதோ?
உலகம் சிறு
ஜவுளித்துண்டல்ல;
மீட்டரால் அதனை
அளந்து முறிக்க
அதில் தங்கமிருந்தும்
அது வெறும் தங்கமல்ல;
அதில் வைரமிருந்தும்
அது வெறும் வைரமுமல்ல.
அதுவொரு கலவை:
வண்ணங்களின்...
வடிவங்களின்...
சுவைகளின்...
சுருதிகளின்...
மனிதர்களின்...
மாக்களின்...
கலவை.
அதுவோர் பொக்கிஷம்:
தத்துவங்களின்...
சத்தியங்களின்...
கதைகளின்...
காவியங்களின்...
பொக்கிஷம்.
விருப்பு-வெறுப்பெனும்
வண்ணக்கண்ணாடிகளையகற்றி...
கண்களையும், இதயத்தையும்
வெள்ளைத்தாளாக்கி
விசுவாச வெளிச்சத்தில் நோக்கிடின்
அறியலாம் அதன்
இரகசியங்களை.
பாலைகளையும்
சோலைகளையும்
விமர்சனித்தறிவதன்றோ
கல்விச்செல்வம்...?
எனினும்-
ஞானச்சோலையில் எம்மரமும்
'முழுமை' அடைந்ததில்லை;
அனுபவப்பள்ளியில்
எம்மாணவனும்
'முழுமதிப்பெண்' பெற்றதில்லை;
உலகமும் தன்
இரகசியக்கதவுகளை
எவருக்கும்
முழுமையாய்த்திறந்ததுமில்லை.