24 அவளுடன் பேசும்போது

ஸ்பரி...

இன்று காலையில் மார்க்கெட் பக்கம் சென்று இருந்தேன். மிதமான வெயிலும் சீரான கடற்காற்றும் கிடைத்த இடம் அது.

சில சில காய்கறிகள் வர்த்தகம் என்ற ஒரு உருவில் வாழ்க்கையாகி கொண்டிருக்க நான் ஓரமாய் பார்த்தபடி கடந்தேன்.

ஒரு சாலையோர ஹோட்டல். வாசலில் சிலர் சாப்பிட்டு கொண்டிருக்க ஒரு மனிதன் அவர்களை விருந்தோம்பியபடி
இருப்பதை பார்த்தேன்.

தொழில்முறை சிநேகம் என்பது இல்லை. மாறாக, அன்பினால் மட்டுமே உந்தமுற்று அது ஒன்றே சேவை போல் சாப்பிடுவோரை சூழ்ந்து சுற்றி சுற்றி வந்து அவன் உபசரித்து கொண்டிருந்தான்.

நான் அங்கேயே சற்று நின்றேன். அவன் பேசும் மொழி எனக்கு புரியவில்லை. அப்போது அது எனக்கு தேவையும் இல்லை.

அவன் நான் முன் எப்போதும் சந்திக்காத மனிதன். இந்த தெருவை தாண்டி விட்டால் இனி நான் சந்திக்கவே முடியாத மனிதனும் அவனே. இருப்பினும் அக்கணம் அவன் என் நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்டான்.

பணமோ பொருளோ அவனுக்கு அந்த கணநேரத்து அன்பினால் கிடைக்க வாய்ப்பு இல்லை. இது அவனுக்கும் மிக நன்றாக தெரிந்த ஒன்றாகவே இருக்கலாம்.

ஆனால், எது அவனை இப்படி மாற்றி இருக்கும் என்று சற்று யோசிக்கும் போது நான் மட்டும் அல்ல இப்படி யோசிக்கும் எவருமே மனதளவில் அதுவரையிலும் வெளியில் தெரிய வராத பிச்சைக்காரர்தான் என்று என் மனதுக்குள் உறைக்க... நான் சலனமற்று உறைந்து போனேன்.

அன்பை காப்பாற்றி வைத்து நன்கு திட்டமிட்டு காலம் கைகூடும் வரை காத்திருந்து பின்னர் திடுக்கிடும்படி காட்டப்படும் அபவஸ்து அல்ல. அவனுக்கு அது உணர்வாக வந்து இருக்கிறது. அவனுக்கு தான் இப்படி இருக்கிறோம் என்பதே இன்னும் கூட தெரியாமல் இருக்கலாம்.

ஒன்றிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ளும் அறிவும் மனமும் களங்கத்தை மட்டுமே பெற்று இறுதியில் தேங்கி முடிவடைந்து விடுகிறது.

அவன் சுழல்கிறான். அவனோடு யாரும் விரும்பி பேசுவதை பார்க்கிறேன். எந்த துயர் கொண்ட மனமும் அவனை பார்க்கும் போது சற்றேனும் புன்னகை செய்கின்றன. அவன் புன்னகைத்துசொல்வதாலே சிலர் சிலவற்றை ஏற்றுக்கொண்டு வாங்கி உண்பதையும் பார்க்கிறேன். அவன் முதலாளி இதை எல்லாம் பார்க்காமல் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இது சலிப்பு மிகுந்த காட்சியாக இருக்கலாம்.

அவன் உடையில் அழுக்கு சற்று இருந்தது. பலமான கையில் ஓரிரு தழும்புகள் இருந்தது. அவன் கால்கள் விரைந்து சுற்றினாலும் இடது கால் சற்று ஊனம்.

அவன் ஒருபோதும் சாலையில் செல்வோரை கடை வாசலில் நிற்போரை திரும்பிக்கூட பார்க்கவே இல்லை. வேடிக்கைகூட பார்க்க தெரியாத மனிதன் என்று நினைத்து கொண்டேன்.

நாம்தான் எவ்வளவு வேடிக்கை பார்க்கிறோம்?

நம்மில் இருந்து பிறரை அல்லது நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்தபடியே அல்லது நம்மையே நாம் வேடிக்கை பார்த்து பார்த்து காலம் கழித்தபடி இருக்கும் சுகத்தை அவன் ஒரு கணமேனும் அனுபவித்து இருப்பானா?

ஸ்பரி....

அவன் அழுக்கு பிடித்த வேலையாள்.
அவன் ஏன் அம்பாள் போன்றோ அல்லது ஏசுவாகவோ இருக்க கூடாது? இருக்கலாம்தானே...

அன்பை விளங்கி கொள்ள மனதால் முடியாது. மனதில் இருந்து அன்பு வருவது இல்லை. ஆனால் அன்பு மனதின் விதை என்று நீங்கள் சொன்னதை நினைத்து கொண்டேன் ஸ்பரி...

இயல்பாக கண்கள் முட்டுகின்றன.

நான் அவனை கடந்து வெகுதூரம் வந்து விட்டேன். இப்போது அறையில் இருந்து இதை நான் இப்போது எழுதும் போது அவன் தன் அன்பில் பிணி இன்றி உழைத்து கொண்டிருக்கலாம். அவன் முதலாளி பிரார்த்தனை செய்யலாம். இருப்பினும் அவர்கள் இருவரும் வேறு வேறான ஒருவர்தான் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

🌻🌻🌻🌻🌻🌻

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Mar-21, 9:55 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே