படியாட்சி ஆற்றி வருகின்ற அரசை எவ்வரசும் போற்றி வருமே புகழ்ந்து - ஆட்சி, தருமதீபிகை 784

நேரிசை வெண்பா

குடியாட்சி யெல்லாம் குவிந்து தனது .
முடியாட்சி யுள்ளே முடியப் - படியாட்சி
ஆற்றி வருகின்ற அவ்வரசை எவ்வரசும்
போற்றி வருமே புகழ்ந்து. 784

- ஆட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகிலுள்ள பலவகை அரசுகளும் வியந்து மகிழ்ந்து பணிந்து வரும்படி தன் ஆட்சியை நடத்துகிற அரசன் அரிய பல மாட்சிகளை அடைவான்; அவனை யாவரும் புகழ்ந்து போற்றுவர்: தேவரும் உவந்து கொள்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து உதவிபுரிந்து கூடி வாழும் இயல்பு மனித இனத்தில் நீடி வந்துள்ளது. வீடு, நிலம், மாடு, மனை முதலிய பலவகை வசதிகளை வரைந்து கொண்டு மாந்தர் யாண்டும் வாழ்ந்து வருவதை ஓர்ந்து வருகிறோம். சுக சீவிகளாய் வாழவே யாவரும் ஆவலோடு முயன்று வருகின்றனர். மக்கள் வாழ்வு பக்கம் சிதையாமல் தக்க வகையில் நடந்து வரத் தகுதியான துணைவனாய் நேர்ந்தவனே வேந்தன் என விளங்கி நிற்கின்றான். அவனது நிலை வியனான பயனுடையது.

உடலுக்குக் கை, கால் முதலிய உறுப்புகள் அமைந்திருத்தல் போல் உலகிற்கும் அங்கங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றால் அது நன்கு இயங்கி வருகிறது. தேகத்துக்குத் தலைபோல் தேசத்துக்கு அரசன் அமைந்திருத்தலால் அவனுக்குத் தலைவன் என்று ஒரு பெயரும் வந்தது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தரையெனு முடற்கொரு தலைவ னேதலை
நரர்பல வுறுப்புக ணலங்கொண் மெய்யது
சிரமுறும் பொறிவழிச் செல்லுந் தன்மைபோல்
உரவர சனுக்கமைந் தொழுகும் வையமே. 4

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

கோவரிய சீவன் குடிகளுட லாவார்
சீவன்சும் மாவிருக்கத் தேகமுழைத் தோம்புதல்போற்
பூவலய மீதினில்தம் பூட்சிகளி னாலுழைத்துக்
காவலனைக் காக்கக் கடனாங் குடிகளுக்கே. 7. – குடிகளியல்பு, நீதி நூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அரசனுக்கும் குடிகளுக்கும் இனிது அமைந்துள்ள உறவுரிமைகளையும் தொடர்புகளையும் இவை உணர்த்தியுள்ளன. உருவக உரைகளும் உவமைகளின் குறிப்புகளும் ஊன்றி உணரத்தக்கன.

சேர்ந்த அங்கங்களால் தேகம் இயங்குதல் போல் நேர்ந்த அரசு முறையால் தேசம் இயங்கி வருகிறது. கால்கள் நடக்கின்றன; கைகள் வேலை செய்கின்றன, கண்கள் பார்க்கின்றன; காதுகள் கேட்கின்றன; மனமும் அறிவும் நினைவு சிந்தனைகளால் நெறியே செலுத்துகின்றன; இவை யாவும் இனிது இயங்கி வரச் சீவன் தனியே தலைமையில் நின்றுள்ளது. இந்த நிலைமையில் அரசனும் நிலவியுள்ளான். உழவு, வாணிகம் முதலிய தொழில்களைச் செய்து குடிசனங்கள் உலகை வளம்படுத்தி வருகின்றனர்; அவ்வரவு எவ்வழியும் செவ்வையாய் இனிது நடந்துவர அரசன் யாண்டும் நன்கு பாதுகாத்து வருகிறான்.

நீதி முறையான அப்பாதுகாவல் பிழையாய்ப் பழுதுபடின் குடிகள் துயரடைய நேர்கின்றார், உற்ற துயரங்களை ஒழிக்க மூண்டு நாட்டுமக்கள் புரட்சி செய்ய நேர்ந்த போதுதான் மேல் நாடுகளில் குடியாட்சிகள் தோன்றலாயின. பொதுசனங்களால் தேர்ந்தெடுத்த சிலர் ஆளுவதால் சனாதிபத்தியம் என இனவுரிமையோடு அது பெயர் பெற நேர்ந்தது.

இந்த நாட்டு வேந்தர்கள் ஆதிமுதல் நீதிமுறையோடு குடிகளை இனிது பேணி வந்துள்ளமையால் அவர்பால் பேரன்பு பூண்டு எல்லாரும் ஆர்வமாய்ப் போற்றி வந்துள்ளனர். அரசன் தெய்வத்தின் பிரதிநிதி என்று பெருமகிமையோடு பேண நேர்ந்தமையால் இறை என்னும் கடவுள் நாமத்தை அவன் அடைய நேர்ந்தான். உற்ற பேர் உய்த்துணரவுடையது.

தருமநெறி தழுவி உயிர்கள் இன்புற ஆட்சி புரிகிற அரசன் என்றும் மாட்சியடைந்து உயர்ந்து விளங்குகிறான்; அவனைத் தாய், தந்தை, தெய்வம் என வையம் வாழ்த்தி வணங்குகிறது.

கலிவிருத்தம்
(விளம் 4)

கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும்.
சால்வரும் செல்வமென்(று) உணர்பெருந் தாதைதன்.
மேல்வரும் தன்மையால் மிகவிளங் கினர்கள்.தாம்-
நால்வரும் பொருஇல்நான் மறைஎனும் நடையினார். 28

சான்றெனத் தகையசெங் கோலினான் உயிர்கள்தாம்
ஈன்றநல் தாய்எனக் கருதுபேர் அருளினான்.
‘ஆன்றயிச் செல்வமித் தனையும்மொய்த்(து) அருகுற’
தோன்றலை. ‘கொண்டுமுன் செல்கெனச் சொல்லினான். 29

- எதிர்கொள் படலம், பால காண்டம், இராமாயணம்

இந்த இரண்டு பாடல்களையும் ஊன்றிப் படியுங்கள். தசரத மன்னனையும், அவனுடைய அருமைப் புதல்வர் நால்வரையும் இங்கே ஒருங்கே கண்டு களிக்கிறோம். அரசகுல உருவங்கள் தரும நீதிகளாய் மருவி நின்று இனிய காட்சிகள் தருகின்றன.

கடவுள் சாட்சிபோல் நடுநிலைமையாய் நின்று யாண்டும் நெறி முறையே நீதி செலுத்தும் செங்கோலினை யுடையவன்; ஈன்ற தாய் என உயிர்கள் கருதும் பேர் அருளினான் எனத் தசரத மன்னனைக் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது.

இத்தகைய உத்தம அரசர் ஆட்சியில் வாழும் குடிகள் எத்தகைய பாக்கியசாலிகள்! இன்னவாறு மன்னுயிர் இன்புற மனுநீதிகள் புரிந்து வந்த வேந்தர்களைப் பெற்று மேலான நிலையில் மேன்மை எய்தியிருந்த பாரத நாடு கால வேற்றுமையால் மாறுபட்டு மகிமை கெட்டுப் பரிதாப நிலையில் மறுகியுள்ளது.

தரும குணங்கள் மருவிய அரசை அடைந்த போதுதான் நாடு பெருமை அடைந்து விளங்கும். மாந்தரும் மாண்பு மிகுந்து மகிமையுடன் வாழ்ந்து யாண்டும் உயர்ந்து மகிழ்ந்து வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-21, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே