எங்கள் நாட்டு நீரோக்கள்
கொரோனா காலம்.
கொடுஞ்சாவு மக்களை
அசுரனாய் விழுங்கி
அசைபோட்ட நேரம்.
முன்னணி வீரர்
மும்முரமாயினர்;
உயிர்களைக்காக்க
உயிரையே தந்தனர்.
உழைப்பை இழந்தோர்
உள்ளுக்குள் வெந்தனர்;
புலம்பெயர நேர்ந்தோர்
புலம்பியே அழுதனர்.
காவலர் சட்டங்களைக்
கைகளிலெடுத்தனர்;
கண்டவர்க்கெல்லாம்
கைவிலங்கு மாட்டினர்.
மதங்களோ மனிதரின்
மதியின்மையைக்காட்டி
'மனம் மாற' அவர்களை
மமதையுடன் அழைத்தன.
மரித்தோர் மாக்களாய்
மரியாதைப்பயணமற்று
மட்கியே கூளமாய்
மறுவுரு பெற்றனர்.
உணவுப்பற்றாமை...
உரிமைகளில்லாமை...
உறவுகளிழந்தோர்க்கு
உளமளாவிய வெறுமை...
முதியோர் மடிய
மழலைகள் மாள
முழு நாடே மௌன
மயானமாய் மாற
இந்நிலையிலும் - நம்
இனிய நாட்டு 'நீரோ'க்கள்
என்ன செய்தனரென்று
எவர்தாம் அறிந்திலராம்...???