மண்ணை உழுது உணவாக
வறண்டத் தலை வாடிய தோல்
குழி விழுந்த கன்னங்கள்
அழுக்கு நிறைந்த நகங்கள்
அறவே அழகில்லா முகத்தோற்றம்
செம்மண்ணில் விளைந்ததாய் முடிகள்
சிவந்த நிறத்தில் கண்கள்
என இவைகள் பார்க்க பரிதாபமாய்
என்றாலும் உண்மையில்
திறன் செறிந்த கைகள்
திரட்சிமிகு வலுவான தோள்கள்
துப்பாக்கிக் குண்டையே சிதறடிக்கும்
மார்புகூட்டின் வலுமிகு எலும்புகள்
தம் எடையில் மூன்று மடங்கை
தானே தலையில் தூக்கி வைக்கும்
தெம்புள்ள உடல் உறுதியான கால்கள்
செறிவூட்டப்பட்ட இரும்பாய் கழுத்து
எந்நோயும் அண்டாத குருதி
மண்ணை உழுது உணவாக மாற்றும்
ஆதிக்கலையை மாற்றாமல்
அற்புதம் செய்யும் விவசாயின் தோற்றமிது
ஆதி முதல் இதுநாள் வரையில்
அதிக வருமானம் பெற்றவனாய்
இவனுக்கு எந்நூலிலும் குறிப்பில்லையே
தன் தேவையையே கொஞ்சமும்
நிறைவடையச் செய்யாத வருமானம்
கல்விக்கே ஊக்கம் தரக்கூடயியலா
மன நிலையிலேயே வாழ்க்கை
உலக வாழ்வோரே உற்று நோக்குங்கள்
உணவை உற்பிப்பவன் ஓய்ந்தானென்றால்
உயிர் வாழ ஒரு பருக்கை சோறுக்கே
உறக்கம் தொலைக்க வேண்டிவரும்.
-------- நன்னாடன்