இலங்கையில் தேயிலை-களுத்துறை என் ஜெயரட்னம்

களுத்துறை. என் ஜெயரட்னம்.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் முதல் முதலாக தேயிலை 1824 மற்றும் 1839ஆம் ஆண்டுகளில் பரீட்சார்த்த நோக்கில் பேராதனை பூங்காவிலும் அதன் பின்னர் தேயிலை பயிர்செய்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெயிலர் என்பவரால் 1867 ஆண்டு வணிக நோக்கில் கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை மற்றும் ஹேவாஹெட்டை நகரங்களுக்கு இடைப்பட்ட நூல்கந்தலா (LOOLCONDURA) தோட்டத்தின் கொண்டகலை காட்டு பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அநேகமானோரின் விருப்பத்துக்கு உரிய பிரபல மருத்துவ குணம் நிறைந்த பானமான தேநீர் "கமிலியா சைனேசிஸ்" (CAMILLIA SINENSIS) என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்திய இமாலய மலையடிவாரத்தில் அசாம் மலைச்சாரலை. அண்டிய சீனா, மீயன்மார் மற்றும் தீபெத் காடுகளுக்கு உரிய பயிர் என்ற போதிலும் தேயிலை பானத்தை முதல் முதலாக சீன பேரரசரான "ஷென் நோங்" (Shen Nong) என்பவர் மூலமே 10ஆம் நூற்றாண்டில் உலகுக்கு அறிமுகம் ஆனதாக வரலாறு குறிப்புகள் இருந்து தெரிய வருகின்றது.

இலங்கையில் வணிக நோக்கில் மேற்கொண்டு வந்த கோப்பி பயிர் செய்கைக்கு ஏற்பட்ட இலை வெளிர் (HEMILEIAVASTATRIX - COFFEE LEAF RUST) நோய் காரணமாகவே தேயிலை மாற்றுப் பயிராக இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மலைநாடு, மத்திய மலைநாடு மற்றும் மாத்தறை, காலி, களுத்துறை போன்ற கரையோர மலைப் பகுதிகளில் அதிக அளவில் பெருந் தோட்டங்களாகவோ அல்லது சிறு தோட்ட பயிர் செயற்கையாகவோ பயிரிடப்பட்டு வருகின்றது.

தேயிலை பயிரிடப்பட்டும் விளை நிலங்களின் உயரத்தின் அடிப்படையிலும் தேயிலை கொழுந்துகளை பதப்படுத்தும் முறையிலும் கொழுந்து களில் இருந்து பெறப்படும் இலைப் பகுதிகளில் இருந்தும் அதன் சுவையின் தன்மை வேறு படுகின்றது. மேலும் எவ்விதமான சுவையூட்டிகளும் இன்றி இயற்கையாகவே சிற்றஸ் அமிலத்தின் வாசனை கொண்டது. Orange Pekoe, Broken Orange Pekoe, Golden Tea, Green Tea, White Tea, Black Tea என பல்வேறு வகையான தேயிலை தூள் தயாரிக்கபடுட்டு வருகின்றன. தேயிலை சீன இந்தியா இந்தோனேசியா ஃபிஜி போன்ற பல்வேறு ஆசிய நாடுகளிலும் கென்யா உகாண்டா மலாவி தான்சானியா போன்ற மேலும் சில ஆபிரிக்க நாடுகளிலும் பெருமளவில் வர்த்தக நோக்கில் பயிரிடப்பட்டு வருகிறது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் மூலமாகவே மேற்கத்திய நாடுகளில் தேயிலை அறிமுகம் செய்யப்பட்டது. "டே"(TE) என்ற ஃபிஜி சொல்லே மருவி ஆங்கிலத்தில் பின்னர் டீ(TEA) என்று பாவனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

ஒல்லாந்தர் ஆட்சி காலத்திலும் இலங்கையில் சில பகுதிகளில் தேயிலையை பயிரிட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் எனினும் அந்த முயற்சி வெற்றி அடையவில்லை என ஒல்லாந்தரான "கிரனஸ்டியன் புல்ப்" என்பவரால் 1782இல் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றின் மூலம் அறிய கிடைக்கிறது . இலங்கை லிப்டனின் தேயிலை தோட்டம் என்றே ஆங்கிலேயரால் செல்லமாக அழைக்கப்பட்டது.. பிற்காலத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையம்(1925) மற்றும் தேயிலை சபை(1976) அமைத்து தேயிலை உற்பத்தியை மேம்படுத்தி இங்கிலாந்து, ரஷ்யா, ஈரான், ஈராக், லிபியா, சவுதி அரேபியா, போன்ற மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றுக்கும் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யபடு வருகின்றது. இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி தள தேசிய வருமானத்தில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அநேகரின் மனங்கவர்ந்த பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் நூல்கந்துர, கொண்டக்கல பகுதியில் தேயிலை பயிர் செய்கையை மேற்கொள்ள முன்னர் அப் பிரதேசத்தில் ஏலம் மற்றும் மிளகு போன்ற பயிர்ச்செய்கை இடம் பெற்று வந்ததாகவும் இப் பயிர்ச்செய்கை பெரிதாக வெற்றி அளிக்கவில்லை. ஆகையால் தேயிலை பயிர்ச் செய்கைக்கு இங்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கப்பட்டது. இது அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் சிறுத்தைப் புலிகளின் தொந்தரவு காரணமாக சில பகுதிகள் கைவிடப்பட்டதாம். அதன் பின்னரே படிப்படியாக நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் தேயிலை பயிர் செய்கை வெகு விரைவிலேயே விஸ்தரிக்கப்பட்டது. எனினும் தேசியச் சிங்கள சமூகத்தினர் ஆங்கிலயரின் கீழ் அடிமைகளாக கூலித் தொழிலாளர்களாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய விரும்பாத சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் இலங்கைக்கு வரவழக்கப்பட்டனர். மேலும் இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கையின் தந்தை என அழைக்கப்படும் ஜேம்ஸ் டெயிலர் அவரது 58வது வயதில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் அவரை நூல்கந்தலா தோட்டத்தில் இருந்து 6 பேர் 18 மைல் தூரம் கலஹா, ஹந்தான காட்டு வழியாக தோளில் சுமந்து சென்று கண்டி நகரின் மஹியாவ பகுதியில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் வாய் மூலக் கதைகளின் கூறப்பட்டு வருகின்றது.


இலங்கை அரசினால் 1972ஆம் ஆண்டில் நாட்டில் மேற்கொண்ட நில சீர்திருத்தங்கள் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் தேயிலை தோட்டம் ஆரம்பித்து 109 வருடங்களுக்கு பின்னர் 1972இல் அரசின் ஜனத்தா தோட்ட அபிவிருத்தி சபை பொறுப்பேற்ற பின்னர் தோட்டத்தின் பிரதான மேலதிகாரி (Superintendent) போவங்கே என்பவரின் தலைமையில் உதவி மேலதிகாரி (Asst. Superintendent) ஜீ.எச்.சமரசிங்க,
கள அதிகாரிகளான (Field Officer's) ஜீ. சுப்பையா மற்றும் தங்கவேல் நாராயணசாமி ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் மூலமே இன்று காணப்படும் அழகிய தேயிலைத் தோட்டம் மீள் பயிரிடப்பட்டதாக 1960 இல் மேற்படி தோட்டத்தில் சேவையில் இணைத்துக் கொண்ட தங்கவேலு நாராயணசாமி(84)(பீல்டு ஆபீசர்) மற்றும் ஐயாசாமி ராமசாமி(80) (கிளாக்கர்) ஆகியோர் தெரிவிக்கின்றனர்.


ஆரம்ப காலத்தில் இயந்திரங்கள் மூலம் அன்றி தாச்சி போன்ற பாத்திரங்களை உபயோகித்தே தேயிலையை வறுத்து பதப்படுத்தி தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு கொண்டு சென்று ஏலத்தில் விடப்பட்டதாம். இந்த உபகரணங்களை கண்டி, ஹந்தானையில் அமைந்துள்ள தேயிலை அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம் அன்று தொட்டு இன்று வரை உலகச் சந்தையில் இலங்கை தேயிலைக்கு பெரும் கிராக்கி நிலவி வருகின்றது. எனினும் எமது நாட்டு தேயிலை உற்பத்தி சீனா, இந்தியா, கென்யாவிற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்திலேயே காணப்படுகின்றது இலங்கையில் இன்றைய தேயிலை பயிர்ச்செய்கை பல்வேறு காரணங்களால் அழிவுப் பாதையை நோக்கியே பயணிக்கின்றது என்பதும் கவலைக்குறிய விடயம் ஆகும்.

எழுதியவர் : களுத்துறை. என் ஜெயரட்னம் (22-Mar-21, 5:36 pm)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
பார்வை : 331

மேலே