வாழ்க்கை கணக்கு
வங்கியில் கணக்கு உண்டு
வைத்த நிதியும் அதிகமுண்டு
வாழ்க்கை என்னும் கணக்குண்டு
விரயமே அதிகமாய் பதிவானதுண்டு
முகநூல் கணக்கு உண்டு
மூவாயிரம் நண்பர்கள் அதிலுண்டு
முன்னின்று பார்த்து பேச
மக்கள் ஒருவரும் இல்லை
பொன்னையும் பொருளையும் பார்த்து
பிரமித்தேன் காலம் முழுதும்
புன்சிரிப்பை பரிசாய் தந்த
பிஞ்சுகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை
அலுவலகத்தில் அயலாருக்கு தோள்கொடுத்து
ஆதரவாய் நின்றேன் சதாகாலமும்
அகமுடையாளை தாங்கிப் பிடிக்க
அணுவளவும் சிந்தனை செய்யவில்லை
கானல்நீரை துரத்திக் கொண்டிருந்தேன்
கழிந்த காலம் முழுதும்
களைப்புறும் போது ஆதரவாய்
கைகொடுக்க சுற்றங்களை சேர்க்கவில்லை
காலன் அழைக்கும் போது
கற்றேன் அறிய பாடம்
கொண்டு செல்ல ஒன்றுமில்லை
கண்ணீர் சிந்த யாருமில்லை
செல்லும் வழிக்கு கூடவருவது
செய்த நல்வினைகளும் கர்மங்களுமே
சிந்தித்திருந்தால் செல்லும் பயணம்
சுகமான ஒன்றாய் இருந்திருக்குமே!
புனைவு ராம்கி