5 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 5
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

இறைவன் அருள்பெற்ற ஞானிகள் வாழ்க்கைத் தத்துவங்களை தர்ம சாஸ்திரங்களின் மூலம், நாம் மன அமைதியுடன் வாழ்வதற்கு வழி காட்டியுள்ளனர். உலகில் உள்ள நன்மை தீமைகளை பிரித்து அறிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறனையும் மனிதர்களுக்கு இயல்பாகவே கடவுள் அருளியிருக்கிறார். மனிதர்களில் பலர் தங்கள் வாழ்வின் ஆரம்பத்தில் இதனை உணர்வதில்லை. உலகில் வாழும் யானை, சிங்கம் புலி போன்ற விலங்குகள், கிளி, காகம் மயில் போன்ற பறவைகள் ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களைப்போல பகுத்தறியும் தன்மை அவைகளுக்கு இல்லை. இன்பம் துன்பம் எதையும் மனதளவில உணர்ந்து அனுபவவிக்கக்கூடிய சக்தியும் மனிதனிடம் மட்டும்தான் உள்ளது. எனவே தமிழ் மூதாட்டி ஔவையார் மனித பிறவியின் உயர்வைப் பற்றி ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று பாடியுள்ளார்.

உலகில் பொதுவாக ஒருவருக்கு எந்தப்பொருள்களின் மீது ஆசைப்படுகிறமோ அந்தப்பொருள்கள் மூலமாக வரக்கூடிய இன்பங்கள் மகிழ்ச்சி போன்ற அனுபவங்கள் கிடைக்கிறதோ, அதேபோன்றுதான் மற்றவர்களுக்கும் அந்தப்பொருள்கள் மீது உள்ள ஆசையும் அந்தப் பொருள்களினால் வரக்கூடிய இன்பத்தையும் சுகத்தையும் விரும்புவார்கள். எடுத்துக்காட்டாக ‘தன்னிடம் இருக்கும் நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை யாரும் நம்மிடமிருந்து அபகரித்து விடக்கூடாது’ என்று பெரும்பாலும் நினைக்கிறோம். அதேபோல்தான் மற்றவர்களும் தங்களிடம் இருக்கும் நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை யாரும் தங்களிடமிருந்தும் அபகரித்து விடக்கூடாது என்றுதான் விரும்புவார்கள். நம்முடைய மனதில் நம்மை அறியாமல் தோன்றும் இத்தகைய எண்ணங்களை, நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ‘திருடக்கூடாது’ என்ற அறிவினை இதன்மூலம் அறிந்து கொள்கிறோம். இதன்மூலம் நாம் என்ன உணர்கிறோம் என்றால் நாமும் திருடக்கூடாது, நம்மைப்போல் மற்றவர்களும் திருடக்கூடாது என்றும் மனதிற்குள் நல்லதையே நினைக்கின்றோம். அதுதான் தர்மம் என்றும் மனதிற்குள் நினைத்து முடிவுக்கும் வந்துவிடுகிறோம்.

அதேபோன்று மற்றவர்கள் நம்மிடம் எந்த விஷயம் பற்றி பேசினாலும், அவர்கள் நம்மிடம் பொய் பேசாமல் உண்மையே பேசவேண்டும் என்று நாம் மனதிற்குள் விரும்புகிறோம். அதேபோன்று நாமும் மற்றவர்களிடம் பேசும்போது ‘பொய் பேசாமல் இருக்கவேண்டும் உண்மையே பேசவேண்டும்’ என்று நம் மனதிற்குள் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாம் நம்மை அறியாமல் மனதிற்குள் விரும்புகிறமோ, அதேபோன்றுதான் நாமும் மற்றவர்களிடம் உண்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று உறுதி மனதில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் சாஸ்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கதைகள் மூலம் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரத்தில் ஒரு நிகழ்வு. யுத்த தர்மத்தில் யுத்தம் தொடங்குவதற்கு முன் போரில் வெற்றி பெறுவதற்கு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து களப்பலி கொடுப்பது அக்காலத்தில் வழக்கம். அதன்படி துரியோதனன் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு, தான் அந்தப்போரில் வெற்றி பெறுவதற்கு களப்பலி கொடுப்பதற்கு நல்லநேரம் பார்ப்பதற்கு தனது எதிரியான பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனை அணுகினான். சகாதேவன் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி கணித்து போர்க்களத்தில் களப்பலி கொடுப்பதற்கு நல்லநேரம் பார்த்து தனக்குக் கூறுவான் என்ற நம்பிக்கையுடன், போரில் களப்பலி கொடுப்பதற்கு நல்ல நேரம் பற்றி கேட்டான். துரியோதனுக்கு சாஸ்திரப்படி போரில் களப்பலி கொடுப்பதற்கு நல்லநாள் நல்லநேரத்தை துல்லியமாக கணித்து சகாதேவன் கூறுகிறான். துரியோதனன் தங்களின் எதிரி என்று சகாதேவன் அறிந்திருந்தும், சோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி துரியோதனனுக்கு போரில் களப்பலி கொடுப்பதற்குரிய நல்லநாள் நல்லநேரம் பார்த்துக் கொடுத்தான் என்பது மகாபாரதம் உணர்த்தும் கதையாகும். சகாதேவன் நினைத்திருந்தால், துரியோதனுக்குப் பாதகமான நேரத்தினை நல்ல நேரம் என்று கூறியிருக்கலாம். அவன் அவ்வாறு நம்பிக்கைத்துரோகம் செய்யவில்லை. சோதிடசாஸ்திரப்படி தர்மசாஸ்திரப்படி சகாதேவன் பகைவன் என்று தெரிந்திருந்தும் துரியாதனிடம் நல்ல நேரம் கணித்துக் கொடுப்பதில் நடந்து கொண்டான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

உலகில் மனிதர்களின் வாழ்வை அளவுகோலாக வைத்துக் கொண்டுதான் தர்ம நியாயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியாயம் அநியாயங்களை தெரிந்து கொள்ளவும் இறைவன் நமக்கு அறிவையும் அதன்படி நடக்கவும் வலிமையையும் கொடுத்துள்ளார். ‘திருடக்கூடாது’ ‘பொய் சொல்லக்கூடாது’ ‘பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது’ என்று சான்றோர்கள் தங்கள் அனுபவங்களை சாஸ்திரங்களின் மூலம் தத்துவங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து சிறுகதைகள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். மனிதர்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் உணர்ந்து கொண்டால் அவன் விரும்பும் மன அமைதி தானாகவே வந்து சேரும். இதிகாசங்கள் புராணக்கதைகள் தர்ம சாஸ்திரங்களை முழுமையான ஈடுபாட்டுடன் படிக்கும்போது, ஆன்மீக அன்பர்கள் கூறக் கேட்கும்போது நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியம் நம்மை அறியாமல் தோன்றிவிடும்.

மிருகங்கள், பறவைகள் ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு நல்லவை, கெட்டவை எவை என்று தேர்ந்தெடுக்கும் அறிவுத்திறன் இல்லை. மனிதர்களுக்கு மட்டும் தன்னை அறிந்து கொள்வதற்கு ஆன்மீக வழியில் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்வதற்கு தர்ம சாஸ்திரங்கள் இதிகாச புராணங்களில் பல வழிமுறைகள் உள்ளன. அவைகளைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறனும் மனிதர்களுக்கு இருக்கிறது. நாய்க்கு தான் ஒரு நாய் என்ற உருவத்தில் இருக்கிறேன் என்பதுகூட அதற்குத் தெரிவதில்லை. அப்படி தன்னோட உருவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அது விரும்புவதில்லை. நாய் போன்ற விலங்குகள் , பறவைகள், ஊர்வன மற்ற உயிரினங்களும் தங்கள் உருவத்தைப்பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மனிதனைப்போல உயர்வு தாழ்வு மனப்பான்மை போன்ற மற்ற கவலைகள் விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு இருப்பது இல்லை.

காகம் தன்னோட நிறம் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுவதில்லை. இதனை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும். காகத்தின் முன்பாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால், நம்மைப்போல் அது தன்னை கண்ணாடியில் கவனமாக பார்ப்பதில்லை. அப்படி கண்ணாடியில் மனிதனைப்போல் கவனமாக காகம் தன்னைப் பார்த்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அது தான் கருப்பாக இருக்கிறோம் என்று நினைத்து அவைகள் வருத்தப்பட்டுக்கொண்டு நம்மைப்போல் அதுவும் விருப்பமான சிவப்பு நிறத்தில் தன்னோட உடம்பெல்லாம் ‘டை’ அடிக்க ஆரம்பித்து விடும். அதேபோல் காகம் தன்னோட குரல் குயிலின் குரலோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைப்பதில்லை. அவ்வாறு குயிலைப் போன்று தன்னோட குரலையும் இனிமையாக மாற்றுவதற்கு நினைத்தால் அதுவும் நம்மைப்போல் கழுத்து அளவில் இருந்து தண்ணீரில் இறங்கி சாதகம் செய்வதற்கு ஆரம்பித்து விடும்.

விலங்குகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு எல்லாம் தன்னைப்பற்றி அறிந்து கொள்ளக்கூடிய திறன் எதுவும் இல்லை. யானைக்கு, மனிதனைவிட மற்ற விலங்குகளை விட பெரிய உடம்பும் சக்தியும் இருப்பதுகூட அதற்குத் தெரிவதில்லை. அது தன்னோட உடல் பலத்தைப் பற்றி அறிந்து விட்டால், அல்லது கடவுள் அதற்கு உடல் பலத்தை அறிந்து கொள்ளும்படி அறியும்படி செய்திருந்தால் , மனிதன், யானையை தன்னோட இஷ்டப்படி வேலை செய்யும்படி, அதனை அடக்கி ஆள முடியுமா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மனிதனுக்கு மட்டுமே தன்னை அறிந்து கொள்வதற்கு அறிவு மற்றும் அனுபவம் மூலமாக கடவுள் அருளிருக்கிறார். மனிதன் தன்னோட வாழ்வில் மனஅமைதியை பெறுவதற்கு அறிவு ஆன்மிகம் மூலமாக வழிமுறைகளை நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கிறான்.
(அமைதி தொடரும்)


எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
வட்டாட்சியர் ( பணி நிறைவு)
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (5-May-21, 3:07 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 104

மேலே