புலம்பல்
உடைபட்ட கற்சிலையினை கண்டு
அற்புதமாய் அதையமைக்க
தங்கொண்டைதனில் அடிமேல் அடிவாங்கிய சிற்றுளியின்
அலறல் .....
பார்த்துப்பார்த்து கட்டிய
பல்லடுக்கு கோட்டையை
பவ்வியமாயொருவன் ஆட்கொள்ள
ஒவ்வொரு துகளாய் தானெடுத்து
தந்நெச்சிலை அதில் தேய்த்து
அயராதுழைத்த கரையான்களின் கதறல் .....
புகைகொண்டு விரட்டி
பொக்கிசமதை திருடுவதைக்கண்ட
ஒரு சொட்டுத் தேனெடுக்க உலகை
நாஞ்சுற்றது தாஞ்சுற்றும்
தேனீக்களின் தேம்பல் ......
தொண்டையதனை தாண்டா
நீண்டநாள் துயரங்கள்
சுயசிந்தைதனை மறைத்து
பட்டிவிடுபட்ட
மந்தைக்கூட்டமென ஒழுங்கின்றி
ஓடுதல் ......
பலநாளுழைத்த உழைப்பு அது
தந்நிருகைவிட்டு விலகுகையில்
வேதனைகொள்ளும் வெற்றுமனமது
தன்னைத் தானாற்றுப்படுத்தும்
அற்புத செயல்முறை .....