முதல் காதல்
மூன்றாம் வகுப்பில்
குளித்தும் குளிக்காமலும்
எண்ணெய் தலையுடன்
திட்டு திட்டாய் பவுடர் பூசி
அம்மா கொடுக்கும்
பழைய கஞ்சியும் தேங்காய்
துவயலையும் அமிர்தமாய்
எண்ணி அரை வயித்துக்கு
அழுக்குச் சட்டையில் வடிவதையும்
பாராமல் பருகிவிட்டு
ஓட்டை ஸ்லேட்டுடன்
ஒடிந்த சுண்ணாம்பு துண்டையும்
கிழிந்த மஞ்சள் பையில் போட்டு
அவசர அவசரமாக புறப்பட்டு
பள்ளியையும் தாண்டி பல
வீடு சென்று சிறுவர் சிறுமிகளுமாய்
புடை சூழ பள்ளிக்கு அழைத்து செல்ல காத்திருக்கும் அனைவரையும்
பார்த்து வழக்கம் போல
இன்றும் வீட்டு பாடம் செய்யாமல்
தான் வந்திருப்பீர்கள்
என்று வாஞ்சை நிறைந்த
சிரித்த முகத்தோடு
தலையை வருடி கொடுக்கும்
கடைசிவரை கல்யாணமே செய்யாமல் மரித்துப்போன மேரி டீச்சர்தான் எங்கள் அனைவருக்கும் முதல் காதல்....! 🙏