கரிசல் ராஜாவிற்கு அஞ்சலி
கதைகளில் நூறை தாண்டிய நீ
வயதிலும் நூறை தாண்டுவாய்
என நம்பினோம்.....
வயதில் சதம் அடிக்காவிட்டாலும்
எழுத்துலகில் பல சாதனைகளை
படைத்துவிட்டாய் காவியமாக...
விவசாய குடும்பத்தில் பிறந்த நீ
இலக்கிய அறுவடை செய்து
பல விருந்துகள் படைத்து
பல விருதுகள் பார்த்தட்டுவிட்டாய்...
ஆம் உன் எழுத்தை படிக்கும் போது
பசித்ததில்லை எங்களுக்கு...
கண்கட்டி வித்தைக்காரன் நீ
விமானம் ஏறாமலேயே
எங்களை பறக்கச் செய்தாய்
கதை நடக்கும் இடத்திற்கு...
படித்து முடித்ததும்
அப்படியே இருக்கச் செய்தாய்
மீண்டும் ஒரு முறை
படித்து பறக்கலாம் என்று....
கண்ணுக்கு தெரியாத
கரிசல் மண்ணையும்
கோபல்லபுரத்து மக்களையும்
எங்களுக்கு கடல் போல
காட்டிய எழுத்துதாண்டவன் நீ..
அம்மா அடித்து
அழுகை வராத எங்களுக்கு
உன் கதை படிக்கும் போது
எங்கிருந்து வருகிறதோ
அழுகை தெரியவில்லை....
உன் கதவையும், கோமதியையும்,
தொண்டையும், புறப்பாட்டையும்,
படிக்க வைத்து கண்ணீரின்
அர்த்தத்தை புரிய வைத்தாய்
நீ சுயநலமில்லாதவன்....
ஆகவேதான்
நீ வாழும் காலத்திலேயே
எங்களை கண்ணீர்
சிந்த வைத்தாய்
உன் கதைகளை படிக்க வைத்து
காரணம்...
நீ இறக்கும் போது நாங்கள்
அழ வேண்டாம் என்று
நீ இறக்கவில்லை
இலக்கியமாகிவிட்டாய்
இலக்கியங்கள்
இறப்பதில்லை....
நீ கரிசல் மண்ணின் ராஜா
இலக்கியத்தின் அடையாளம்
எழுத்துலகின் பிதாமகன்....
உனக்காக கண்ணீர்
சிந்த ஆசை...ஆகவே
மீண்டும் படிக்க தோன்றியது
உன் கதவையும், கோமதியையும்,
தொண்டையும், புறப்பாட்டையும்
நீ புறப்பட்டுச் செல்லும் போது
ஆம் உன் கதைகள்
எங்களை கண்ணீர்
சிந்தச் செய்யும்...
எப்போது படித்தாலும்
கி.ராவின் புகழ் வாழ்க....