நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு

ஆண்டொன்று கழிந்தது.
மீண்டென்று வருவாரோ?
உணர்வுந்தும் மனம்தனிலே
வெற்றிடம் கலையாதோ?
மாண்டவர்தம் மரிப்பதில்லை
மக்கள் மனதில் வாழ்வதனால்,
கனவாகி போகுமென்று
நித்தம் நித்தம் நினைத்ததுண்டு.

மெய்கொண்ட வாழ்வுமட்டும்
மெய்யென்று நினைப்பதனால்,
உய்வெய்தும் வாழ்வொன்று
வானுலகில் உணர்ந்தோமிலை!
செய்திட்ட அருஞ்செயலை
அன்றாடம் அசைபோட்டே
பொய்யுலகை பெரும்பேறாய்
போற்றிப் பேணுகிறோம்.

சென்றோர்கள் வந்ததில்லை
வந்தோர்களும் நிலைப்பதில்லை
இறப்பெனும் நிலையொன்றே
நீங்காது நிலைத்ததொன்றே.
என்றெல்லாம் உரை பகன்றே
உணர்வொன்றும் மறைந்திடாதே.
சிறப்பாக வாழ்ந்தாரை
சிந்தையேந்தி வணங்கிடுவோம்.

வாழ்த்துக்கள் வேண்டி
வணங்கியேத்தும் அன்புமைந்தன்

எழுதியவர் : து.கிருஷ்ணமூர்த்தி (6-Jun-21, 11:21 am)
பார்வை : 428

மேலே