விடுதலைத் தேடும் சிறைகள்

விடுதலை தேடும் சிறைகள்
******************************
நல்ல கணவனுக்கு
மனையாளாய் ஆவதும்
நல்ல மனிதர்கள் வாழ்வதற்கு
மனையாய் ஆவதும்
முன் சென்ம வினை.
**
பல கற்கள் கூட்டு சேர்ந்து
மண், சீமேந்துடன் ஒட்டுறவாகி
எழும் கட்டிடம் ஒரு ஆலயமாயின்
அன்றாடம் ஆயிரம் கும்பிடுகள்.
அதுவே சிறைச்சாலை என்றால்
பல்லாயிரம் வசைகள்.
**
நாலு வாகனங்கள் ஓட ஒரு
சாலையாக இருக்கும் சந்தோசம்
நாலு குற்றவாளிகள் கூடும்
சிறைச்சாலையாக இருக்கும்
ஒரு கட்டிடத்துக்கு அமைவதில்லை.
**
சாதாரண வீடுகளைக் காட்டிலும்
உயரமான மதில்களைக் கொண்டிருந்தாலும்
உயர்ந்த மனிதர்களைக் கொண்டிராத
சிறைச்சாலைக் கட்டிடங்கள்
கட்டிடங்களின்
அவமானச் சின்னங்கள்.
**
குற்றவாளிகளின் எச்சில் பட்டே
கறைபடிந்துபோகும்
சிறைச்சாலைக் கட்டிடங்கள்
சில நிரபராதிகள்
உள்ளே வருகின்றபோது
கண்ணீர் விட்டு அழுதிருப்பது
கல்லுக்கும் மனசிருக்கும்
என்றறியாக்
கல்மனசுக்காரர்கள் எமக்குத் தெரியாது.
**
தன்னிடமிருந்து விடைபெற்றுச்
செல்பவர்களை 'இனியும் இங்கே
வந்துவிடாதே'என்று
எச்சரித்து வழியனுப்பும்
சிறைச்சாலைக் கட்டிடங்கள்,
திரும்பத்திரும்ப ஓடிவரும்
திருந்தாத சென்மங்களைப் பார்க்கையில்
எரிமலையாய்க் குமுறுகின்றன.
**
பசிக்கெனத் திருடித்
தன்னகம் வருவோன், உடன்
விடுதலையாக வேண்டுமெனப்
பதைக்கும் இக்கட்டிடங்கள்
ஊரை விழுங்கி ஏப்பமிட்டவன்
வந்துவிட்டால் வெளியில்
விடக்கூடாதென்பதைப்
பெரிதும் விரும்புகின்றன.
**
தண்டனை பெற்றக் கைதியாகி
உள்நுழைந்த பின்னரும்
தவறிழைப்பதையே பிழைப்பாய்க்
கொண்டிருக்கும்
குற்றவாளிகளை அடைத்துக்கொண்டு
பேரவஸ்தை கொள்ளும் சிறைக் கட்டிடங்கள்,
உள்ளே வந்து மனம்மாறி
நல்லவர்களாய்த் திரும்பிய ஒருசிலரை
எண்ணிக்கொள்வதால்தான்
சாய்ந்துவிடாமல் இருக்கின்றன.
**
அடைக்கப்பட்டவர்களைவிட
இன்னும் அடைக்கப்படாத,
அடைக்க வேண்டியக் குற்றவாளிகளை
நாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும்
சட்டத்தின் ஓட்டைவழியே
பார்க்குமிடத்து தன்னுடைய
மதில்களின் நீளம்
சீனப் பெருஞ்சுவராய் நீண்டு
நாட்டைச் சுற்றிலுமானதாக வேண்டிய
அவசியத்தை எண்ணிப்பார்க்கும்
சிறைச்சாலைக் கட்டிடங்கள்
உள்ளூரச் சிரித்துக்
கொள்ளவும் செய்கின்றன
**
குற்றவாளிகளை அடைத்தடுத்தே
குற்றவாளியைப் போலானக்
குற்ற உணர்ச்சியால்
நடைப்பிணமாகிக் கிடக்கும்
சிறைச்சாலைக் கட்டிடங்கள்,
தண்டனை முடிந்து கைதிகள்
சென்ற பின்னரும்கூட
ஆயுள்கைதியாய் கிடக்கும்
அவலத்திலிருந்து விடுதலைக் கேட்டு
விம்முகின்றன.
**
சமூகத்தில் தண்டிக்கப்பட்டும்
விடுதலையற்றக் கைதிகளைப்போல்,
தண்டனையும் கைதுமின்றித் தவிக்கும்
இச்சிறைச்சாலைக் கட்டிடங்களின் கண்ணீர்
வெறும் பச்சதாபங்களால்
துடைத்தெறிய முடியாததே!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jun-21, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 63

மேலே