தோற்றமுறா உட்பகை உய்தலரிது மட்பகைபோல் கொய்யும் மதி - யூகம், தருமதீபிகை 837

நேரிசை வெண்பா

ஏற்ற பகைவர் எழுகோடி ஆனாலும்
ஊற்றமுற நின்றொருகால் உய்யலாம் - தோற்றமுறா
உட்பகைதான் ஒன்றேனும் உய்தலரி(து) ஐயகோ
மட்பகைபோல் கொய்யும் மதி! 837

- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: எதிரே தோன்றிய பகைவர் ஏழு கோடி ஆனாலும் யாதொரு கேடுமின்றி இனிது வாழலாம்; உள்ளே மூண்டுள்ள வஞ்சப் பகைவன் ஒரு சிறியனே எனினும் உய்ய முடியாது; மண்பாண்டத்தைக் கொய்து நீக்கும் வெய்ய துரும்பு போல் விளிவை விரைந்து செய்து விடுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பகைமை எவ்வகையிலும் இடரே புரிவது; புறப்பகை, அகப்பகை, உட்பகை என அது மூவகை நிலையில் மேவியுள்ளது. அயலே பகிரங்கமாய் மாறுபட்டிருப்பவர் புறப்பகைவர்; உள்ளே உரிமையாய் மருவிக் கரவாய்க் கேடு புரிபவர் உட் பகைவர்; அகத்தே அமைந்த காமம், வெகுளி, மதம், மாச்சரியம் முதலியன அகப்பகை. இந்த மூவகைப் பகையும் ஒன்றை விட ஒன்று அஞ்சிக் காக்கத்தக்க நிலையினவாய் நிலைத்து நிற்கின்றன.

பகை விளைவதற்கு மூலகாரணம் பழக்கமான தொடர்பே. நெருங்கிப் பழக நேர்ந்தவர்.தாம் பெரும்பாலும் பகைவராய் நேருகின்றனர். தாயாதிப் பகை, பங்காளிப் பகை, இனப் பகை, ஊர்ப் பகை என வருவன பகை விளைந்து வரும் நிலைகளைத் தெளிவாய் விளக்கி நிற்கின்றன. தாயாதி முறையினாலேயே தருமரோடு மாறுபட்டுத் துரியோதனன் கொடிய பகைவனாய் நின்றான்; நெடிய துயரங்களைக் கடுமையாய்க் கருதிச் செய்தான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற்
..கிளர்மழைக்குக் கிரியொன் றேந்து,
கோவலன்போ யுரைத்தாலுங் குருநாடு
..மரசுமவன் கொடுக்க மாட்டான்,
நாவலம்பூ தலத்தரசர் நாடிரந்தோம்
..எனநம்மை நகையா வண்ணங்,
காவலன்றன் படைவலியு மெனதுதடம்
..புயவலியுங் காண லாமே. 25 கிருட்டிணன் தூதுச் சருக்கம், பாரதம்

இக்கவியின் சுவைகளையும் நயங்களையும் நயந்து காணுக.

வலிய பகை நெஞ்சில் மண்டியிருத்தலால் தாய பாகத்தைத் துரியோதனன் கொடுக்க மாட்டான்; கண்ணனை அவனிடம் தூது அனுப்ப வேண்டாம்; பொருது வென்றே அரசுரிமையை நாம் அடைய வேண்டும் என்று நகுலன் இவ்வாறு மான வீறோடு கூறியிருக்கிறான். கொடிய பகைமை கொண்டுள்ள எதிரியை அடியோடு தொலைப்பதே தகைமையாம் என வகைமையான தறுகண்மை கூர்ந்து அவன் கருதியிருப்பது இங்கே தெரிய வந்தது.

வெளிப்படையாய் நின்ற இத்தகைய புறப்பகையினும் அகப்பகை மிகவும் அஞ்சத் தக்கது. இந்தப் பகைவகையுள் காமமும், கோபமும் கொடியன; எவரையும் அடியோடு கெடுக்க வல்லன. அசுரர் எவரையும் வென்று உயர்ந்த வெற்றி வீரனாய்ச் சிறந்த நிலையில் விளங்கியிருந்த இந்திரனைக் காமம் ஒரு நொடியில் கெடுத்து விட்டது, பெரிய தவசியாய்ப் பேர் பெற்று நின்ற விசுவாமித்திரரைக் கோபம் நிலை குலைத்து வீழ்த்தியது; இவ்வாறு உள்ளேயே பதுங்கியிருந்து பொல்லாத அழிதுயரங்களைச் செய்தலால் காமம் முதலியன அகப்பகை என வந்தன. நித்திய சத்துருக்களாய் நிலைத்து வருகிற இவற்றை அடியோடு தொலைத்தவரே அற்புத ஞானிகளாய் அதிசய ஆனந்தங்களை அடைகின்றனர். புலன்களை வென்றவர் புனிதராய் நின்றனர்.

இன்னிசை வெண்பா

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை! 55 நீதி நெறி விளக்கம்

ஒரு சொல்லால் உலகையெல்லாம் வெல்ல வல்ல தவசிகளும் அகப்பகையை வெல்ல முடியாமல் நாளும் விழிப்போடு தம்மைக் காத்து வருகின்றனர் என்னும் இது கருதியுணரவுரியது.

’ற’ ‘க’ வல்லின எதுகையமைந்த நேரிசை வெண்பா

புறப்பகைதான் எவ்வளவும் போக்கலாம் பொல்லா
அகப்பகையேல் அந்தோ அழிவாம் - புறத்தமைந்த
கண்ணிமைமேல் புண்ணென்னில் காக்கலாம் கண்ணுள்ளே
நண்ணிவிடின் என்னாமோ நாடு!

புறப்பகையினும் அகப்பகை அழிதுயருடையது; கண்ணுள் துழைந்த புண் போல் எண்ணரிய வேதனைகளை இழைத்து விடுமென இது உணர்த்தியுள்ளது;. இந்த இருவகைப் பகைகளோடு இடைமருவியுள்ள உட்பகையையும் ஓர்ந்து விரைந்து கடிய வேண்டும். கடியாது கழியவிடின் குடியை அடியோடு அது கெடுத்து விடும். கேடு விளையுமுன் நாடிக் களைந்து விடுக;

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு! 889 உட்பகை

உட்பகை எள் அளவே ஆயினும் அது மலையளவு கேட்டை விளைத்து விடும் என இது குறித்திருக்கிறது. அதனைச் சிறிது என்று எண்ணி ஏமாந்து நில்லாதே; ஒல்லையில் களைந்து ஒழித்து விடு என விழிப்பூட்டி விரைவு படுத்தித் தேவர் இவ்வாறு விளக்கி யிருக்கிறார். அழிவுநிலை தெளிவாய் விழிதெரிய நேர்ந்தது.

மட்பகை போல் கொய்யும் என்றது உட்பகை செய்யும் அழிவு நிலையை நுட்பமாய் உணர வந்தது. குயவன் சக்கரத்தின் மீது மண்ணை வைத்துப் பானை வனைகிறான்; அது உருவாகி வருகிறது; அவ்வாறு வரும் போதே ஒரு துரும்பை அடியில் அணைத்து அதனை அடியோடு துணித்து விடுவன். உட்பகைவரும் இப்படி உறவுபோல் அணுகி உயிர்க்கேடு செய்து விடுவர்.

தாயோடு பிள்ளை தலைக்கூட விடாமல் குடியைக் குலைத்து உட்பகை கொடுங்கேடு விளைத்து விடும் என்பதை உவமைக் குறிப்பால் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்கின்றோம்.

புறத்தே இனிய உறவு போல் தோன்றி அகத்தே கொடிய இறவு சூழும் இந்த வஞ்சப் பகை நஞ்சினும் கொடியது; நாசம் புரிகின்ற இந் நீசத்தை அஞ்சி நீக்குக.

இன்னிசை வெண்பா

புறம்நட்(டு) அகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழிபெருங்
கண்ணோட்டம் செய்யார் கருவியிட்(டு) ஆற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து 56 நீதி நெறி விளக்கம்

புண்ணை மூடிவைத்தால் புழுமலிந்து உடல் நாசமாம்; உட்பகையைப் பொதிந்திருந்தால் துயர்மிகுந்து உயிர்க்கு அழிவாம். நண்ணிய புண்ணை அறுத்து ஆற்றுதல் போல் அண்ணிய உட்பகையைக் கடுத்து வெளிப்படுத்தி விரைந்து ஒழித்து விடுக எனத் தெளித்திருக்கும் இதை விழித்து நோக்க வேண்டும். .

பொறாமை, குரோதம் முதலிய சிறுமைகள் மனிதரைப் புலைப்படுத்தியுள்ளன; ஆகவே எவரையும் எளிதில் நம்பலாகாது; யாரிடமும் எவ்வழியும் மிக எ ச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

Man is daily iri danger from man. - Seneca

மனிதனிடத்திலிருந்து விளையும் அபாயத்தில்தான் மனிதன் நாளும் இருந்து வருகிறான் என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. பொல்லாதவரின் அல்லல்கள் அணுகாமல் யாண்டும் ஒல்லையில் ஓர்ந்து விலகி நல்ல மதியூகமாய் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-21, 4:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே