ஆசிரியர்களின் அழுகை

*"ஆசிரியர்களின் மௌனக் கதறல்" என்ற தலைப்பில் கவிதை ரசிகன் எழுதிய கவிதையை கடைசி வரைப் படியுங்கள் கண்கள் குளமாகலாம்......*


_ஆசிரியர்களின் மௌனக் கதறல்_😭

அன்று
ஏன் இன்னும்
விடியவில்லை என்று
கவலைப்பட்டோம்....
இன்றும்
கவலைப்படுகிறோம்
ஏன் விடுகிறதோ என்று...

எங்கள் காலைநேரம்
திருமண வீட்டின்
பரபரப்பில் முடியும்......
ஆனால்
இன்று
காலை நேர மட்டுமல்ல
எல்லா நேரமும்
மயான அமைதியிலேயே
நீண்டுக் கொண்டிருக்கிறது....!

நாங்கள்
வீட்டில் இருந்தாலும்
காலை
எட்டு மணி ஆனால்
பள்ளிக்கு புறப்படும்
எங்கள் மனதை
என்ன செய்தும்
தடுக்க முடியவில்லையே...!

எங்கள் மனம்
பள்ளிக்குள் சென்று
பார்க்கும் போது
வெரிச்சோடிப்போய் இருப்பதை
கண்டு
விம்பி வரும் அழுகையை
அடக்க படும் பாடிருக்கே
அதை
பாட்டிலும் வடிக்க முடியாது...
ஏட்டிலும் எழுத முடியாது...

கத்தாதீங்க !
கத்தாதீங்க! என்ற
கட்டளை இடுவோம் அன்று...
ஆனால்
அந்த கத்தல் சத்தத்திற்காக
இன்று
மனம் கதரி ஏங்குகிறதே!

படிக்கவில்லையென்று
கோபத்தில்
பிள்ளைகளை
அடிக்கும் போது
கண்ணீர் விட்டு
அழுவார்கள்....
அதைப் பார்த்து
கண்ணீர் விடாமல்
நாங்களும் அழுதிருக்கிறோம் ...
அன்று அழுவாமல்
சேர்த்து வைத்த
கண்ணீரை எல்லாம்
இன்று
யாரும் அடிக்காமலேயே !
அழுது செலவழிக்கிறோம்..!

மனதில்
எவ்வளவு கவலைகள்
இருந்தாலும்
பள்ளிக்குள்
கால் பட்டதும்
ஒளிபட்டு மறையும
இருள் போல்
எல்லாக் கவலைகளும்
இருந்த இடம் தெரியாமல்
மறைந்து விடுமே!
அந்த நாள்
என்று வருமோ?.

கை வலிக்க அடித்தாலும்
அடுத்த
சில நிமிடங்களிலேயே
வாய் வலிக்க
வந்து பேசும் ....
அந்தப் பால்
மனம் கொண்ட
முகங்களை என்று
பார்க்கப் போகிறோமோ?

ஏ சி
ஏர் கூலர்
பக்கத்தில் இருந்தாலும்
மனம் என்னவோ
பள்ளி மரங்களின்
குளிச்சிக்கே ஏங்குகிறதே!

எல்லோரும்
செத்தப் பிறகு தான்
சொர்க்கத்திற்குப் போவார்கள்
ஆனால்
நாங்களோ
உயிரோடு அல்லவா!
சொர்க்கத்திற்கு போய்க்கொண்டிருந்தோம்
ஐயோ....!
யார் கண் பட்டதோ
தெரியலையே!
இப்போது
நரகத்தில் அல்லவா!
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...!

சக ஆசிரியர்களோடு
பேசிக்கொண்டு
சாப்பிடும்போது
உப்பில்லாத உணவும்
சுவைக்குமே!
இன்று
சுவையான
உணவை சாப்பிட்டாலும்
சுவையற்று போகிறதே!

அன்று
உணவிருக்கும்
பசி இருக்கும்
ஆனால் சாப்பிட
நேரம் இருக்காது .....
இன்று...
உணவும் இருக்கிறது
நேரமும் இருக்கிறது
ஆனால்
பசிதான் இல்லையே....!
பாவி வயிற்றில்....

அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின்
வேதனைகளை
கவலைகளை...
எந்தக் கொம்பனாலும்
எழுதிட முடியாது....!
அந்தக் கம்பனாலும்
வடித்திட முடியாது.....!

தெய்வம்
இருக்கும் இடத்திற்கு தான்
எல்லோரும் போவார்கள்...
ஆனால்
நாங்கள்
இருக்கும் இடத்திற்கே
அந்தத் தெய்வங்களே வருமே!
மீண்டும்
அந்தத் தெய்வங்களோடு
வாழும் நாள் எந்நாளோ?

பசி வந்தால்
பத்தும்
பறந்து போகும் என்பார்கள்...
அந்தப் பிஞ்சு குழந்தைகளின்
சிரிக்கும் முகத்தைப் பார்த்தால்
ஐயோ...!
அந்தப் பசியே பறந்து போகுமே!

அந்தப் பிஞ்சுக் கரங்கள் தொடும்போது
இந்த மண்ணில்
ஒவ்வொரு நாளும்
புதியதாக பிறந்தோமே!
சாமி....!
அந்தப் ஸ்பரிசம்
இல்லாமல் இன்று
ஒவ்வொரு நாளும்
உயிரோடு இறந்தோமே..!

ரோஜா இதழகளால்
திக்கித் திக்கிப் பேசும்
அந்தத் தீந்தமிழின்
சுவையைக் கேட்ட
நாட்களின்
நினைவுகள் எல்லாம்....
நெஞ்சினில்
தீயாய் எரிகின்றதே...!
நெருப்பாய் சுடுகின்றதே...!

காலைதோறும்
விடியல் வரும்
எங்கள் கவலைக்கு
விடியல் என்று வருமோ...?

இதை படித்தவர்கள்
கேட்டவர்கள்
யாரேனும் இருந்தால்..
தயவு செய்து
மறக்காமல் சொல்லுங்கள்
"நாங்கள்
பிள்ளைகளை கேட்டதாக...!"

படைப்பு

*கவிதை ரசிகன்*


நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-Jun-21, 7:01 pm)
பார்வை : 49

மேலே