மண் சார்ந்த வாழ்க்க மடமாறி போச்சு…
மண் சார்ந்த வாழ்க்க
மடமாறி போச்சு….!
சீமக் கருவேலம்
சிரமமில்லா வளருது
சாம வெளஞ்ச
எங்க சந்ததியர் கழனியில ….!
என் முப்பாட்டன் காலத்துல
மூனுபோகம் விளைஞ்ச நிலம் …
என் அப்பன் காலத்துல
அம்பாரமா இருந்த இடம்….
எனக்கு கருத்து தெரிஞ்சு
இப்ப கரம்பா போட்டுவிட்டேன்…!
காலக் கொடும இது
வேல தேடி
நான் வெளியபோறன்…!
நூரு நாள் வேளைக்கு
ஊர் கூடி தெருக்கோடியில போகயில…
கல வெட்டிய கையில எடுத்து
கடைசியா அவ போனா …!
ஏர்முன நுகத்தடிக்கு
ஏங்கி தவிச்ச காள
இங்கு என்ன நடக்குதுன்னு
எதுவும் தெரியாம
ஏக்கத்தோடு காத்திருக்க …
என் மண் சார்ந்த வாழ்க்க
மடமாறி போச்சேன்னு
மனச தேத்திக்கிட்டு
நான் வண்டியேறி புறப்பட்டன் …!
சம்சாரி என்னபோல
மனம் சரிஞ்சிடாம பலபேரு….
மாற்று வேலைக்கு
மணிக்கணக்கா காத்திருந்தோம்
நாலுமுன சந்திக்கும்
தார் சால ஓரத்துல …!
வீட்டுக்கு ஒரு ஆளுன்னு
வீழ்ந்தடிச்சு வருவாங்க
வேலைக்கு …!
வேணாமுன்னு சொல்லாம –
அம்புட்டுபேரையும்
ஏத்துக்கிட்ட எங்களுக்கு
வேல எவன் தருவான்னு
காத்திருக்கம் நாங்க ….!
எங்க மண் சார்ந்த வாழ்க்க
மடமாறி போச்சுன்னு….!