பாரதி வெண்பா மாலை

எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்
இருதயத்தில் பொங்கும் இரக்கம் - உருகவரும்
ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்
மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து.
 
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வாநெஞ்சே! வல்லறிஞர்
தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் - ஆழ்த்தி
அறங்கொல்லும் காலன் அரண்டோடச் செய்யும்
திறங்கொண்ட செல்வன் சிறப்பு.
 
சிறப்பன்றோ பாரதியின் செந்தமிழ்ப்பாட் டோசை,
சிறப்பன்றோ பாட்டின் தெளிவு, - சிறப்பன்றோ
சீர்கொண்ட பாட்டால் செவிமகிழச் செய்தவனின்
பார்போற்றும் தேசப் பணி.
 
பணிந்து நெடுந்துயரில் பாடுபட வேண்டாம்
துணிந்திங்கு உயர்த்திடுவோம் தோளை - இணைந்து
செயல்பட்டால் வாழ்வுஉயரும் என்றான் தெறிக்கும்
புயல்வேகப் பாடல் பொழிந்து.
 
பொழிந்தான் இசைப்பாடல் புத்தெழுச்சி ஊட்ட
மொழிந்தான் மனம்கிளரும் உண்மை - செழுந்தேன்
திரண்டெழுந்த சொல்லால் தெளிவுறவே தந்தான்
இருண்டிருந்த நெஞ்சுக்கு இதம்.
 
இதம்துயர் என்றே எதுவரினும் வாழ்வில்
நிதம்களித்து இன்புற்று நிற்போம் - மதங்களும்
சாதிகளும் செய்யும் சதியறுப்போம் என்றுரைத்தான்
போதனையே வாழ்வின் பொருள்.
 
பொருள்விளக்கும் ஞானம் புரியும்வகைப் பாடி
இருள்விலக நல்விளக்கை ஏற்றி - அருள்நிறைந்த
ஆன்மநிலை காட்டி அறமுணர்த்தும் பாரதியின்
வான்புகழைப் போற்றிடுமென் வாய்.

வாயில் இனிக்க வருந்தமிழ் வார்த்தைகளால்
பாயும் ஒளிபடைத்த பாரதியின் - தூயகவி
கட்டுஅதனை வெட்டிச் சிறுமைக் களைசாய்த்துச்
சுட்டெரிக்கும் தீயின் சுடர்.
 
சுடர்கொள் தமிழ்க்கவிஞன் சொற்கேட்டு நெஞ்சே
மடமை வலைமீண்டு வாழ்வாய் - அடிமைச்
சுமைகள் தவிர்த்துஉயரம் தொட்டிடவே ஞான
இமயச் சிகரத்தை எட்டு.
 
எட்டிப் பிடிக்க இவன்வசம் வான்வருமே
தொட்ட எழுத்தும் சுடர்க்கவியாம் - மெட்டில்
பிரியா இவன்பாட்டும் பேரிடர்செய் பொய்யை
இரையாக்கித் தின்னும் எரி.
 

எழுதியவர் : இமயவரம்பன் (20-Jun-21, 4:29 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 980

சிறந்த கவிதைகள்

மேலே