மொட்டை மாடி போதும்

மொட்டை மாடி போதும்
_________________________________ருத்ரா

மொட்டை மாடி போதும்.
இந்த நட்சத்திரங்களை
கழற்சிக்காய்களாய் ஆக்கி
அவளுக்குப்பதில் நானே
அம்மானை ஆடிக்கொண்டிருக்கலாம்.
இந்த காற்றுவெளி போதும்
இதனுள்ளும் ஊடுருவி
அவளோடு முகம் ஏந்தி
நாளைச் சூரியனை
அவள் சுடர்விழிகளாக்கி
தேன் ததும்பும்
அவள் பார்வைகளில்
தோய்ந்து கொள்ளலாம்.
எங்கோ கிறீச்சிடும்
சுவர்க்கோழிகளின்
ஒலிப்புகளைக்கூட
சுருதி கூட்டி
அவள் சிணுங்கல்களில்
யாழ் இசைக்கலாம்.
அதோ தூரத்து தொடுவான‌
விளிம்பின் கோடு
அவள் இதழ் அவிழ்த்து
அதோடு அவள் இதயம் சேர்த்து
ஏதோ எனக்குத் தருவது போல்
அல்லவா இருக்கிறது.
என் கைகளையும்
பல கோடி ஒளியாண்டுகள்
தூரத்துக்கு நீட்டி
அவளை எட்டிபிடித்து விடலாம்
என்ற வேகத்தில்
தடதடத்து ஓடுகிறேன்.
................
இதென்ன?
சிவப்பு மஞ்சளில்
ஒளி உதடுகள்
என்னை நோக்கி...
சரி தான்.
விடிந்து விட்டது.
பாய் தலையணைகளை
சுருட்டி எறி.
கரடு முரடாய்
ஏமாற்றங்களின் கூர்மையான‌
பல் சக்கரங்கள்
வாழ்க்கை என்ற பெயரில்
என் மீது
வழக்கம்போல்
ஏறி ஏறி நசுக்கட்டும்.
_________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (24-Jun-21, 10:50 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : MOTTAI maati pothum
பார்வை : 49

மேலே