இப்பவே கண்ணை கட்டுதே நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

இப்பவே கண்ணை கட்டுதே!


நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 96.
விலை : ரூ.80. தொலைபேசி : 0442 24342810


******

கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் நோய் தொற்று காலமான இந்த ஒரு வருடத்திலும் ஓய்ந்திருக்கவில்லை. எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர். முகநூலில் அவ்வப்போது பதிந்து கொண்டே வந்த புதுக்கவிதைகளை தொகுத்து ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்ற பெயரில் நூலாக்கி விட்டார்கள். புகழ்பெற்ற வானதி பதிப்பகம் தொற்றுக் காலத்திலும் சுறுசுறுப்புடன் இயங்கி சிறப்பாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுகள்.



திருமிகு ராசி அழகப்பன் அவர்கள் நீண்ட நெடிய அணிந்துரை நல்கி சிறப்பித்துள்ளார். ஏர்வாடியாரின் இனிய நண்பர் புலவர் சு. மதியழகன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கை ஆக்கியுள்ளார்.



மிச்சத்தை விட்டுப்போகும்
எச்சமாய்த் தன்
எழுத்துகளை விட்டுச்செல்கிற
எழுத்தாளன் செல்வந்தன்!



காலத்தால் அழியாத செல்வம் நூல். அசையா சொத்துக்களை விட மதிப்பு மிக்கது அசையும் சொத்தான நூல். சொத்து விட்டுச் செல்பவன் பணக்காரன் அல்ல, வருங்கால சந்ததிக்கு எழுத்தை, நூலை விட்டுச் செல்பவனே பணக்காரன் என்கிறார். உண்மை தான். இது எழுத்தாளன் பார்வை. ஆனால் வாரிசுகளின் பார்வை வேறு.



போவதற்கென்ன
வரட்டுமா ... என்ற அனுமதி?



போறேன் என்று சொல்லக் கூடாது, வாறேன் என்று சொல்லி விட்டு போக வேண்டும் என்று சொல்வார்கள். இந்த மூட நம்பிக்கை இன்றும் பலரிடம் உள்ளது. எள்ளல் சுவையுடன் சுட்டியது சிறப்பு.



பிரிந்திருக்கலாமே
என்று சேர்ந்த பிறகும் ;
சேர்ந்திருக்கலாமே
என்று பிரிந்த போதும் ;
தோன்றுகிறதா?
அது தான் காதல்!



இணைந்து விட்ட காதலர்கள் ஏன் இணைந்தோம், பிரிந்திருக்கலாமே என்று ஏங்குவதும், பிரிந்திட்ட காதலர்கள் இணைந்திருக்கலாமே என்று ஏங்குவது தான் காதல் என்பதை அழகாக காட்டி உள்ளார். ஊடல், கூடல் என்ற பொருளிலும் பொருள் கொள்ளலாம். சொற்கள் குறைந்த, பொருள் நிறைந்த புதுக்கவிதை நன்று.



பேச்சு புகழ் தரும்
புத்தகம் மட்டுமே நிரந்தரம்!



தமிழறிஞர், துணைவேந்தர், எழுத்தாளர் மு. வரதராசன் அவர்களுக்கு, பேச்சில் உடன்பாடு இல்லை ; ஆனால் எழுத்தில் ஈடுபாடு அதிகம். அவருடைய செல்லப்பிள்ளையான தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, பேசும் பேச்சு காற்றோடு கலந்து விடும். ஆனால் எழுதும் எழுத்து, நூலே காலம் கடந்து நிற்கும் என்று அறிவுறுத்தியதன் பேரில் அவர் எழுதத் தொடங்கி 150 நூல்களை எழுதிக் குவித்தார். அவர் உடலால் மறைந்திட்ட போதும் எழுத்தால், நூலால் இன்றும் வாழ்கிறார். அவரது செல்லப்பிள்ளையான என்னையும் எழுதிட அறிவுறுத்தியதன் பேரில் 22 நூல்கள் நான் எழுதி விட்டேன். ஏர்வாடியாரும் பல நூல்களை எழுதி குவித்து வருகிறார் இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இந்த புதுக்கவிதை.



காந்தி சிலையைக்
காணவில்லை
யாரோ ‘சுட்டு’ விட்டார்கள்.



எள்ளல் சுவையுடன் எழுதிய புதுக்கவிதை நன்று. காந்தியைத்தான் கொடிவன் கோட்சே சுட்டு விட்டானே, மறுபடியுமா சுட்டு விட்டார்கள் என்று வியந்து படித்தால், சுட்டு விட்டார்கள் என்றால், ‘திருடி விட்டார்கள்’ என்பது இன்றைய இளைய தலைமுறையினர் அரத்தம். அந்த அர்த்தத்தில் எழுதிய கவிதை சிறப்பு. சிலைகளைத் திருடுவது மட்டுமல்ல, சில கயவர்கள் அவமானப்படுத்தியும் விடுகிறார்கள். சிலைகளைப் பாதுகாப்பதே காவலர்களுக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது இன்று.



உன்னை நான்
மதிக்கிற போது
மதிக்கத் தெரியாத நீ
உன்னையே
அவமதிக்கக் கற்றுக் கொள்கிறாய்!



பிறர் உன்னிடம் எப்படி மதிக்க நடந்து கொள்ள வேண்டுமேன்று எதிர்பார்க்கின்றாயோ அது போல நீ பிறரை மதிக்க வேண்டும். நம் மதிப்பை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் மதித்தால் திருப்பி மதிக்க வேண்டியது கடமை, பொறுப்பு என்பதை உணர்த்திடும் வைர வரிகள் நன்று.



ஒரே பாட்டில்
உயர்ந்து காட்டுவதல்ல வாழ்க்கை
படாத பாட்டில்
பெறுகிற வெற்றியே வாழ்க்கை !



இன்றைய இளைய தலைமுறையினர், திரைப்படங்கள் பார்த்துவிட்டு, அதில் வரும் கதாநாயகன் ஒரே பாட்டில் உயர்வதாக காண்பிக்கப்படுவது போல, நிசத்தில் நாமும் உயர்ந்து விடலாம் என்று எண்ணுகின்றனர். அது கற்பனை. ஆனால் வாழ்க்கை அப்படி அல்ல, படாத பாடு பட்டுத்தான் வாழ்க்கையில் உயர முடியும் என்ற பாடத்தை உணர்த்திடும் கவிதை நன்று.



எழுத வருகிறது
என்பதெல்லாம் சரி
எழுதியென்ன வருகிறது?
என்கிறாள் மனைவி !



இன்றைய எழுத்தாளர்கள் அனைவரின் மனைவியும் கேட்கும் கேள்வி இது தான். ஒரு நகைச்சுவை சொல்வார்கள். என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் எழுத்தாளராக உள்ளேன் என்றாராம். அது சரி, அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க? என்று திருப்பி கேட்டாராம். அதுபோல நன்றாகத் தான் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் அந்த எழுத்திற்கான சன்மானம் என்ன வருகிறது என்ற கேள்விக்கு மௌனமே விடையாகின்றது. நாட்டு நடப்பை உணர்த்திடும் கவிதை. நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகளின் அணிவகுப்பு, பாராட்டுகள்.



--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (3-Jul-21, 5:00 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே