கடிகார முட்கள்
கடிகாரம் கேட்டது
நித்தம் நீயும் களைப்பாற
நிலவும் வந்து கதை சொல்லும்
நீல வண்ண நிமிடமுள்ளே
நிதானமாய் நீயும் நடப்பதற்கு
கற்றுக்கொண்டது எங்கேயோ?
நீண்டு அகன்ற காட்டினிலே
நீல வானம் குடை பிடிக்க
நித்தம் வந்து நீர் பருகும்
காட்டு யானைக் கூட்டத்திடம் - நானும்
கருணையோடு கேட்டறிந்தேன்
மஞ்சள் பூசிய உன் அழகில்
மலரே வந்து தேன் கொடுக்கும்
மஞ்சள் வண்ண மணி முள்ளே
மந்தமாய் நீயும் இருப்பதற்கு
கற்றுக்கொண்டது எங்கேயோ?
பசுமை மாறாக். காட்டினிலே
மழையின் சாரல் பொழிகையிலே
மறைந்து நின்று மான் பிடிக்க
பதுங்கி நின்ற புலியினிடம் - நானும்
பயப்படாமல் கேட்டறிந்தேன்
வெண்மேகங்களில் உலா சென்றால்
வெட்கத்தில் ஒளியும் விண்மீன்கள்
வெண்மை நிறம் கொண்ட நொடிமுள்ளே
வேகமாய் நீயும் ஓடுவதற்கு
கற்றுக்கொண்டது எங்கேயோ?
களைத்து உறங்கும் கடல் அலையை
கதிரவன் ஒளி பட்டு எழுப்பிவிட
இரையை தேடும் கழுகு வந்தால்
நீரின் அடிக்கு ஓடுகின்ற மீனை- நானும்
நிறுத்தி வைத்து கேட்டறிந்தேன்.