கார் சக்கரத்தை மாற்றலாம், கால சக்கரத்தை அல்ல
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல ஒவ்வொரு ஆளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாரத்தின் ஏழு நாட்கள் அதற்கு பெயர்கள் இவை யாவும் நம் வசதிக்காகவும் தேவைக்காகவும் நாம் சூட்டியது. இயற்கையை பொறுத்தவரை நொடி நிமிடம் மணி வருடம் எல்லாமே காலத்தின் பரிமாணம். அவ்வளவே. மனிதர்களும் இந்த விதத்தில் நேரத்துடன் ஒப்பிடக்கூடியவர்கள். காலம் நகர்கிறது. மனிதனும் வளர்கிறான். காலம் உருள்கிறது. மனிதனின் வாழ்வும் உருள்கிறது. காலம் பறக்கிறது. மனிதனின் எண்ணங்களும் சிறகடித்து பறக்கிறது. காலம் எதற்காகவும் நிற்பதில்லை அல்லது அதன் வேகத்தை குறைக்கவோ கூட்டவோ இல்லை. மனிதனும் அவனுடைய மொத்த வாழ்வினை குறைக்கவோ கூட்டவோ இயலாது.
ஆனால் காலத்திற்கும் நமக்கும் உள்ள மிக பெரிய வேறுபாடு, காலம் சிரிப்பதில்லை.காலம் அழுவதில்லை. காலம் கவலையும் பயமும் கொள்வதில்லை. ஏதாவது ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் இருப்பதில்லை. காதல் கொள்வதில்லை, நினைத்தவரையும், பார்த்தவரையும் அடையவேண்டும் என்று ஏக்கம் கொள்வதில்லை. எனக்கு இன்னும் வேண்டும் , எல்லாமும் வேண்டும் அன்று ஆசையோ பேராசையோ கொளவ்து இல்லை. இதற்கு முக்கிய காரணம் இரண்டேதான். காலம் அருவம், மனம் இல்லாதது. அதாவது உருவமற்றது மற்றும் சிந்தனை செய்ய முடியாதது. ஆனால் கண்ணுக்கு தெரியாத இந்த காலமும், கையில் பிடிபடாத வெற்றிடமும்தான் இந்த உலகையும் , பிரபஞ்சங்கள் அனைத்தையும் தன்வசம் கொண்டுள்ளது. நேரம் வெற்றிடம் இந்த இரண்டினால் உருவாகியது தான் அண்ட சராசரங்களும்.
இருப்பினும் மாறாத காலத்தின் தன்மயினூடே மனிதனால் கண்டுபிடிக்க பட்ட நேரம் என்னும் அளவுகோல் உலகிலும் விண்ணிலும் நிகழும் சம்பவங்களை நேரம் என்ற கோணத்தில், நிகழ்ந்தவை, நிகழ்கின்றவை, நிகழப்போகிறவை என்று வகுத்து பிரித்து காட்டுகிறது. உலகிலும் பிரபஞ்சத்திலும் எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது ஒன்று. அது தான் மாற்றங்கள். ஒருவர் வாழ்வில் ஏற்றம் இருக்கலாம், இறக்கம் இருக்கலாம். ஆனால் மாற்றங்கள் இல்லாமல் இருக்க முடியாது. நம் உடலையும் மனதையும் எடுத்து கொள்ளுங்கள். பிறந்ததிலிருந்து இப்போது வரை நம் வெளிப்புற தோற்றத்திலும் உட்புற தோற்றத்திலும் எவ்வளவு மாற்றங்கள். வெளிப்புற மாற்றம் கண்ணில் தெளிவாக தெரிகிறது. உட்புற மாற்றமோ கண்ணனுக்கு புலப்படாவிட்டாலும் , நம் உணர்வுகளுக்கு நன்கு தெரிகிறது.
நம் பிறப்பை பற்றியும் இறப்பை பற்றியும் இவ்வுலக வாழ்வை பற்றியும் எவ்வளவோ வல்லுநர்கள் எவ்வளவோ விதமாக கண்டு, சோதித்து, அனுபவித்து, உணர்ந்து, அவரவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். இப்போது உள்ள வல்லுனர்களும் இவைகளை பற்றிய பல செய்திகளையும், விவரங்களையும், வெளியிட்டு வருகிறார்கள். நாம் கண்ணில் காணும் உடலில் உணரும் பல விஷயங்களை பல தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், ஆன்மீகவாதிகள் போன்ற பலர் அவரவர் கண்ணோட்டத்தில் உரைத்து வருகின்றனர். விஞ்ஞான ரீதியாக பல விஷயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கண்ணனுக்கு தெரியாத ஆனால் உணரக்கூடிய கற்று, சுவாசம், சத்தம் போன்றவைகள் விஞ்ஞானிகளால் நிரூபிக்கபட்டவை.
ஆயினும் நம் உடலின் உள்ள உயிர் குறித்தது பலருக்கு பல வித கருத்துக்கள். விஞ்ஞானிகளை பொறுத்தவரையில் ஒருவர் இறக்கையில் அவர் உள்ளே இருக்கும் உயிர் சக்தி பிரிந்து விடுகிறது. ஆனால் அந்த உயிருக்கு உருவம் இல்லை என்பதால் விஞ்ஞானிகளால் ஆத்மா என்ற ஒரு கருத்தை ஏற்று கொள்ள இயலவில்லை. இந்து மதம் மற்றும் பௌத்த மதத்தில் தான் ஆத்மா என்பது அருவமான ஒன்று அதற்கு அழிவு இல்லை என்ற திடமான கருதும் நம்பிக்கையும் உள்ளது. இருப்பினும் எவர் ஒருவரும் இறந்த பின் எப்படி இருக்கும் என்கிற அனுபவத்தை தெள்ள தெளிவாக விளக்கியது இல்லை. விளக்கவும் இயலாது. ஆத்மாவின் விஸ்வரூபம் தான் பரமாத்மா என்று ஆன்மீகவாதிகள் உரைக்கின்றனர். ஆனாலும் இவை அனைத்தும் அவரவர்கள் நோக்கும் விதமும், நம்பிக்கையும் தான்.
ஒரு சாதாரண மனிதனுக்கு நம்பிக்கை இருப்பின் கடவுள் இருக்கிறார். நம்பிக்கை இல்லையேல் கடவுள் என்று ஏதும் இல்லை. ஆக, மனித சமுதாயம் இந்த இரு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் கடவுள் என்ற ஒரு கருத்தை நம்புகின்றனர். இதன் காரணமாகத்தான் பல மதங்கள் இவ்வுலகில் உருவாகியது. கடவுள் என்று ஒன்று உண்டு. அதற்கு பல உருவங்கள், அவரவர் மத கோட்பாடுகளின் படி. சில மதங்களில் கடவுள் என்பது கண்ணுக்கு தெரியாத அருவம்.
இறப்பு என்ற ஒன்று நிச்சயம் என்பதால் மனிதன் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி, வாழும்போதும் இறப்புக்கு பின்னும், மனிதர்களை கடந்த ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை வைக்கிறான். இவை அனைத்தையும் உருவாக்கிய அதே மனிதன் தான் சுய நலம் உள்ளவனாகவும், பேராசை கொண்டவனாகவும், பிறரை கவிழ்க்கும் மனப்பாங்கு உள்ளவனாகவும், உதவும் எண்ணம் இல்லாமலும் , கருணை அன்பு கொள்ளாமலும், கவலை பயங்களுடன், மகிழ்ச்சி என்னும் ஒன்றை தேடி தேடி அலைந்து வாழ்ந்து இறுதியில் மடிகிறான்.
வாழ்கை என்ன என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கலாம். ஆனால் உண்மை என்ன என்பதை எவராலும், ஒருவர் உணர்ந்து வியந்தாலும், எப்போதும் விளக்க முடியாது, விவரிக்க முடியாது. ஜடமாக பிறந்து சடலமாகும் நம் மனித குலத்தின் வாழ்க்கையை "மாயை" என்றால் அது ஓரளவுக்கு பொருந்துவதாக உள்ளது என்பது என் எண்ணம். உங்களின் திண்ணமான எண்ணத்தை நான் அறிய முடியுமா?
ஆனந்த் ராம்