கருப்பொருள் மின்கலன் - கட்டளைக்கலித்துறை

இயந்திரம் கொண்டே இயங்கிட வாகனம் செய்தனரே
வியக்கும் வகையில் எரிபொருள் கொண்டே அதனையுமே
இயக்கிட கற்றே தெளிந்து அறிஞனாய் நீளறிவால்
முயன்று பலரையும் ஏற்றியே செல்லுவர் மென்மையிலே. ---- (1)

நெடுமையாய் வண்டியும் தூங்க குளிக்க கழிக்கவுமே
தடதட என்று ஒலியை எழுப்பியே ஓடுகின்ற
புடத்து இரும்பால் புனைந்த தொடரி வியப்பின்முடி
அடுத்து மனிதனால் ஆக்கிய வாகனம் வான்ஊர்தியே ---- (2)

ஒருவர் இயக்க இருநிலை சக்கரம் பூட்டியதாய்
இருவர் பயணம் புரியும் வகையில் இயந்திரத்தை
பொருத்தி சிறியதாய் செய்தனர் வண்டி வகையையுமே
திருநிலை தேவன் விரும்பினான் செல்ல இவைகளிலே ---- (3)

இருவகை எண்ணெயில் ஓட்டும் வகையிலே வாகனத்தை
உருவாக் கியநம் பொறிஞரும் ஆழ்ந்தே புதியமுறை
கருத்தால் நவீன வகையிலே மின்கலம் மூலமாக
பெரியதாய் வாகனம் ஓடிட கண்டனர் பாதையையே ---- (4)

இருபதாம் நூற்றாண் டுடையகா லப்பின் பகுதியிலே
அரும்பிய எந்திர வாகன எண்ணமே உந்தியது
பெருமை மிகுந்த நிலையிவே வண்டியை செய்திடவே
கருப்பொருள் மின்கலன் என்றே வழிவகை வித்திட்டதே ---- (5)
------ நன்னாடன்.

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்

எழுதியவர் : நன்னாடன் (16-Jul-21, 10:43 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே