அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் திருத்தல வரலாறு
அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன்
திருக்கோயில் திருத்தல வரலாறு
விநாயகர் துணையுடன்
திருக்கோயில் தோற்றம் .
சதுர்யுகத்தில் ஆதி கிரேதாயுகத்திற்கு முன்னர் சிவபெருமானின் பிரம்மகத்தி தோஷம் நீக்கும் பொருட்டும், கலியுக மாந்தர்கட்கு அருள்பாலிக்கும் பொருட்டும், அன்னை பராசக்தி சிவ சுயம்பு புற்றுருவாக திரு அவதாரம் செய்து அங்காளம்மனாக எழுந்தருளிய புண்ணியஸ்தலம் தான் மேல்மலையனூராகும். இத்திருக்கோயிலில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த அருள்பாலிப்பது ஓரு சிறப்பு அம்சமாகும்.
அங்காளம்மன் வரலாறு சுருக்கம்.
ஆதியுகமாக மணியுகத்தை ஆட்சி செய்து வந்தவள் ஏகஜகத் ஜோதியான ஆதிசக்தி.
சத்தி தனது மணிமந்திரங்களால் படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல் ,அருளல் ஆகிய
ஐந்து தொழிலை நடத்த பிரம்மா,விஷ்ணு,ருத்திரன்,மகேஸ்வரன்,
சதாசிவன் ஆகிய ஐவரைப் படைத்தாள்.
இவர்கள் பஞ்ச பூதங்களைப் படைத்து பலவகை உருவங்களில் உலகை நடத்தினர் .
பிறகு பராசக்தி
சிவனுக்கு ஈஸ்வரியையும்,
விஷ்ணுவுக்கு லட்சுமியையும் ,
பிரம்மாவுக்கு சரஸ்வதியையும் துணையாக அளித்தாள்.பிரம்மா படைப்பு தொழிலில் தனக்கு உதவி செய்ய 10 பிரஜாபதிகளைப் படைத்தார்.இவர்களில் முதன்மையானவர்
தட்சன்,இவர் கோடானகோடி உயிர்களையும்,
முனிவர்களையும் படைத்தார்,பிறகு இவருக்கு,
ஆதிபராசக்தியின்அம்சமாகத் தாட்சாயிணி என்ற பெண் தோன்றினாள்.அவளை அவன் பரமசிவனுக்கு மணமுடித்தான்.சிவனுக்கே தான் மாமனார் ஆகிவிட்டதால் தட்சன் அனைத்து சக்திகளையும் பெற விரும்பி ஓரு மகா யாகம் நடத்தினான்.அந்த யாகத்திற்குச் சிவபெருமானை அழைக்கவில்லை.ஆணவம் கொண்ட தந்தை தக்கனை அடக்க தாட்சாயணி
சிவன் தடுத்தும் கேளாமல். சக்திஅம்சத்தைச் சிவனிடம் நிலையாக நிறுத்திவிட்டு மாய உருவில் தட்சனுடைய யாகத்திற்குச் சென்றாள்.சிவனை அழைக்காத தவறை சுட்டிக்காட்டிய போது தட்சன் அவளை பழித்துப்பேசி அவமானப்படுத்தினான்.
அதனால் கோபம் கொண்ட தாட்சாயணி தனது பூதஉடலையாகத்தில் வீழ்த்தி கருகி அழித்து உருவமற்ற அவதாரமாக நிலைத்து நின்றாள்.அவளுக்கு அங்காளி சக்தி என்பது பெயர்.
நடந்ததை அறிந்த சிவபெருமான் பெரும் கோபம் கொண்டு தாட்சாயணியின் கருகிய உடலை எடுத்து தன் தோள் மேல் போட்டுக்கொண்டு ஆங்கார நடனம் ஆடினார்.
(அங்காளி சக்தி சிவபெருமானிடம் விட்டுவந்த ஆதிபராசக்தியின் அம்சத்துடன் இணைவதற்காகவே. பர்வகராஜன் மகாளகப் பிறந்து.பார்வதி என்ற பெயரோடு வளர்ந்து.பரமேஸ்வரனையே மணந்தாள்.)
சிவன் பார்வதி முலம் ஐந்து மணி மந்திரங்களை அறிந்து ,பஞ்சமுக மந்திரத்தை உச்சரித்து பஞ்சமுக பரமசிவனாக ஆனார்.அதை கண்ட நான்கு முகம் கொண்ட பிரம்மனும் .எனக்கு ஐந்தாவது தலை வேண்டும் என்ற வரத்தைச் சக்தியிம் கேட்டுப்பெற்றார்.
இதனால் பிரம்மா தான் சிவனுக்குச் சமமாக இருக்கிறோம் என்ற அங்ககாரத்தோடு விளங்கினார்.ஓரு சமயம் (சந்தோபி சுந்தரர்)என்ற இரண்டு அரக்கர்களின் கொடுமைகளில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற வேள்வி ஓன்றை பிரம்மா நடத்தினார்.அந்த யாகத்தின் முலம் (திலோத்தமை)என்ற தேவமங்கை தோன்றினாள்.
திலோத்தமையில் பேரழகில் மயங்கிய அசுரர் கூட்டம் அவள் பின்னே சென்றது, திலோத்தமையின் வடிவழகில் மயங்கிய பிரம்மாவும் அவளைத்தேடி ஓடினார்.திலோத்தமை அடைக்கலம் தேடி கைலாசம் சென்றாள்.பிரம்மாவும் விடாது கைலாயத்திற்குச் சென்றார்.
ஐந்து தலைகளுடன் எதிரே வருபவர் பரமசிவன்தான் என்று கருதிய பார்வதி அவரை வணங்கினாள்.அப்போது சிவனும் ஐந்து தலையுடன் அங்கு வந்தார்.பார்வதி குழப்பம் கொண்டு ஐந்து தலை உள்ளதாள் தானே இந்த தவறு நடந்துவிட்டது.ஆகவே, பிரம்மனுடைய ஐந்தாவது தலை அழிக்க வேண்டும் என்று பரமசிவனிடம் முறையிட்டார்.
விஷ்ணுவின் யோசனைப்படி பிரம்மனிடம் சிவன் வலிய சண்டைக்குச் சென்றார். சண்டையில் பிரம்மனின் ஓரு தலையை வெட்டி எறிந்தார் .கீழே தலை விழுந்தாலும் ஐந்தாவது தலை பிரம்மனுக்கு மீண்டிம் முளைத்தது.
இப்படி சிவன் 999 முறை வெட்டி வீழ்த்தினார்.மீண்டும் மீண்டும் தலை முளைத்தது.கீழே விழுந்த 999 தலைகளையும் கோர்த்து மாலையாக அணிந்து கொண்டார்.இறுதியாக சிவன் பிரம்மாவின் தலையை அறுத்தார்.ஆனால் அதைக் கீழே போடாமல் கையில் தாங்கினார். பிரம்மாவே முன்புபோல நான்கு தலைகள் கொண்டவரானார்.
இதனால் சிவனுக்கு பிரமகத்தி தோஷம் பிடித்தது.நடந்ததை அறிந்த சரஸ்வதி கோபப்பட்டு ,சிவபெருமானை நோக்கி,என் கணவரின் ஐந்தாவது தலை உன் கையை விட்டு கீழே விழாமல் ஓட்டிக்கொள்ளட்டும்.உனக்கு அன்ன ஆகாரம் ,படுக்கை தூக்கம் எதுவும் இல்லாமல் போகட்டும். சுடுகாட்டின் முன்று பிடி சாம்பல்தான் பசி தீர்க்கும் என்று சாபமிட்டாள்.
சரஸ்வதி அத்துடன் நில்லாமல் பார்வதியை நோக்கி எனது கணவர் அலங்கோலமாக இருப்பதற்கு காரணமாக நீயும் அலங்கோலமாக போவாய் .உடையின்றி ,கொக்கின் சிறகும்,மயில் தோகையும் சூடுவாய். உனது தாதிப்பெண்கள் பூதகணங்களாக போவார்கள்.நீ பிணத்தை தின்று ,மதுவை குடித்து அகோர உருவம் தாங்கி அலைய வேண்டும் என்று சாபம் இட்டாள்.
இவை எல்லாவற்றையும் .கண்ணன் மோகினி உருவத்தில் வந்த அறிந்தார்.பார்வதியிடம் நீ மலையரசன் பட்டணத்தில் (மலையனூரில்) பூங்காவனத்தில் புற்றில் பாம்பு உருவாக இருக்கும்போது சாப விமோசனம் நடக்கும் வருந்தாதே என்று கூறினார்.
சரஸ்வதியின் சாபப்படி பார்வதி தேவி அகோர உருவத்தோடு நீண்ட ஜடாமுடி தரித்து உருமாறி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலையை வந்தடைந்தாள் .அங்கே முனிவர் பார்வதி தேவிக்கு சில விபரங்கள் கூறினார்.அதன்படி திருவண்ணாமலையில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது அவளுடைய அகோர உருவம் நீங்கி மூதாட்டி உருவம் பெற்றார் .பூதகணங்களும் பழையபடி பெண்களாயினர்.
அங்காளம்மன் மலையனூர் வந்தடைதல் :
திருவண்ணாமலையில் இருந்து மலையனூர் வரும் வழியில் தாயனூர் வந்தபோது இருட்டிவிட்டது.அன்று அங்குள்ள வட்டப்பாறையில் தங்கினாள்.பின்னர் அங்கிருந்து அவள் மலையனூருக்கு வரும்போது வழியில் ஏரியில் மோதிரம் விழுந்து விட்டது.அது கிடைக்காததால்,இந்த ஏரியில் செடிகள் முளைக்கக் கூடாது என்று சபித்தாள்.அதானல் இன்று வரை ஏரியில் செடிகள் முளைப்பதில்லை.மேலும் வரும் வழியில் அன்னைக்கு தாகம் ஏற்பட்டு கள் இறக்கு பவனிடம் குடிக்க தண்ணீர் கேட்டும் அதற்கு அவர்கள் கள் கொடுக்க மறுத்ததால் இந்த ஏரியில் பனைமரம் எதுவும் இருக்கக்கூடாது என்றும் அன்னை சாபமிட்டதால் இன்றும் ஏரியில் பனை மரங்கள் ஏதும் முளைக்கவில்லை என்பதை அறியலாம்.
மலையரசன் பட்டினத்தில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தாசன் அவனுடைய மகன்கள் வீரன்,சூரன்,உக்கிரன் என்ற 4 பேர்களிடமும் பார்வதி தேவி சென்று உங்களுக்குக் கிடைக்கும் மீனை எனக்கு படைக்க வேண்டும் என்ற ஆசையை சொல்ல 4 பேரில் வீரன் மட்டும் ஆசையை நிறைவேற்ற எண்ணினான் .ஆனால் வீரன் தன் வலை ௐட்டை வலையாக உள்ளதை நினைத்து வருந்தினான்.
அன்னை வீரனிடம் நான் உனக்கு ஏராளமான மீன்களை தருகிறேன் என்றாள்.அவன் மீன்களை பிடித்து அன்னைக்கு படைத்தான்.இதன் பின் அன்னை அங்காளம்மன் அரண்மனைத் தோட்டத்தில் புற்றாக உருவெடுத்து அதில் 5 தலை நாக வடிவத்தில் இருந்தாள். இதை அறிந்த புற்றை வணங்கிய மீனவனான தாசனுக்கு அன்னை காட்சி கொடுத்தாள்.
அவர்களிடம் நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கு இருக்கிறேன் .நீங்கள் எனக்கு தினமும் பூஜை செய்யுங்கள்.உங்கள் பரம்பரையை நான் பாதுகாக்கிறேன் என்று அருள் வாக்குத் தந்தாள்.அதன்படியே இன்றும் மீனவர்கள் முறையாக அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார்கள்.
இப்படி இருக்க ,பூங்காவனத்திற்கு வந்த மலையரசன் அங்கே பெரிய புற்று இருக்கக்கண்டு அதை இடிக்க ஆள் அனுப்பினார்.ஆனால் அன்னை அவர்கள் எல்லோரையும் புற்றுக்குள் மறைத்து விட்டாள்.அஞ்சிய மலையரசன் வணங்கியபோது காட்சி கொடுத்தாள்.
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குதல் :
மக்கள் புற்றுமண்னை பிரசாதமாக அருந்தி பயன் பெறுவதை அறிந்த சிவன் மேல்மலையனூர் வந்தார்.சிவனின் குரல் கேட்ட பார்வதி தேவி மயானத்தில் 3 பிடி சாம்பல் சாப்பிட்டார். அவரது பித்தம் ,பசி ஓரளவு நீங்கியது .அதன்பிறகு புற்று முன் நின்று பிச்சை இடுங்கள்என்றார்.சிவனின் குரல் கேட்ட பார்வதிதேவி மகிழ்ந்து தன் அண்ணன் விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள்.விஷ்ணு தோன்றி அவருடைய பிரம்மஹத்தியை நீக்கும் வழிமுறையைக் கூறினார்.
பார்வதியிடம் விஷ்ணு உன் கணவணுக்கு எதைக் கொடுத்தாலும் அவரது கையில் உள்ள பிரம்ம கபாலம் தின்று விடுகிறது .அதனால் உணவை சமைத்து,அதை 3கவளமாக்கி அதில் முதல் 2கவளத்தை போட வேண்டும் .3-வது கவளத்தை அதில் கைத்தவறி கீழே போட்டு விடுவது போல் தரையில் சிதறிவிட வேண்டும் என்றும் அப்போது உணவின் ருசியால் கவரப்பட்ட பிரம்மகபாலம் சிவனின் கையை விட்டு கீழே இறங்கி செல்லும்போது நீ பெரிய உருவம் எடுத்து அந்த பிரம்மக் கபாலத்தை காலால் நசுக்கி விடு.அதே நேரத்தில் சிவனை பிடித்த பிரம்மகத்தி தோஷம் நீங்கி விடும்.நீ சாதம் சமைக்க லட்சுமியும்,அவரிடம் உள்ள அமுதசுரபிப் பாத்திரமும் உதவியாக இருப்பார்கள் என்று சொல்லி மறைந்தார்.
பார்வதிதேவி அண்ணனின் வாக்குப்படி லட்சுமி தேவியின் உதவியுடன் சாதம் தயார் செய்தார். தன் மூத்த மகன் விநாயகரை அழைத்து உன் தந்தையை வரவேற்று அக்னிகுளத்தில் குளிக்கச் செய்து பின் சாப்பிடும் வரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றாள்.தாயின் சொற்படி விநாயகர் தன் தந்தையை பார்த்துக் கொண்டார்.
குளித்து வந்த சிவனுக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து சிவனிடம் கையில் இருக்கும் கபாலத்தில் முதல் இரண்டு கவள சாதத்தைப் போட்டாள் .உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது.பிறகு அண்ணன் சொன்னபடி ,மூன்றாவது கவளச்சோற்றை தரையில் இரைத்து விட்டாள்.ருசிகண்ட பிரம்மகபாலம் சிதறிய அன்னத்தை எடுக்க சிவனின் கையை விட்டு தரைக்கு இறங்கியது. இதை எதிர்பார்த்த பார்வதி அகோர உருவம் எடுத்து ஆங்காரத்துடன் தன் வலது காலால் பிரம்ம கபாலத்தை மிதித்துக் கொண்டாள்.
அலறிய பிரம்ம கபாலத்தை தன் காலால் நசுக்கி இனி நீ என் காலடியில்தான் இருக்க வேண்டும்.உனக்கு வேண்டிய உயிர் பலி எல்லாம் பின்னால் வரும் என்று கூறவும்,பிரம்ம கபாலம் அன்னையின் காலில் கட்டுண்டு உள்ளது.சிவனைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் சிவன் சுயநினைவைப் பெற்று பேரானந்தம் கொண்டு சிதம்பரம் சென்றடைந்து ஆனந்தத் தாண்டவம் ஆடினார் .சிவனுக்கு தாண்டேஸ்வரர் என்றும் ,அம்மனுக்கு தாண்டேஸ்வரி என்றும் பெயர் வந்தது.
அம்மன் தேர் பவனி :
ஆங்காரமும் சினமும் கொண்ட
அங்காள பரமேஸ்வரி கோபம் தனியவில்லை .அங்காளம்மன் கோபம் தனிய அம்மன் தேரில் பவனிவரச் செய்து ,அம்மன் அமைதி பெற தேவர்களும் ரிஷிகளும் ,முனிவர்களும் தேருக்கு சக்கரமாகவும் ,அச்சாணியாகவும் ,
சிம்மாசனமாகவும் மாறி அதில் அமர்ந்து பவனி வர வேண்டினர்.
கோபம் தணிந்த அன்னையும் தனது சுய உருவம் எடுத்து தேரில் அமர்ந்து பவனி வந்தாள் .இதன் காரணமாக அங்காள பரமேஸ்வரி மேல் மலையனூர் கோயிலில் அமர்ந்து அருள் புரிந்து வருகிறாள்.இதன் காரணமாக வருடந்தோறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் தேரோட்ட விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வழிபடுதல் மற்றும் தனி சிறப்பு :
அங்காளம்மன் இத்தலத்தில் மகா மண்டபத்தில்
புற்றாகவும்,மூலஸ்தானத்தில் திரு உருவத்துடனும் இருக்கிறாள்.அவள் அருகில் சிவனும் உள்ளார்.இங்குள்ள புற்று மண்னை மக்கள் பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சித்தாங்கு,கபால வேடமிட்டு மஞ்சள் ஆடை தரித்து வருவதும்,பெண்கள் வேப்பங்சீலைகள் கட்டிக்கொண்டு அம்மன் அங்கு பிரதட்சனம் செய்வது வழக்கமாகும்.மேலும் இது ஓரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.
உற்சவர்சன்னதி :
அன்னை அங்காளம்மனுக்கு உற்சவர் அறை திருக்கோயிலின் இடது புறத்தில் கல் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உற்சவங்கள் :
ஓவ்வொரு ஆண்டும் ,ஆடி வெள்ளி,
நவராத்திரி , கார்த்திகை தீபம் ,
பொங்கல் , மாசி மாயன கொள்ளை வெகு விமர்சியன திருவிழா மிக முக்கிய திருவிழா, மாசித்தேர் திருவிழா போன்ற முக்கிய திருவிழாகள் அன்னைக்கு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும் .
வழிபாட்டுமுறை :
இத்திருக்கோயில் பிரகாரங்களில் பொங்கல் இட்டும் ,அபிஷேகங்கள் ,அர்ச்சனைகள் ,
மாவிளக்கு வைத்து காணிக்கை செலுத்தியும் ,ஆடு ,மாடு ,கோழி சுற்றி விடுதலும்,பக்தகோடிகள் பலவாறாகத் தங்கள் வேண்டுதலை செலுத்தி வருகின்றனர் .
இத்திருக்கோயிலில் மயான சாம்பலுடன் , குங்குமம் ,புற்றுமண் ஆகியவை பிரசாதமாக வழங்ப்பட்டு வருகிறது .
சார்புக்கோயில் :
இத்திருக்கோயிலில் கோபால விநாயகர், அன்னபூரணி அம்மன் ,பாவாடைராயர் ,
தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதி ஆகியன அமையப் பெற்றுள்ளது.
கோயிலுக்கு வரும் வழி :
மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கி.மீ. தூரத்திலும் ,
செஞ்சிக்கு வடக்கே 20 கி.மீ .தூரத்திலும் ,
சென்னையில் இருந்து தென்மேற்கில்
திண்டிவனம் வழியாக 170 கி.மீ. தூரத்திலும்
உள்ளது .
இத்திருக்கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது .