கல்லுப்பு கற்று தந்த பாடம்

ஒரு நாள் நான், நீளமான ஈரப்படுத்தும் கழித்துணியால்(mop stick) வீட்டை துடைத்துக் கொண்டிருக்கையில் (ஏன், வீட்டை கூட்ட மட்டும் தான் வேணுமா, துடைக்கக் கூடாதா?)
பக்கத்து வீட்டு நண்பர் திடுப்பென உள்ளே நுழைந்து விட்டார். அதுக்கு பிறகு சும்மா விட்டாரான்னா, இல்லை. கேட்டார் "ஏங்க வீட்டை துடைக்கிறீங்க போலிருக்கு"( நான் நினைத்துக் கொண்டேன், இல்லை, உன் பல்லை உடைத்துக் கொடுக்கணும்னு). நான் சொன்னேன் நீங்க கேட்பது " ஏம்பா, காய்கறி கடையில் பார்த்தால், " என்ன, காய்கறி வாங்கறீங்களா" பழக் கடையில் பார்த்தால் " என்ன, பழம் வாங்குறீங்க போலிருக்கு" சினிமா இடைவேளையில் பார்த்தா" என்ன, படத்துக்கு வந்தா போல இருக்கு" கோயில்ல பார்த்தா" என்ன, சாமி கும்பிட வந்தீங்களோ" இதை மாதிரி தான் இருக்குன்னு சொன்னேன். அவர் டக்கென்று சமாளித்துக் கொண்டு " அப்படி இல்லப்பா, இப்போ நீ எதைக் கலந்து வீட்டை துடைக்கிறாய்" என்று கேட்டார். அவர் என்னை விட 4 வயது பெரியவர் என்பதால் என்னை நீ வான்னுதான் கூப்பிடுவார். நான் சொன்னேன்" தண்ணீருடன் லைசால் என்கிற சுத்தப் படுத்தும் இரசாயனத்தை சேர்த்து துடைக்கிறேன் என்றேன். அவர் சொன்னார் "அட நீ ஒண்ணுப்பா, இந்த லைசால், நரிவால் எல்லாம் வேலைக்கு ஆகாது. இதனுடன் கொஞ்சள் கள் உப்பையும் சேர்த்து துடைத்தால், தரை நல்ல சுத்தமாவதோடு, கிருமிகள் எல்லாம் அழிந்து விடும். நான் அப்படித் தான் வீட்டை துடைக்கிறேன் என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கள் உப்பினால் வீட்டை துடைத்தால் கிருமிகள் அழிவதோடு நல்ல சுத்தமும் ஆகும். (நான் நினைத்தேன், அப்பாடி, நாட்டில் நான் ஒருத்தன் மட்டும் அல்ல, வீட்டை கூட்டி, துடைப்பது). அவர் சொன்ன தகவல் என் மூளையில் ஒரு பொறியைத் தட்டியது. கள்ளு உப்பு சேர்த்து அறைகளை துடைத்தால் நல்ல சுத்தமாகும். ஆஹா, வீட்டில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு கள்ளையும் வாங்கி விட வேண்டியது தான். ஆசை மனைவியிடம் என் நண்பர் சொன்னதை அன்புடன் சொன்னேன். அவளும் ஒரு முறை முயற்சிபண்ணலாம் என்று சொன்னாள். அன்று மாலையே ஒரு குவார்டர் வாங்கி வந்தேன். ஆசை எவனைத்தான் விட்டது? தூங்கச் செல்வதற்கு முன் கொஞ்சமா பாட்டிலுடன் கொஞ்சம் வாயில் கவிழ்த்தேன், மனைவி தூங்கியபின் தான். நான் எதிர் பார்த்ததை விட, எதிர் பாராத விதமாக கிட்டதட்ட நாலு ஸ்பூன் பிரான்டி அதிகமாக உள்ளே சென்று விட்டது. நான் தொண்டையை பிராண்டி பிராண்டி விட்டுக் கொண்டேன், வேறு என்ன செய்ய முடியும். கொஞ்ச நேரத்தில் தலை லேசாக சுற்ற ஆரம்பித்தது. அப்படியே படுக்கையில் சரிந்தேன். காலை விழித்துப் பார்க்கையில் மணி ஏழு. எப்போதும் ஐந்தரை மணியளவில் எழுபவன் நான். மனைவி வந்தாள் அருகில் " இப்போதான் தெரியுது உங்க வண்டவாளம். நேற்று இரவு பிரான்டியை குடிச்சிட்டு பாட்டிலை மூடாம சமையல் அறையிலே வச்சிட்டு வந்து படுத்துட்டீங்க. ஏங்க, உப்பையும் கள்ளையும் சேர்த்து தண்ணீருடன் கலந்து வீட்டை துடைக்கத் தானே பிரான்டி வாங்கினீங்க. இப்போ பார்த்தா முழு பாட்டில்ல கால்வாசி கூட இல்லை. என்ன அநியாயம் இது நீங்க பண்ணுவது?
நான் சொன்னேன்" இரவு கொஞ்சம் இருமல் இருந்ததால் ஏதோ ஒரு டாக்டர் எப்போதோ சொன்னது ஞாபகம் வந்தது ,அதிகமாக இருமல் இருந்தால் ஓரிரண்டு ஸ்பூன் பிரான்டி சாப்பிட்டால் சரியாகி விடும் என்று. சரி, சரி, போய் பல் தேய்த்து வாங்க , காப்பி தரேன். உங்க மூஞ்சியே மாறிப் போன மாதிரி இருக்கு. இந்த வயசுல ஏன் உங்களுக்கு இதெல்லாம்".

கொஞ்ச நேரம் பொறுத்து மெதுவாக பக்கெட்டில் நீரை நிரப்பி, லைசால் திரவத்தை கலந்தேன். உடம்பு இன்னமும் ஒரு மாதிரியா அசதியாக இருந்தது. மெதுவாக சென்று பிரான்டி பாட்டிலை எடுத்து வந்து, அதிலிருந்ததில் பாதியை மெதுவாக பக்கெட்டில் கலக்க ஆரம்பித்தபோது, பக்கத்து வீட்டு கள்ளு ஆலோசனை நண்பர் இரண்டாவது முறை சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்தார். என்னிடம் கேட்டார் " இதென்னப்பா சின்ன பாட்டிலிலிருந்து ஏதோ கலக்கற. லைசால் இல்லையா?
நான் சொன்னேன் " நீங்கதானே நேத்து சொன்னீங்க, கள் உப்பு சேர்த்தா, தரை பளபளன்னு மின்னும் என்று. அதுதான் கொஞ்சம் பிரான்டியை தண்ணீரில் கலந்து வீட்டை துடைக்கப் போகிறேன் என்றார்.
அவர் பதறியபடி " அட என்னப்பா காரியம் செய்தாய். நான் சொன்னது கல் உப்புப்பா. Crystal salt என்று சொல்வார்களே அதை. அதைத்தான் தண்ணீருடன் சேர்க்கச் சொன்னேன். நீ என்னடான்னா, கள்ளு என்று நினைத்து பிரான்டியை வாங்கி கலக்குகிறாய். உன் முகம் கூட ஒரு மாதிரி இருக்கு. தண்ணீரில் கலக்குவதற்கு முன் நீயும் கொஞ்சம் கலந்து குடித்தாயா?"

" நீங்க கல் உப்புன்னு சொல்லவில்லை. கள் உப்புன்னுதான் சொன்னீங்க". அவர் சொன்னார்" அட சரி போகட்டும் ஏதோ, தவறாக புரிந்து கொண்டு விட்டாய். இப்போ அந்த சின்ன பாட்டிலில் மீதி இருக்கிறதா" என்று கேட்டார். நான் பாட்டிலை அவரிடம் கொடுத்தேன். அதைத் திறந்து பார்த்து விட்டு"இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது" என்று சொல்லி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
நான் கேட்டேன் " உங்களுக்கு அது எதுக்கு?". அவர் சொன்னார் " ஏம்பா, நான் சொல்லாததை சொல்லியதாக எண்ணி நீ பிரான்டி வாங்கினாய். இப்போது நீ சொல்லாமல் நானும் இதை தண்ணீரில் சேர்த்து வீட்டை துடைத்துப் பார்க்கிறேன். என் மனைவியும் ஊருக்கு போய் விட்டாள்"

நான் நினைத்தேன். பாவம், ருசித்து விட்டு போகட்டும், அதிகம் போனால் பாட்டிலில் மூன்று ஸ்பூன் பிரான்டி இருந்தால் பெரிய விஷயம். யான் பெற்ற இன்பம் பெறுக என் பக்கத்து வீட்டு நண்பர்.
இப்போதும் வீடு கூட்டுதல், துடைத்தல் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. என்ன, வாரத்தில் நான் மூன்று நாட்கள் மட்டும் பெருக்கி துடைப்பேன். இப்போது ஆறு நாட்கள் செய்ய வேண்டியிருக்கிறது.
இப்போது வீடு துடைப்பது, கல் உப்பு கலந்தா ,பிரான்டி கலந்தா,எப்படி?
அட நீங்க ஒண்ணு, லைசால் திரவம் , கல் உப்பு இரண்டையும் இப்போது மனைவி தான் வாங்கி வருகிறாள். அதை கலந்து துடைப்பது தான் என் வேலை. ஒரு நாள் செய்த சிறு தவறு, நெடுநாள் தண்டனையாகிவிட்டது .

இன்றைய அவசர செய்தி:
பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு வாரம் இரவில் சாப்பாடு இல்லையாம். இரண்டு கிளாஸ் மோர் மட்டும் தானாம். ஏன், இரவு உபவாசம் இருக்கீங்களா? என்று கேட்டேன் அவரிடம். அடப் போய்யா, உன் பிரான்டி பாட்டிலின் சதி வேலைதான் இது. அன்று நான் இரவு பாட்டிலில் இருந்ததை ஒரே முக்கில் முழுங்கிவிட்டு படுத்தேன். உன்னைப் போலவே, நானும் பாட்டிலை சமையல் அறையிலேயே வைத்து விட்டேன், மறதியில். இறுதியில் என்ன ஆயிற்று? உனக்கு ஆனது போலத் தான். அடுத்த நாள் விடியல் காலை என் மனைவி ஊரிலிருந்து வந்தாள். சமையலறையில் பிரான்டி பாட்டிலைக் கண்டாள். என் மேல் கடும் கோபம் கொண்டாள். என் மேல் விழுந்தாள், அழுதாள், புலம்பினாள், பின்னர் அமைதியாக சொன்னாள்" பிரான்டி குடிச்ச வாய்க்கு இன்னும் ஒரு வாரம் இரவு உணவு கிடையாது. சாயங்காலத்துக்கு மேல நீங்க வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. இதை ஊரடங்கு உத்தரவாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (20-Jul-21, 3:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 120

மேலே