வா வந்தே உறவாடு

உண்ணத்தான் கனி;
கன்னமாய் மின்னி;
தரையில் துள்ளி;
தள்ளியே விழுந்தபோது;
புல்லும் வில் போன்ற இலையால் தழுவி;
நழுவிய பழமும்,
நல் வாசனை தந்திட;
நடந்து வந்த நடைப்போக்கனும்,
நன்றாய் எடுத்தே தின்றிட;
வீசிய கொட்டையும்,
வீரியத்துடன் தொட்ட மண்ணில் துளுத்துவிட,
பிறப்பெடுத்ததே புதிய மரமும்,
பூவானமாய்.
நெடு நெடு என்று வளர்ந்த மரமும்,
வந்தே இதமாய் காற்றைத் தந்திட,
காதலைச்சொல்ல மெல்ல வந்ததுவே களிபிடித்த,
கிளிப்பிள்ளையும் கீ கீ கீ கீ,
என்றே கீரிய ஓசையுடன்.

கிளைகள் மீண்டும்,
இலைகள் தாங்கி நீண்டிட;
பருவத்தில் பூத்தால் உருவத்தை மாற்றி,
சிளிர்த்தது மரமும்;
சிரிக்கத்தான் செய்தேன்
சிறு சிந்தனையுடன்.

துளுத்த தளிர்மேனி;
குலுங்கியே பூத்து சிரித்தது;
வசந்த வருகையைப் பார்த்து.

நனைந்தே உலர்ந்தது மழைகாலத்தில்,
வாடியே வதைந்தது குளிர்காலத்தில்,
வதங்கியே இலைகள் காய்ந்து,
கொட்டியது கோடைகாலத்தில்,
அடடா இது தான்,
இயற்கையா,
இழுத்தது என் இதயத்தை,
கொட்டிய அழகே;
கொடைபிடித்த நிழலே;
கட்டிய பசுமையே,
சூடிய மலர்களே,
சூழ்ந்த காயே,
சுவைத்திட கனியே,

மரம், செடி, கொடிகள், எத்தனை எத்தனையோ;
அத்தனையும் பயன்கள்.
தைல மரமோ, தலை தூக்கிய வேங்கைமரமோ,
மாங்காய் மரமோ, பலாமரமோ, வாழைமரமோ,
மட மடவென்றே ஒடிந்திடும்,
தூங்கு மூச்சு மரமோ;
தேக்கு மரமோ;
தேவதாரு மரமோ;
ஏத்தனை வகை மரங்களடா
பயன் தரத் துடிக்குதுபாரு.

காற்றாய், கனியாய், கதவாய், பொருளாய்,
நிழலாய், பருவமாய், ஊற்றாய், உயிராய், பிராணவாயுவாய்.

படைப்பில் பயனற்றவன்
மனித இனமன்றோ!
ஆடிய மரங்கள் கேளி செய்வதைப்பார்;
மரமும் பேசியது,
விஞ்ஞான அறிவை
வீழ்த்துவதற்கே அதிகம் பயன்படுத்தினாய்;
விளைநிலங்களை,
விலைக்கு விற்றே தீர்த்தாய்;
இயற்கையை அழிக்க துடித்து விட்டாய்;
இன்னல்கள் பல காண துவங்கிவிட்டாய்.

ஆளப்பிறந்தவனா!
ஆறு அறிவு பெற்று,
ஆட்டிப் படைக்க பிறந்தவனா!
வெட்டியே சாய்க்கின்றாய்;
மரம் செடி கொடிகளை,
கழுத்தை வெட்டியே சாய்கின்றானே;
வெறுதாய் வந்த பயல்;
வேற்றுலகம் போவானோ;
தந்த காற்றை தட்டிப் பரித்து;
தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விட்டு தவிப்பதேன்!

மரம் நாங்கள் மூளையில்லை;
மழைதருவோம்,
மலர்ந்திட காய் கனிதருவோம்,
பிராணவாய்வும் தருவோம்,
எங்களை வெட்டினால்,
பிணமாவாய் என்பதை
மூளையுள்ள நீ மறந்ததும் ஏனோ மூடனே;
மூளை மூளையில் இருப்பதால்,
தெரியவில்லை எங்கள் தேவை
உனக்கு.
எங்களுக்காக எதையும் எடுக்க வில்லையே;
நீர் உரம் தவிர,
எல்லாம் உங்களுத்தான் தருகின்றோமே;
பின்பு ஏன் இந்த பகை.

எங்களை
வெட்டி சாய்த்து
வெந்த பூமியாக்கி;
விதவைகோலம் தருகின்றாய்.

வா வந்து உறவாடு;
விளையாடு;
எங்கள் மீது தொங்கிவிளையாடு;
கொஞ்சிடப் பறவைகளும் உண்டு;
கொடுத்திட கனிகளும் உண்டு;
காத்திட காற்றும் உண்டு;
கற்றுக்கொள்;
வாழ்ந்திடக் கற்றுக்கொள்;
கான மழையும் தருவோம்;
கன மழைதருவோம்;
வா வா வந்தே ஆடு;
வானம் உயரட்டும்;
வான் மழையும் தூவட்டும்
வந்த குரங்கியினங்களும்
தாவட்டும்
மலர்களும் மங்கையின்
இதமான கூந்தலைதாங்கட்டும்.

இருக்கும் வரை,
இன்பமாய் வாழ்ந்திட,
வாழக் கற்றுக்கொள்;
எங்களைப்போன்று
தந்தே வாழ்ந்து,

இனியாவது,
இயற்கையுடன் இணைந்துவாழு,
இன்பம் பிறக்கும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (21-Jul-21, 8:45 pm)
பார்வை : 112

மேலே