ஏதிலி

அகதிகள் அகராதியில்
அகதிக்கு பேரர்த்தம்
அம்மா அப்பா
இருந்தனர் அன்று
அகதியென
அடைமொழி இன்று

கற்பை விற்று
கஞ்சி ஊத்தும்
தாய்மையின்
கரங்கள் கண்டோம்
தொண்டை வற்றி
கதறி அழும்
பிள்ளையின்
ஓலங்கள் கேட்டோம்

பிறப்பும்,வளர்ப்பும்
மாறுபட்ட ஒன்று,
பிறப்பில்
தாயின் அடிமடியிலும்,
வளர்ப்பில்
சாலையின் தெருக்கோடியிலும்,

சொந்தங்கள் யாவும்
அனாதையாய் போக
அனாதைகள் நாங்கள்
அகதியாய் மாற
அகதிகள் எல்லாம்
சொந்தங்கள் ஆனோம்...

கையில் குழந்தை,
கறை படிந்த உடல்,
ஒட்டிய வயிறு எங்கள்
அடையாளம் என்றனர்
ஓயா சிந்தை,
விடுதலைத் தேடல்,
ஒரே தேசம் எங்கள்
அடையாளம் என்றோம்...

தெருநாய்களின் இருப்பிடம்
அரசாங்க
கம்பிகளுக்குள்ளேயாம்
எங்ககளின் இருப்பிடம்
வெயிலில் காயும்
கந்தளுக்குள்ளேயாம்...

தாய் மண்ணே விரட்டியடித்தும்
தூசியாய் பறக்கிறோம்
தூசிகள் துயில் கொள்ள
வாழுமிடம் கேட்கிறோம்...

எழுதியவர் : தமிழ் வழியன் (27-Jul-21, 10:58 pm)
பார்வை : 107

மேலே