பூரிப்பு - பைனாகுலர் முதல் டி எஸ்எல்ஆர் வரை

"பூரிப்பு"
இது எப்படி பட்ட உணர்வு??
விளக்கமுடியுமா??
என் புத்திக்கு எட்டிய வரை ..
அது ஒரு நொடி உலகமே நம் வசப்பட்டு விட்ட மகிழ்ச்சி!!
உள்ளம் கொண்டாடும் (அக)மகிழ்ச்சி
இதற்கு கால அளவு - நொடி பொழுதுகளே!
காரணம்?? - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
குழந்தைக்கு - தாத்தா குடுத்த குச்சிமிட்டாய்
காதலுனுக்கு - காதலி அவன் தலை கோதிய தருணம்
மனைவிக்கு - கணவன் நெற்றியில் குடுத்த திடீர் முத்தம்
வயோதிக தாய் தந்தைக்கு - ஒற்றை கூரையின் கீழ் தங்கள் சந்ததிகளின் "சிரிப்பொலி"
பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்..
இந்த உணர்விற்கு வர்ணனையும் இல்லை!! வார்த்தைகளும் இல்லை!!!

அப்படி நான் கடந்த நிக்வு(கள்)

கொரோனா அறியாத 90களின் முற்பகுதி

கிராமங்களை நகர்புற வளர்ச்சி சீண்டாத காலகட்டம்.
அப்படி ஒரு கிராமத்தில் ,தற்காலிகமாக கணவனை பிரிந்து தாய்வீட்டில் தஞ்சம் புகுந்தாள் அந்த பெண்.அதற்கு காரணமும் காரியமும் கூட தற்காலிகம் தான்.

பிரிவின் தொலைவு - ஒரு தெரு கடந்தால் கணவன் வீடு.

ஒரு ஆண் ,ஒரு பெண் என இரு குழந்தைகள்,அவ்வபோது கணவன் மனைவியிடையே இடம்பெயர்வார்கள், பண்டமாற்றபடுவார்கள்!!

உணர்வுகள் மட்டுமே போர் தொடுத்து கொண்டிருந்த காரணத்தினால் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை.
பாதிப்பை உணரும் வயதும் அவர்களுக்கு இல்லை!!

அப்படி ஒரு மாலை பொழுதில் அன்னையை நோக்கி ஓடி வந்த மகன்
"அம்மா இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட்ல நான் 10/10 " என சந்தோசத்தில் கூச்சலிட்டான்.

அதை எதிர் பார்த்த வண்ணம் வாயிலில் நின்று இருந்த அவள் " அது தெரிஞ்சிதான் அம்மா உனக்கு ஒன்னு வாங்கி வெச்சிருக்கேன்" என தான் மகனுக்காக வாங்கிவைதிருந்த ஒரு "பைனாகுலரை"யும் ஒரு "முறுக்கு பாக்கெட்"டையும் அவனிடம் நீடுகிறாள்...

இபோது அந்த இரு உள்ளங்களும் எப்படி உணர்ந்திருக்கும் என்பதை தலைப்பு சொல்லும்.

அதை நீங்கள் உணர்ந்த பொழுதில் அதை காட்சிப்படுத்தி பாருங்கள் உங்கள் கற்ப்பனையில்!!

காலங்கள் கடந்தன
2000களின் முற்பகுதி
காலமும் சூழலும் குடும்பத்தில் சுமூகமான தருணம்

அமைதியான மாலைப்பொழுதில்; தன் தாயிடம் இந்த நிகழ்வை பகிர்ந்த அந்த மகன் ஒரு கேள்வியை கேட்டான்
"அம்மா ,அப்ப அந்த பைனாகுலரும் , முறுக்கு பாக்கெட்யும் வாங்க காசு எப்படி வந்தது ? என்று!

அவன் கண்ட நிகழ்வுகள் ஒரு ஆணின் சட்டைபையில் மட்டுமே பணம் புழங்கும் என எண்ணம் புகுத்தியதே இந்த கேள்வியின் காரணம்?!

"நீ தத்தாகிட்ட எதும் காசு வாங்குனயா?? ஏன்னா அப்பாதான் சம்பாரிபார்,நீயும் நானும் அப்ப தாத்தா வீட்ல இருந்தோம்,ஒரு வேளை நீ தாத்தா கிட்ட... என அவன் முடிக்கும் முன்னரே..

"அம்மாக்கு டெய்லரிங் தெரியும்தான? யூசுஃப் டெய்லர் கடையில ஜாக்கெட் வாங்கிட்டு வந்து ஹேம்மிங் பண்ணி குடுப்பேன்!! அப்படி சம்பாரிச் காசு சாமி அது"
"ஒரு பொண்ணா எந்த ஒரு ஆம்பளையையும் என் பண தேவைக்காக நான் எதிர்பார்த்தது இல்ல" என பதில் அளித்தாள்.

அன்று சிறுவனாக பைனாகுலரும் , முறுக்கு பாக்கெட்டையும் கையில் பெற்ற தருணத்தில் அடைந்த பூரிப்பை மீண்டும் அந்த பதிலில் பெற்றான் அந்த மகன்.

இன்று

சிறுவனாக இருந்து இளைஞனாகி, வாலிபனாகிய நான், என் மனைவியிடம் இருந்து நான் நீண்ட காலம் வாங்க விரும்பிய "டி.எஸ்.எல்.ஆர்" எனும் புகைப்பட கருவியை அன்பு (ஆச்சரிய) பரிசாக பெற்றேன்.

ஆனால் என் தாயிடம் கேட்ட கேள்வியை என் மனைவியிடம் கேட்க போவதில்லை !

ஏனென்றால் அதற்கான பதில் என்றும் மாறப்போவதில்லை!!

நான் கடந்து வந்த பூரிப்பும் மாறப்போவதில்லை!!

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின்- (30-Jul-21, 12:48 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 89

மேலே