ஏற்றுக்கொண்டேன் நிறைவாக

உன்னருள் பேரருள் நானுனக்கு சிறுபொருள்
விண்ணிலோ மண்ணிலோ காணமுடியா நுண்பொருள்
அகத்தேயும் புறத்தேயும் ஆளுகின்ற திருவருள்
வாழ்விற்கு வழிவகுத்து விளக்கான திருப்பொருள்

பல்லாண்டாய் நல்லதையே கொடுக்கின்ற மறைபொருள்
செல்லமாய் அழைப்போரிடம் செல்லுகின்ற கருப்பொருள்
இல்லாதது இல்லையென்று சொல்லுகிற நிறைபொருள்
பொல்லாத தீயோருக்கு புலப்படாத புதுப்பொருள்

காற்றாகி நீராகி வெற்றிடத்து நிலையுமாகி
பயிராகி உயிராகி பலவிதத்து உடலாகி
எண்ணமாகி உணர்வாகி எங்குமே நிறைவாகி
ஆழமாகி உயரமாகி அளவில்லா ஆற்றலாகி

ஆணெனவோ பெண்ணெனவோ பேதமில்லா தன்மையிலே
தேனெனவும் பாலெனவும் தானியத்து மாவெனும்
நீரெனவும் எண்ணெயெனவும் நீரில்லா பாலையெனவும்
பதமாய் ஆகிநின்று பாரினையே காக்கின்றாய்

உன்னிலையை உணர்வதற்கு உள்ளமது பண்படணும்
நின்னுருவைக் காண்பதற்கு நித்தமுமே தேடவேண்டும்
மின்னலில் பேரொளியாய் வானுயர்ந்து நிற்பாயோ
கன்னலின் வேறெனவே மண்ணுக்குள் இருப்பாயோ

என்னுள்ளே ஏதோவொன்று உன்னை நினைக்கத் தூண்டுகிறது
உணர்வோ மொழியோ ஊழ்வினையால் வந்ததின் தொடர்போ
இத்தூண்டல் மனதுக்கும் உடலுக்கும் இன்பத்தினை தருகிறதே
இந்நிலையை இறைவன் என்றே ஏற்றுக்கொண்டேன் நிறைவாக.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Aug-21, 9:12 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே