அமைச்சின் குணநலனை ஏத்தி நிற்கும் மண்டலம் எல்லாம் மகிழ்ந்து - யூகி, தருமதீபிகை 850

நேரிசை வெண்பா

காலம் அறிந்து கருமம் புரிந்துரிய
கோலின்பம் கூரக் குடிபுரந்து - சீலம்கைக்
கொண்ட அமைச்சின் குணநலனை ஏத்திநிற்கும்
மண்டலம் எல்லாம் மகிழ்ந்து! 850

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பருவ காலங்களை உணர்ந்து உரிய கருமங்களைக் கருதிச் செய்து அரசு இன்பம் மீதூர்ந்து இனிது வாழ்ந்து வரக் குடிகளை அன்பு கூர்ந்து புரந்து குணநலங்களோடு ஒழுகி வருகிற மந்திரியை உலகம் முழுவதும் உவந்து புகழ்ந்து போற்றும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவன் வாழ்வு செழித்து வர வேண்டுமானால் அவன் காலத்தைக் கணித்து நோக்கிக் கருமம் புரிந்து வர வேண்டும். பொழுதை எவன் பழுதாய்க் கழிய விடுகிறானோ அவன் இழுதையாய் இழிந்து கழிகிறான். அதனை நாளும் நன்கு பயன் படுத்தி வருகிறவன் வாழ்நாளை எங்கும் வளம்செய்து வருகிறான்.

நாட்டு நலம் நாடி எவ்வழியும் செவ்வையாய் அரச காரியங்களை ஆற்றி வருகிற அமைச்சன் ஒவ்வொரு நிமிடத்தையும் உரிமையோடு கருதி ஒழுகி வரவேண்டும். காலம் கருதி வருகிற அளவு கருமங்கள் நன்கு கைகூடி நலமாய் வருகின்றன.

உரிய பருவங்களை ஊன்றியுணர்ந்து வினை செய்கின்றவன் அரிய பல காரியங்களை எளிதே முடித்துக் கொள்ளுகின்றான்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்! 483 காலமறிதல்

காலத்தைக் கருதியுணர்ந்து தக்க சாதனங்களோடு செய்யின் முடியாத காரியம் யாதும் இல்லை; எல்லாம் இனிதே முடிந்து இன்பம் தரும் எனக் தேவர் இங்வனம் குறிக்கிருக்கிறார்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

சீலம் அல்லன நீக்கிச்செம் பொன்துலைத்
தாலம் அன்ன தனிநிலை தாங்கிய
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணுமுண்(டு) ஆகுமோ? 19

- மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

நடுவு நிலைமையோடு எதையும் ஆராய்ந்து அரசர்க்கு ஆவன செய்யும் அமைச்சர் காலத்தைக் கண்ணாகக் கொண்டு காரியம் புரிவர் என வசிட்ட முனிவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

நேரிசை வெண்பா

நாள்கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்றாய
கோள்கூட்டம், யோகம், குணனுணர்ந்து, - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும்,-ஐந்தும் உணர்வான்நாள்
பெற்றானேல், கொள்க, பெரிது! 43 சிறுபஞ்சமூலம்

நாள், முகூர்த்தம் முதலிய காலக் கூறுகளைக் கருதி நோக்கி உறுதியோடு காரியம் செய்க எனக் காரியாசான் இப்படிக் கூறியுள்ளார். உரிய நேரம் இனிய சாரமாய் உதவி புரிகிறது.

இன்னிசை வெண்பா

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட் டாக்கறக்கு மாறு! 77 பழமொழி நானூறு

கன்று குடிக்கும் பொழுது பசுவினிடமிருந்து பாலைக் கறந்து கொள்ளுதல் போல் உரிய சமயம் பார்த்துக் கருமம் புரிக என மூன்றுறையரையர் இவ்வண்ணம் மொழிந்துள்ளார். பருவத்தில் செய்து கொள்ளுகிற கருமம் உருவத்தில் ஒளிபெற்று உயர் பலன்களை அருளுகிறது. காலத்தைக் கருதி வருகிறவன் கரும வீரனாய் எவ்வழியும் பெருமை மிகப் பெறுகிறான்.

அரிய கருமங்களை முடித்துப் பெரிய மகிமைகளை அருளுதலால் உரிய காலத்தை மேலோர் உணர்ந்து போற்றி வருகிறார்.

The great rule of moral conduct is, next to God, to respect time. - Lavater

'கடவுளுக்கு அடுத்தபடியாய்க் காலத்தை மதித்துப் போற்றுவது நீதி ஒழுக்கத்தின் பெரிய நியமமாயுள்ளது” என இது உரைத்துளது; அருமையுடையது பெருமை அடைகின்றது.

As every thread of gold is valuable,
so is every moment of time. - J. Mason

காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்த தங்கத்தின் இழையாய் விலை மிகுந்துள்ளது என இது விளக்கியிருக்கிறது.

To choose time is to save time. - Васon

காலத்தைத் தேர்ந்து கொள்வது அதனை ஓர்ந்து பாதுகாப்பதாம்!

Remember that time is money. - Franklin

நேரத்தை நிறைந்த பொருளாய் நினைந்து கொள்!

Well arranged time is the surest mark of a well arranged zaind. - Pitman

ஒழுங்காக நன்கு பண்பட்ட உள்ளத்தின் உண்மையான அடையாளம் உரிய காலத்தைச் சரியாக ஒழுங்கு செய்து கொள்வதேயாம்; காலம் காண்பதில் சீலம் காண்கிறோம்;

Save your time. - Seneca.

உன் காலத்தை உரிமையோடு பேணிக் கொள்க;

Lost time is never found again. - Richard

இழந்த காலத்தை மறுபடி ஒருபோதும் காண முடியாது!

Nothing is so dear and precious as time. – Rabelais

காலத்தைப்போல் மிகவும் அருமையான பொருள் யாதும் இல்லை!

Time flies away, and cannot be restored. - Vergil

காலம் பறந்து போகிறது; அது திரும்பி வராது!

Take time when time is, for time is ay mutable. - Skelton

காலம் நிலை யில்லாதது; உள்ள பொழுதே அதனைப் பயன் படுத்துக.

I wasted time, and now doth time waste me. - Shakespeare

காலத்தை நான் வீணாக்கினேன்; என்னை அது வீணன் ஆக்கி விட்டது.

All my possessions for a moment of time! - Queen Elizabeth

என் அரச செல்வம் யாவும் ஒரு கண நேரத்துக்கு இணையாம்.

மேல் நாட்டார் காலத்தைக் குறித்துக் கருதியுள்ள நிலைகளை இவற்றால் ஓரளவு நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரு கணமும் வீணாக்காமல் பொழுதைப் போற்றித் தொழில் புரிந்து வருதலால் எல்லா வழிகளிலும் விழுமிய நிலையில் அவர் விளங்கி வருகிறார்!

பொழுதைப் பழுதாய்க் கழிய விடுபவர் பழி வறுமைகளை அடைந்து இழிவழிகளில் அழுந்தி அழி துயரங்களோடு அலமந்து உழலுகின்றனர். காலம் பேணிக் கருமம் புரிந்து வருபவர் ஞாலம் பேணி நயந்து வர மேலான நிலைகளை அடைந்து மேன்மை மிகுந்து வருகின்றார். பெற்ற நேரம் பெருமகிமை தருகிறது.

காலம் கருதி ஒழுகினால் ஞாலமும் கைகூடும் என்.று வள்ளுவப் பெருந்தகை போதித்திருத்தும் போதம் இழந்து நாடு ஏதம் அடைந்துள்ளது. பொழுது பழுது கழியின் அழுது அழிய வரும்.

ஞால மன்னர்க்குக் காலம் கண்ணென இராமனிடம் முனிவர் விநயமாய்க் கூறியது அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் அதனைப் பேணி ஒழுகின் உலகம் உயர்நிலையடையும் என்று கருதியேயாம். இராம காவியத்தில் அரசியல் முறைகள் அதிசய நிலைகளில் வந்துள்ளன. யாவும் உறுதியாய்க் கருதி உணரவுரியன.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

உமைக்கு நாதற்கும் ஓங்குபுள் ஊர்திக்கும்
இமைப்பில் நாட்டமோர் எட்டுடை யானுக்கும்
சமைத்த தோள்வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே! 15

- மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

அரசன் திரிமூர்த்திகளைப் போல் ஆற்றல் படைத்திருந்தாலும் அமைச்சர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு உரிமையோடு நடப்பதே அதிசய ஆற்றலாம் என இது குறித்துள்ள்து.

அமைச்சரை முன்னோர் என்னவாறு எண்ணி மதித்துள்ளனர் என்பதை இதனால் உன்னியுணர்ந்து கொள்ளுகிறோம்.

மன்னர்க்கு மதிநலம் கூறி ஆட்சியை மாட்சியாய் நடத்தியருளுதலால் இன்னவாறு அமைச்சர் இசைபெற்று வந்துள்ளார்.

இறைவன் அமிசமாய் மதுரையில் அமர்ந்து இந்நாட்டை ஆண்டு வந்த சோமசுந்தர பாண்டியன் தமது அருமைத் திருமகனிடம் அரச பதவியைக் கொடுக்கும் பொழுது சுமதி முதலிய அமைச்சர்களை ஆதரவாக அமைத்தருளினார். அவ்வமயம் அவரை நோக்கி இம்மன்னர் பெருமான் உரைத்த மொழிகள் ஆட்சியாளர்க்கு அருள் ஒளிகளாய் நேரே காட்சியளித்தன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

சூட்சி வினையிற் பொன்னனைய சுமதி தன்னைத் தொன்னூலின்
மாட்சி யறிஞர் தமைநோக்கி வம்மி னிவனைக் கண்ணிமைபோற்
காட்சி பயக்குங் கல்விபோற் காப்பீ ரிதுநுங் கடனிம்மண்
ஆட்சி யிவன தென்றிளைய வரியே றனையான் றனைநல்கா! 63

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

வெய்யவேற் காளை யன்னான் றன்னையும் வேறு நோக்கி
ஐயவிவ் வையந் தாங்கி யளித்தன நெடுநா ளிந்த
மையறு மனத்தார் சொல்லும் வாய்மையா றொழுகி நீயுஞ்
செய்யகோன் முறைசெய் தாண்டு திருவொடும் பொலிக வென்றான்! 64

- வளை செண்டு கொடுத்த படலம், மதுரைக் காண்டம், திருவிளையாடல் புராணம்

மந்திரிகளைக் குறித்து வந்துள்ள இந்தக் கவிகள் இங்கே சிந்திக்கத் தக்கன; கண்போல், கல்விபோல் காப்பீர்! இது நும் கடன் என அமைச்சரிடம் அரசை ஒப்பித்திருக்கும் முறை உய்த்துணரவுரியது. ஆட்சி இனிது நடந்து வருவது அமைச்சரது ஆதரவினாலேயாம்; ஆதலால் அவரது மாட்சி இவ்வாறு செவ்வையாய்த் தெரிய வந்தது. மகிபதி மதியூகியால் மாண்புறுகிறான்.

குடிசனங்கள் உவந்து வாழவும், கொற்றவன் உயர்ந்து திகழவும் எவ்வழியும் உய்த்துணர்ந்து உரிமையோடு ஆற்றியருளுவது மந்திரிகளின் மரபான கடமையாம். அவருடைய மதியூகமும் வினையாண்மையும் நாட்டுக்கு நலம் புரிந்து வருதலால் வேந்தன் அவரை விழுமிய துணையாய் விழைந்து பேணி வருகின்றான்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

அளவி லாற்றலுந் திறனுநல் லரும்பெறற் கல்வி
விளைவு ஞானமுங் கிடைத்தனர் மீனவற் கினிமேல்
வளைவி லாதகோ லமைச்சராய் வளம்பல பெருக்கிக்
களைவில் பாசநீத் தெம்பெருங் கணத்தவ ராவார் 7

கலித்துறை
(மா மா புளிமாங்கனி மா மா)

நல்லா பாலி னறுந்தேன்கலந் தென்னப் பன்னூல்
வல்லா ருமாகி மதிநுட்பரு மாகிச் சோர்வில்
சொல்லா லடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப்
பல்லார் பிறர்சொற் பயனாய்ந்துக வரவும் வல்லார் 14

மறத்தா மவேலான்* மனக்கொள்கைதந் நெஞ்சுள் வான
நிறத்தா டிநீழ லெனத்தோற்றநி றுத்து மற்ற
தறத்தா றெனிலாற் றுவரன்றெனி லாக்க மாவி
இறத்தான் வரினு மனத்தானுமி ழைக்க வெண்ணார் 17

- பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம், கூடற் காண்டம், திருவிளையாடல் புராணம்

இராசராசன் என்னும் பாண்டிய மன்னனிடம் மருவியிருந்த மந்திரிகளை இவை குறித்துள்ளன. குண நீர்மைகளையும் மதிமாண்புகளையும் கூர்ந்து நோக்குவோர் அமைச்சின் சீர்மைகளைத் தேர்ந்து கொள்வர். சீரிய யூகிகளைப் பேணி அரசன் ஆளவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-21, 10:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே