ஒரு சின்ன தவறு, இல்லை இல்லை பெரிய தப்பு

நான் கேட்டேன் 'அமெரிக்கா போக விசா எடுக்கணும், எங்கே போகணும்?'
அவர் சொன்னார் 'அமெரிக்கா எம்பஸி'
நான் சொன்னேன் " அப்போ நீங்களும் அங்கே போக வேண்டியது தானே ?
அவர் சொன்னார் " நான் எதுக்கு அங்கே போகணும். எனக்கு அமெரிக்கா எல்லாம் பிடிக்காது"
நான் சொன்னேன் " நீங்க தானே சொன்னேங்க அமெரிக்கா உங்க பசின்னு"
அவர் சொன்னார் ' அட நீ ஒண்ணுப்பா, நான் அமெரிக்க எம்பசி என்றது என் பசி இல்லை, நம் ஊரில் இருக்கும் அமெரிக்க அலுவலகம்"
நான் சொன்னேன் " ஓ, அப்படியா, மன்னிக்கணும்"
அவர் கேட்டார் " யாரை"
நான் சொன்னேன் ' என்னை தான்'
அவர் " ஏன் உன்னை மன்னிக்கணும். நீ என்ன தப்பு பண்ணே ?
நான் " எம்பசி என்பதை என் பசி என்று தப்பாக நினைத்து விட்டேன்.
அவர் " அதுக்கு நான் என்ன செய்வது. நீ தவறாக நினைத்து விட்டாய். ஆனா தப்பு ஒண்ணும் நீ பண்ணவில்லை"
நான் " சரி சார், நான் தப்பாக நினைத்து தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க"
அவர் " நீ தவறுதலாக தப்பாக புரிந்து கொண்டாய். ஆனா தப்பாக ஒண்ணும் தவறாக நினைக்க வில்லையே. ஆகையால் நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை"
நான் " நான் மன்னிப்பு கேட்கலைன்னா நீங்க தவறாக எண்ணிவிடுவீர்கள் என்று தான் நான் மன்னிப்பு கேட்டேன்"
அவர் " நீ ஒண்ணுப்பா. நீ தப்பு ஒண்ணும் பண்ணவில்லை பின் நான் ஏன் தவறாக நினைக்கவேண்டும் ?
நான் " உங்களை பொறுத்தவரையில் நான் தப்பு பண்ணவில்லை. ஆனால் என் மனசாட்சி சொல்லுது நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று"
அவர் " இதோ பாரு. மனசுன்னு இருந்தா மனசாட்சி இருக்கத்தான் செய்யும். எப்படி வயிறு இருந்தா பசிக்குது அப்படி"
நான் " உங்களுக்கு இப்போ பசி இருக்கா?
அவர் " உன்கூட பேசுவதற்கு முன் இல்லை. ஆனா இப்போ பசிக்குது"
நான் " வாங்க சார், அமெரிக்கா எம்பசிக்கு போய் உங்க பசி என் பசி ரெண்டையும் தீர்த்துக்கிடலாம்"
அவர் " என் பசியை தீர்க்க என் மனைவி இருக்கிறாள். தப்பாக புரிந்து கொள்ளாதே. எனக்கு சமைத்து போட மனைவி இருக்கிறாள். நான் வீட்டுக்கு போய் நல்ல சுவையான உணவை சாப்பிடுவேன்"
நான் " ஏன் சார் அப்போ ஹோட்டல்ல நல்ல இருக்காதுன்னு சொல்லுறீங்களா?
அவர் " அட நீ ஒண்ணு ,தப்பா புரிஞ்சிகிட்டே. ஹோட்டல்லயும் நல்லாத்தான் இருக்கும். ஆனா எல்லா ஹோட்டல்லேயும் சுவை இருக்காது. என் மனைவி போல் உன் மனைவி சமைப்பாளா, தெரியாது"
நான் " எனக்கும் தெரியாது. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை சார்."
அவர் " ஓ , தவறாக நினைக்கவேண்டாம். உன் முகத்தை பார்த்தால் கல்யாணம் ஆனவன் போல் தெரிந்தது. அதனால் தான் கேட்டேன்"
நான் " நீங்க ஒண்ணும் தவறாக நினைக்க வேண்டாம் சார். எனக்கு திருமணம் ஆகிவிட்டது?
அவர் " அப்போ நான் நினைத்தது ஒண்ணும் தப்பு இல்லை"
நான் " நீங்கள் தப்பாக நினைக்க வில்லை ஆனால் தவறாக சொன்னீர்கள்"
அவர் " நான் சரியாகத்தான்பா நினைத்தேன். உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது."
நான் " பார்த்தீங்களா மறுபடியும் தவறாக சொல்கிறீர்கள். எனக்கு கல்யாணம் ஆகவில்லை, திருமணம் தான் நடந்தது"
அவர் " ஏம்ப்பா வேடிக்கை பேசறே திருமணம் கல்யாணம் எல்லாம் ஒண்ணுத்தாம்பா"
நான் " அதெப்படி சார். திருமண அழைப்பிதழ் என்று தான் நாங்கள் பத்திரிகையில் அச்சடித்தோம்"
அவர் " அடடா பாவம் பத்ரியை ஏன் அடித்தீர்கள்?
நான் " யாரையும் அடிக்கவில்லை சார். பத்திரிகை அச்சடித்தோம் என்றுதான் சொன்னேன்?
அவர் " மன்னிச்சுக்கோப்பா. என் காதில் பத்திரிக்கை அச்சடித்தோம் என்பது பத்ரியை அடித்தோம்' என்று விழுந்தது
நான் " எனக்கு யாரையும் அடிக்கும் வழக்கமில்லை சார். அதை போல யாரையும் காபி அடிக்கும் பழக்கமும் இல்லை"
அவர் " ரொம்ப ஆச்சரியமா இருக்குப்பா. காபி சாப்பிடாமல் இருக்கும் நான்காவது மனிதன் நீதான்."
நான் " நான் அந்த காபியை சொல்லவில்லை. மற்றவர்கள் செய்வதை போல் நான் செய்வதில்லை."
அவர் " மத்தவங்க செய்யாதது என்னப்பா நீ செய்வது ?
நான் " அப்படி இல்லை சார், நான் எதையும் என் பாணியில் தான் செய்வேன். மத்தவங்க காபியை டபராவில் ஊத்தி குடிச்சா நான் அப்படியே டம்பளரிலிருந்து குடிப்பேன். மத்தவங்க ஆரிய உணவை சாப்பிட்டா நான் சூடாகத்தான் சாப்பிடுவேன். அதைப்போலவே சூடும் சொரணையும் கூட எனக்கு கூடவே அவர் " எனக்கும் அப்படித்தாம்ப்பா,கல்யாணத்துக்கு முன்னால். இப்போ அதெல்லாம் ஒண்ணும் இல்லை "
நான் " சார், நாம ரொம்ப நேரமா தெரிஞ்சவங்க மாதிரி பேசறோமே, நீங்க எங்கே இருக்கீங்க"
அவர் " இப்போ உன்னுடன் இங்கே தாம்பா இருக்கேன்"
நான் "அதில்லை சார், உங்க வீடு எங்கேன்னு கேட்டேன்"
அவர் " அதென்னப்பா உங்க வீடு, நம்ம வீடு எங்கேன்னு கேளு. நாமதான் ரொம்ப நெருங்கி பழக ஆரம்பித்து விட்டோமே."
நான் " சரி சார், நம்ம வீடு எங்கே இருக்கு?
அவர் " நம்ம வீடுன்னு சொல்லிட்டு எங்கே இருக்குன்னு கேட்கிராயப்பா. சும்மா ஒரு நகைச்சுவைக்கு தாம்பா சொன்னேன். நான் இருப்பது ரங்கராஜபுரம் ஏரியாவில்."
நான் " அட நானும் அங்கே தான் இருக்கேன். எந்த தெருவில் சார்?
அவர் " விஸ்வநாதபுரம் மெயின் தெருவில்"
நான் " அட நானும் அதே தெருதான் சார். வீடு நம்பர் என்ன ?
அவர் " பழைய நம்பர் 144 / 23 , புது நம்பர் 23 /144 "
நான் " அப்படின்னா எங்க வீட்டில் வாடகைக்கு இருப்பவரா நீங்க?
அவர் " அட உங்க பெரு நல்ல தம்பி, சரிதானே?
நான் " ஆமாம் சார், நீங்க பெரிய நாயகம் தானே?
அவர் " ஆமாம் ஆமாம் நல்ல தம்பி. ஆமாம் உன்னை உன் வீட்டில் நான் பார்த்ததே இல்லையே. உன் சம்சாரத்தை தான் அடிக்கடி பார்க்கிறேன்"
நான் " நீங்க பார்க்கிற பொண்ணு பார்க்க அழகாத்தான் இருப்பாங்க. ஆனா அது என் வீட்டில் வேலை செய்பவள். என் மனைவி டெலிவரிக்கு ஊருக்கு போய் ஒரு வருஷம் ஆச்சு"
அவர் " என்னப்பா எனக்கு காயும் ஓடலை காலும் ஓடலை. நீயும் அவளுடன் கொஞ்ச நாள் ஊரில் தங்கினாயா?
நான் " நான் வேலைக்காரி ஊருக்கு போனதே இல்லை சார்"
அவர்" வேடிக்கை மனுஷம்பா நீ. நான் கேட்டது உன் மனைவியுடன் அவள் ஊரில் தங்கவில்லையா என்று. ஏன் இவ்வளவு நாள். வளைகாப்பு எப்போ? டெலிவரி எப்போ?
நான் " டெலிவரி ஆகியே ஆறு மாசம் ஆயிடுச்சி"
அவர் " பின்னே எவ்வளவு நாளா அவங்க பொறந்த வீட்டிலே இருப்பாங்க. போய் ரெண்டு கொழந்தையையும் கூடி வாப்பா"
நான் " எனக்கு ஒரு குழந்தை தான் சார் பொறந்தது. ரெட்டை குழந்தை இல்லை"
அவர் " நீ ஒண்ணுப்பா, ஒண்ணு உன் குழந்தை இன்னொண்ணு என் குழந்தை, அதாவது உன் மனைவி "
நான் " ஆஹா, அவளை பார்க்காமலே எவ்வளவு பாசம் உங்களுக்கு"
அவர் " ஆமாம்பா, எல்லாம் வாடகை பாசம் தான்"
நான் " அதென்ன சார், வாடகை பாசம்"
அவர் " இப்போ கொஞ்சம் பண முடையாய் இருப்பதால், இன்னும் மூன்று மாசம் நான் பாதி வாடகை தான் தருவேன்"
நான் " அப்படி என்றால், மீதி வாடகை?
அவர் " அதான் சொன்னேனே, அது வாடகை பாசத்தில் அடங்கி விடும்"
நான் " உங்களுக்கு பண முடை என்றால் மூன்று மாதம் கழித்து வாடகை பணம் தாங்க"
அவர் " ஆகா ஆஹா, எனக்கு பாதி வாடகை பாசம் என்றால் உனக்கு முழு வாடகை பாசம். எவ்வளவு நல்ல மனம் உனக்கு, சின்ன தம்பி. இன்னியிலருந்து உன்னை நான் பெரிய தம்பின்னுதான் கூப்பிடுவேன்."
நான் " இப்போ நாம் இருவரும் நம்ம வீட்டிலேயேதான் இருக்கிறோம். அமெரிக்கா எம்பசிக்கு நாம எப்ப போலாம்?
அவர் " என் பசிக்கு என் வீட்டில் ஆள் இருக்கு. இன்னிக்கு நீயும் என்னுடனேயே சாப்பிடலாம் பெரிய தம்பி"
நான் " உங்க பெரிய மனசுக்கு நன்றி. இன்னிக்கு ஏன், இன்னும் மூணு மாசம் உங்கவீட்டிலேயே சாப்பிடுகிறேன்."
அவர் " எங்க வீட்டு சாப்பாட்டை நீ தினமும் தின்ன முடியாதுப்பா."
நான் " ஹோட்டல் சாப்பாட்டுக்கு உங்க வீட்டு சாப்பாடு நிச்சயம் நன்றாகவே இருக்கும்"
அவர் " தப்பா நினைக்காதே பெரிய தம்பி. நாங்களே வெளியிலிருந்துதான் சாப்பாட்டை தருவிக்கிறோம்"
நான் " அட, நீங்க சின்ன தம்பி மெஸ்ஸிலிருந்து தானே சாப்பாடை தருவிக்கிறீங்க?.
அவர் " ஆமாம் பெரிய தம்பி, சரியாக சொன்னாய்"
நான் " என்னுடைய ஹோட்டல்தான் சார், சின்ன தம்பி மெஸ்"

பின் குறிப்பு :
மெஸ் சாப்பாடுக்கு பெரிய நாயகம் ஆறு மாசமா பணம் தரவில்லை. கேட்டால், அவர் என் தகப்பனார் போல, அப்புறம் பணம் எதுக்கு தரணும்னு கேட்கிறார். இன்னொரு பக்கம் வாடகை பணமும் வரவில்லை. என்னை பார்த்தா " என் குழந்தை எப்போது ஊரிலிருந்து வருவாள்னு கேட்கிறார்" இவரை என்ன செய்ய? நீங்களே சொல்லுங்க

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Aug-21, 5:03 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 325

மேலே