இயற்கையிடும் பாலம்

இயற்கையிடும் பாலம்
========================
(சர்வதேச இளைஞர் தினத்துக்காய்..)
*
விதியெனவே இருப்பதற்கே
விரும்புவதை விட்டு – நீ
விண்வரையில் முட்டு – புது
விடுதலையை எட்டு – உனை
விழித்தெழவே அழைக்கிறது
விடிகாலை மொட்டு
**
நதிஎனவே தவழ்ந்திடவே
நடைபழகு நன்று – நீ
நடமாடும் குன்று – பிறர்
நகைப்பதற்குள் சென்று – ஒரு
நடைப்பிணமாய் இருப்பவர்க்கு
நலம்புரிவாய் இன்று.
**
பிணியெனவே மனையினிலே
படுத்துறங்கும் கேடு – உனை
பிடித்தாட்டும் பீடு – அதன்
பிடிவாதத் தோடு – நீ
பிடிவாதம் பிடிக்காமல்
பிரிந்தெழுந்து ஓடு.
**
கணிதமென்றே வாழ்வதையே
கருத்தினிலே வைத்து – ஒரு
கருங்கல்லால் நைத்து – அதை
கண்டபடிசி தைத்து – உன்
கனவுகளைத் தொலைத்துவிட்டு
கண்நீரைவி தைத்து.
**
கதிருடனே எழுவதுவே
கதிரவனின் காட்சி – அது
காலைவர சாட்சி – அதில்
கலைநயங்கள் ஆட்சி – தினம்
காண்பதற்கு நீயெழுந்து
கைதொழுவாய் மீட்சி
**
எதிரினிலே வருகிறதே
இளைஞர்களின் காலம் – இதில்
எழில்கொஞ்சும் கோலம் – நீ
எழுதிவிடும் சீலம் – தனை
எந்நாளும் வளர்த்துவிடின்
இயற்கையிடும் பாலம்!
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Aug-21, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே