ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ்
கூத்தரின் பாடல், தேவியின் சினக் கனலுக்கு எண்ணெய் வார்த்தது போல் இருந்தது; அவர்மீது மேலும் அளவற்ற சினங்கொண்டாள் அத்தேவி; 'ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்று கூறியவாறே கதவின் மற்றொரு தாழைப் பலமாக இட்டாள்; அதுகண்ட கூத்தர் பெரிதும் திகைத்தார். அரசியின் சினம் தம்மீதும் பாய்ந்து பெருகியதை அரசனுக்குக் கூறினார்; இதற்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்று குலோத்துங்கன் கூர்ந்து நோக்கினான்; பாண்டி நாட்டுப் பைந்தமிழ்ப் புலவர் புகழேந்தியாரைச் சிறையிலிட்டதே இதற்குக் காரணமாகும் என்று துணிந்தான். விரைந்து சென்று சிறைக் கோட்டத்தைத் திறந்து புகழேந்தியாரைக் கண்டு வணங்கினான்; அறியாது செய்த பிழையைப் பொறுக்கு மாறு அன்புடன் வேண்டினான்; தேவியின் சினத்தைத் தணித்து அவள் மனத்தைத் திருத்துமாறு புலவரை வேண்டிக் கொண்டான்;
புகழேந்தியார் சிறை விடுதலை
புகழேந்தியாரும் அகமகிழ்ந்து சோழன் வேண்டுகோளுக்கு இசைந்தார்; புகழேந்தியார் விடுதலை பெற்று அரசியைக் காணவரும் செய்தியைத் தோழியர் அரசிக்கு அறிவித்தனர்; அது கேட்டுப் பெருமகிழ்வுற்ற கோப்பெருந்தேவியாகிய தியாகவல்லி ஆசிரியரின் வரவை எதிர்நோக்கி அந்தப்புரக் கதவின் அருகில் வந்து நின்றாள். அங்கு வந்த புகழேந்தியாரும் தம் அருமை மாணவியாகிய அரசியின் செவியில் விழுமாறு அமுதனைய பாடல் ஒன்றைப் பாடினர்!.
கட்டளைக் கலித்துறை
இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை ஏந்தியபொன்
குழையொன் றிரண்டு விழியணங் கே!கொண்ட கோப(ம்)தணி;
மழையொன் றிரண்டுகை மானா பரணன்நின் வாயி(ல்)வந்தால்
பிழையொன் றிரண்டு பொறாரோ? குடியில் பிறந்தவரே!
- புகழேந்தியார்
நூலைப் பிளந்தாற் போன்ற நுண்ணிய இடையினையும், கனகக் குழை அணிந்த காதளவு நீண்டுள்ள கண்களையும் உடைய தெய்வமகள் போன்ற தேவியே! நீ கொண்ட கோபத்தை நீக்குவாய்; மழையைப் போலக் கொடை வழங்கும் இரு கைகளையும் மானமாகிய அணிகலனையும் உடைய மன்னர் பெருமான் நின் அந்தப்புர வாயிலில் வந்து நின்றால் அவன் செய்த பிழைகளைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமன்றோ! அதுதானே உயர்குடியிற் பிறந்த கற்புடைய மாதரின் கடமையாகும்!