அர்ப்பணிப்பு கவிதைகள்

என் கவிதையின்
மீதெல்லாம்
உனக்கு துளியும்
அக்கறையில்லை
என்கிறாய்


எதன் பொருட்டு?

உன் கண்ணாடி
விழிகளில்
கோபம் ஒளி வீச
சொல் பிணைந்து
வெளியேற்றும்
என் அக உருக்கத்தில்
வழியாத நின் முகம்
இறுகிய
பாறையென
உறைந்திருக்க

கவிஞனாக வாழ்வது
சகவாழ்வுக்கு உகந்ததல்ல
இயல்புகளை
பாவனையாய்
மாற்றிடும் உன் பேனா
ஒரு நாள்
என் தீண்டலையும்
காகிதத்தில்
உயிர்ப்பிக்கும்
இதோ நீ விரும்பும்
பாரதியும்
ஒரு வகையில்
குடும்பத்தை கரையேற்றாமல்
பாட்டினை
வடித்து மடிந்த
பொறுப்பற்ற
மகா..கவி தானென்றாய்

பேரன்பே
உன் கண்ணோட்ட
பிழைகளில்
பாரதியும்
பிழைக்கவில்லையா

பார்
என்னை
சதா சுழலும்
வாழ்வில்
பொருள் தேடி
போகம் அனுபவித்து
இல்லறம் கூடி
உயிர்கள் தருவித்து
பொறுப்பு
வளர்ப்பு
என காலம் கழித்து
அசதியில் உடல் தோய்ந்து
மரண வாசலுக்காக விழிகள் தட்டி
காத்திருப்பது தான்
உன் விருப்பமான சக வாழ்வா?

பாரதியை நீ
இத்தனை இகழ்வாய்
என நான் நுனியும் எண்ணவில்லை
தன் வறுமையிலும்
கலங்காது
வாழ்க்கையை துணிந்து
எதிர்த்தவர்
இடர் வரினும்
கலங்காத அவர் உள்ளத்தை
குடும்ப அக்கறையற்றவர்
என பாரம் உரைக்கிறாய்

அர்ப்பணிப்பை
குடும்பத்திற்காக
மட்டும் கொடுப்பது தான்
உன்னளவில்
பொறுப்புணர்வா

அவ்வாறெனில்
இப்பிரபஞ்சமே
என்னை
வளர்க்கும்
குடும்பமடி

என் கவிதையின்
பால் பெருகும்
ஆகிருதியான
அன்பனைத்தையும்
ஆதரவற்ற
இவ்வுலகுக்கு
அளவின்றி
கொடுத்திடுவேன்

நீ என்னை
வெறுப்பினும்
சரியன்பே!

எழுதியவர் : S. Ra (19-Aug-21, 11:00 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 294

சிறந்த கவிதைகள்

மேலே