ஆசை

ஆசை
🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏
கம்பனம்(அசைவு) அற்றவனாய் கடவுளைப் படைப்பித்து
கருவறையில் அடைக்கின்றோம் வெளிப்புறமாய்க் கதவடைத்து...

பிறந்தை(பிறவி)யில் வெற்றறிவாய் பெற்றெடுத்த குழந்தையை
பணம் என்ற காகிதமே பரிந்துரைக்கும் தப்பிளைக்க...

சேகு(குற்றம்)கள் செய்கையில் சிற்சிறு மனஉறுத்தல்
செய்தபின் கச்சிதமாய் காரணத்தை வலியுறுத்தல்

கொம்மை(இளமை)யில் கோடிகளை கொள்ளையில் ஈட்டிட்டு
கம்மியாய் கடவுளுக்கு உண்டியலில் காட்டிட்டு...

துளக்கத்தில்(கலக்கத்தில்) சிற்சிறு துன்பமா ? கோரிக்கை..
வழக்கமாய் மறுபடியும் வழங்குவான் காணிக்கை...

படிறு(பாவம்)கள் செய்வதால் மடிகளே கனமுறும்
விடியலைத் தேடியே வாழ்க்கையும் நிறைவுறும்...

வாமங்(தீமை)கள் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கித்தான் - உன்
வாழ்க்கையின் மதிப்புகளை ஆண்டவன் பதிப்பிப்பான்...

உழைத்தவன் பணமென்றும் உண்டியல் ஞெமிராது(நிறையாது)
நிலைத்த அவன் பசிநீங்கி நிமிர்வதில்லை வயிர்ச்சுருக்கம்...

மேத்தியம்(தூய்மை) என்பது மேனிக்கு மட்டுமல்ல
சாத்தியம் ஆகனும் சகலருக்கும் மனதிற்குள்...

தரங்கெட்டு தறிகெட்டு வாழ்தலைத் தடுக்கவே
புரங்(கோயில்)களில் கடவுளை புகுத்தினான் கைகூப்ப...

புமான்(ஆன்மா)கள் உடல்நீங்கி போகும்போது தணிக்கையில்
புடலங்காய் கணக்காகும் நீதந்த காணிக்கை...
மனிதா....... .
நுங்குதல்(உண்ணுதல்) நிகழ்கையில் நோக்குங்கள் காகத்தை
பங்குதல் என்றொரு பாடத்தை கற்பிக்கும்...
🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🏼

எழுதியவர் : க.செல்வராசு (30-Aug-21, 6:27 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 72

மேலே